Friday, December 28, 2007

ஒன்றில் நான்கு ( 4 in 1)

கல்லூரி – பாலாஜி சக்திவேலின் படம் என்பதால் கொஞ்சம் அதிகமான எதிர்பார்ப்போடு போனேன். நாயகியைத் தவிர மற்ற அனைத்து நடிக, நடிகையர்களும் புதுமுகமாம். ஆனால் எல்லோருமே நம்மோடு பழகிய பழைய முகங்கள் போலவே இருப்பது இயல்பு. ஏழ்மைப் பின்னணியில் இருந்து கல்லூரிக்குப் படிக்க வரும் அந்த பள்ளி கால நண்பர்களை, தம் வீட்டுத் துயரங்களை மறந்தும் சிரிக்க வைக்கிறது அவர்களுக்கிடையேயான நட்பு. பயணம், உணவு, துயரம், நெருக்கடி என எல்லா சூழலிலும் இணைபிரியாத அந்த நட்பு வட்டத்துக்குள் இழுக்கப்பட்டு அவர்களுக்குள் ஒருத்தியாக மாறுகிறாள், பணக்கார பின்னணியுடன் வரும் நாயகி. நாயகியாகவும் மற்ற பாத்திரங்களைப் போலவே இயல்பான ஒரு தமிழ்முகத்தையே நடிக்க வைத்திருந்தாலும் இந்தத் திரைப்படம் இப்போதிருக்கும் தரத்திலிருந்து எந்தவிதத்திலும் குறைந்திருக்காது என்பது என் எண்ணம். நட்புக்கும் காதலுக்கும் இடையில் நாயகனும், நாயகியும் தவித்துக்கொண்டிருக்க, படம் கல்லூரி காலநிகழ்வுகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. நாயகி தோழியிடம், நாயகன் மீதான காதலை வெளிப்படுத்துகையில் பொசுக்கென கிளைமேக்ஸ் வந்து கதை முடிகிறது. ‘காதல்’ படத்தின் கிளமேக்ஸ் காட்சியில் அழுகை ஓவர்டோசாக இருந்தது. அதனைத் தவிர்க்க நினைத்தோ என்னவோ இதில் கிளைமேக்ஸில் அந்த காட்சிக்குரிய அழுத்தம் இல்லாமலிருப்பதாக எனக்குப் பட்டது. தனித் தனியாக எல்லாம் சரியாக இருப்பது போலத் தோன்றினாலும் ஏதோ ஒன்று குறைவது போல இருக்கிறதே என்று யோசிக்கும்போது, நண்பன் சொன்னான் – ‘மச்சான்… மொதல்ல கிளைமேக்ச முடிவு பண்ணிட்டு, அப்புறம் கதையெல்லாம் யோசிச்சிருப்பாங்களோ?’ இருக்கலாம். படம் முடிந்த பிறகும் நினைவில் நிற்கும் கதாபாத்திரங்கள் - கயல்விழியும், நாயகனின் தங்கையும்.


*

பில்லா – பூவெல்லாம் கேட்டுப் பார் படத்திற்குப் பிறகு இதுதான் திரையரங்கம் சென்று பார்க்கும் அஜித்தின் படம். பில்லாவாக வரும் அஜித் நடந்தார், சூட்கேஸ் மாற்றினார், சுட்டார், கூலிங் கிளாஸ் கழற்றிப் பேசினார், மீண்டும் நடக்க ஆரம்பித்து விடுகிறார். பில்லாவாக மாறும் வேலு வந்தபிறகுதான் படத்தில் கொஞ்சம் கலகல. அதிலும் பிரபுவை அவர் கலாய்ப்பது கலகலகல. படம் ரிச்சாக வந்திருக்கிறது என்று வலைப்பதிவில் படித்திருந்தது உண்மைதான். பிரம்மாண்டம் என்ற பெயரில் ஒரு செட்டுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்து எடுப்பதற்குப் பதில் இப்படி எடுக்கலாம். நயனைப் பற்றி எதுவும் சொல்லப் போவதில்லை; வெள்ளித் திரையில் காண்க :) முக்கியமாக பின்னணி இசையும், ஒளிப்பதிவும் நன்றாக இருந்தன. கடைசி வரை படத்தில் நமீதாவை எதற்கு சேர்த்தார்கள் என்று புரியவில்லை. மொத்தமாகப் பார்த்தால் கொடுத்த காசுக்கு பாதகமில்லை.

*

நீலம் – சுனாமி குறித்து அறிவுமதி அவர்கள் இயக்கிய குறும்படம். இப்போதுதான் பார்த்தேன். பத்து நிமிடங்களுக்கும் குறைவான கால அளவில் அத்தனைப் பெரிய இழப்பின் வலியைச் சொல்லியிருக்கிறார். ஒற்றைப் பனைமரம் நிற்கும், காகம் கரையும் ஒரு கடற்கரை. கடலை நோக்கி நடந்து வரும் சிறுவன் + சிறுவனை நோக்கி வரும் கடலைலகள் என இரண்டு காட்சிகள். சோகம் அப்பிய முகத்துடன் நிற்கும் சிறுவன் கடலையேப் பார்த்துக் கொண்டிருக்கிறான். பிறகு எதனையோ கண்டு கொண்டவனாய் ஓடிப்போய் ஓரிடத்தில் மணலைத் தோண்டி உள்ளிருந்து ஒரு நண்டை எடுக்கிறான். அதனிடம் ‘எங்க அம்மாவப் பாத்தியா? நீ தான் தெனமும் கடலுக்குள்ள போயிட்டு வர்றல்ல. ஒனக்குத் தெரியும். சொல்லு எங்கம்மாவ பாத்தியா?’ என அழுகிறான். பின் மணலிலும் படுத்துக்கொண்டு மணலை அணைத்தபடி புலம்பியழுவதுடன் படம் முடிகிறது.கடலும், சிறுவனும், நண்டும் மட்டுமே நடித்திருக்கிறார்கள். சிறுவனாக அரவிந்த் பச்சானின் நடிப்பு சிறப்பாக இருந்தது. மண்ணுக்குள் புதைந்த நண்டை தோண்டியெடுத்து அதனைப் பார்த்து அவன் புலம்பியழும்போதும், மணலை அணைத்துக் கொண்டு அழும்போதும் நமக்கு துக்கம் தொண்டைக்குள் உருள்கிறது. அதற்கேற்றாற்போல் நிருவின் இசையும் சோகத்தைப் பின்னணியில் இசைக்கிறது. ஒளிப்பதிவு - தங்கர்பச்சான். சுனாமி வந்து மூன்றாண்டுகளுக்குப் பின்னும் அதன் பாதிப்பு இன்னும் இருக்கதான் செய்கிறது :(


*

மறைபொருள் – பொன்.சுதா என்பவர் இயக்கியிருக்கும் குறும்படம். வசனங்கள் ஏதுமில்லை. ஒரு வீட்டின் அறைக்குள் ஓர் இளம்பெண்ணைக் காண்பிக்கிறார்கள். குளித்துவிட்டு வந்து அலமாரியில் இருக்கும் உடைகளில் பிடித்தமான ஒன்றை வெகு நேரம் தேடியெடுக்கிறார். கண்ணாடி முன் நின்று உடையைத் தன்மேல் வைத்துக்கொண்டு நன்றாக இருக்கிறதா என பார்த்துக் கொள்கிறார். பிறகு அந்த உடையை அணிந்துகொண்டபின் கண்ணாடி முன் நின்றபடி தலைவாருகிறார். கண்மையிடுகிறார். நகப்பூச்சு பூசிக்கொள்கிறார். பவுடர் அடித்துக் கொள்கிறார். எல்லா ஒப்பனைகளையும் முடித்துவிட்டு அலமாரியிலிருக்கும் அதனை எடுத்து உடுத்திக் கொள்கிறார். இது வரை விருப்பத்துடன் அணிந்துகொண்ட உடை + ஒப்பனைகளை மறைத்தபடி திரையென விழுகிறது அந்த பர்தா. எல்லாம் மறைக்கப்பட்டு பெண்ணின் கண்கள் மட்டும் கேமராவின் பார்வையில் தெரிகின்றன. அதனுடன் முடிகிறது படம்.


*

ஒரு நினைவூட்டல் – சர்வேசனின் நச்சுனு ஒரு கதை போட்டியில் பங்கு கொண்டவர்களின் எண்ணிக்கை 57. அதற்கான வாக்கெடுப்பு மூன்று கூர்களாகப் பிரித்து சர்வேசன் வலைத்தளத்தில் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் இதுவரை பதிவான மொத்த வாக்குகள் 57 கூட தொடவில்லையாம். கதைகளை எழுதியவர்கள் + வாசித்தவர்கள் அனைவரும், நீங்கள் ரசித்த கதைக்கு மறக்காமல் வாக்களியுங்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.