Tuesday, September 04, 2007

ஐதராபாத் - கோவை - கரூர் - பழனி

கடந்த வாரத்திற்கு முந்தைய வாரம் வெள்ளிக்கிழமை கரூரில் நடந்தது எங்கள் புதுமனைப் புகுவிழா.
வியாழக்கிழமை மதியம் 1 மணிக்கு ஹைதரபாத்தில் இருந்து கோவைக்குப் புறப்பட்டேன். அது கோவை வழியாக கொச்சி செல்லும் ஏர் டெக்கான் விமானம்.
ஓணம் நெருங்கியதால் விமானத்தில் சேட்டன், சேச்சிகளின் கூட்டம்தான் அதிகமாக இருந்தது. முத்து நகரத்தை வானில் இருந்து கொஞ்சம் ரசித்துக்கொண்டிருக்கும்போது,
பணிப்பெண் டீ வேண்டுமா என்றார். தலையாட்டினேன். வெந்நீரும் , டீத்தூளும் கொடுத்துவிட்டு நகர்ந்து விட்டார் நானே கலந்து குடித்த டீ க்கு 20 ரூபாய் அதிகம்தான். கரூர் டீக்கடையில் மாஸ்டரே கலந்து கொடுக்கும் டீ, இரண்டு ரூபாய் ஐம்பது காசுதான் :)

கோவையில் இறங்கி அக்கா, அண்ணன் மகள்களுக்கு ஆடைகள் வாங்க ஸ்ரீதேவிக்கு சென்றபோது அங்கும் சேச்சிகளின் கூட்டம். ஸ்ரீதேவியில் ஓணம் வரை ஆடித்தள்ளுபடியை நீட்டித்திருந்தார்கள்.பிறகு கோவை – கரூர் பேருந்து பயணம். இரண்டாண்டுகளுக்கு முன்பு வரை கல்லூரியில் படித்த காலங்களில் மாதமொருமுறையோ இரண்டுமுறையோ பயணம் செய்த பழக்கமான பாதை. சன்னலோரத்தில் மழையை ரசித்தபடியே விகடனில் மூழ்கியிருந்தேன். காங்கேயம் வந்ததும் “வண்டி 5 நிமிசம் தாங்க நிக்கும் டீ குடிக்கிறவங்க சீக்கிரமா குடிச்சிட்டு வாங்க” கண்டக்டர் சத்தம் கொடுத்து விட்டு அவரும் டீ குடிக்கப் போய் விட்டார். கல்லூரி காலங்களில் எப்போதும் இங்கே இறங்கி ஒரு கிங்ஸும் ஒரு டீயும் வாங்கிக் கொண்டு டீ ஒரு சிப் உறிஞ்சிக்கொண்டு கிங்ஸ் ஒரு பஃப் இழுத்துக்கொள்வேன். அது ஒரு கனாக் காலம் :) அன்று இரண்டு டீ டோக்கன் மட்டும் வாங்கி இரண்டு டீயைமட்டும் குடித்து விட்டு வந்து விட்டேன். வீட்டுக்குப் போய்ச் சேர இரவாகிவிட்டது.

வெள்ளிக்கிழமை புதுமனைப் புகும்விழா எல்லாம் முடிந்து கொஞ்சம் ஓய்வு. அடுத்த நாள் சனிக்கிழமை அக்கா மகளுக்கு மொட்டையடிக்க பழனிக்குப் பயணம் அதையும் முடித்துக்கொண்டு அன்று மாலை வந்து பழைய வீட்டில் இருந்த பொருட்களைக் அடுக்கிக் கட்டிக் கொண்டிருந்தோம். நண்பர்களின் அழைப்புகள் துவங்கின.
“டேய் நீ எஸ்கேப்பாகிட்டியா?”
“என்னடா கால அட்டண்ட் பண்ற? அச்சச்சோ அப்ப உயிரோடதான் இருக்கியா”
“உனக்கு ஒன்னும் ஆகலியா? மச்சான் தப்புச்சிட்டியா?”
நக்கலோடு நண்பர்கள் நலம் விசாரித்தபோதுதான் தெரியும் ஹைதராபாத் குண்டுவெடிப்பைப் பற்றி. நான் இருப்பது ஹைதராபாத்துக்கு பக்கத்து மாவட்டத்தில் ஒரு கிராமம் அங்கெல்லாம் யாரும் குண்டுவைக்கமாட்டார்கள் என்று சொல்லி அவர்களைக் கடுப்பேத்திவிட்டு ஐதராபாத் நண்பனை அழைத்தேன். அவனோ, “நமக்கெல்லாம் ஒன்னுமில்லடா ஒருவேளை நீயும் இங்க இருந்திருந்தா குண்டு வெடிச்ச ஏரியாவுக்குதான் சுத்தப் போயிருப்போம்” என்று சொல்லி என்னைக் கடுப்பேத்தினான் :)

அன்று இரவு புதிய வீட்டில் மின்விசிறிகளை மாட்டுவதற்கு ஆட்கள் வந்திருந்தார்கள். மூன்று விசிறிகளை முடித்துவிட்டு நான்காவது மாட்டும்போது அது கொஞ்சம் புதிய மாடல் மாதிரி இருக்கவும் உள்ளே கைவிட்டு போல்ட் மாட்ட வசதியாக இல்லை. ரொம்ப நேரம் முயற்சி செய்து கடுப்பானவர் திட்ட ஆரம்பித்துவிட்டார், “ இவனுங்க புதுசா டிசைன் பண்றன்னு சொல்லி ஏசியில உட்காந்துகிட்டு கம்ப்யூட்டர்ல டிசைன் பண்ணிட்றானுங்க… நம்ம தாவு தான் தீருது… @$@#$ டிசைன் பண்ணவனையே கூட்டிட்டு வந்து நீயே மாட்றான்னு சொல்லனும்…அப்பத் தெரியும்… ஒரு நாள் முழுக்க நெம்புனாலும் ஒரு ஃபேனக் கூட மாட்ட மாட்டான்” எப்படியோ திட்டிக் கொண்டே அதை மாட்டி விட்டார். கடைசி வரைக்கும் நான் ஒரு பொட்டி தட்றவன்னு காட்டிக்கவே இல்லையே :)

ஞாயிற்றுக் கிழமை காலையிலிருந்தே பொருட்களையெல்லாம் புதியவீட்டிற்கு மாற்றிவிட்டு கரூர் பேருந்து நிலையத்திற்கு நான் வந்த போது மணி 2:30 ஆகியிருந்தது.
6 மணிக்கு எனக்கு சேலத்தில் ரயில்! சேலம் பேருந்தில் ஏறினாலும் நாமக்கல்லுக்கே சீட்டு வாங்கினேன். நாமக்கல்லில் எல்லாப் பேருந்துமே 15 நிமிடம் நிறுத்துவார்கள். அதனால் நாமக்கல்லில் இறங்கி முன்னால் செல்லும் (அப்ப மத்தவண்டிலாம் பின்னால போகுமான்னு கேட்காதீங்க) வண்டியில் ஏறிப் போய்க்கொண்டிருந்தபோது கொஞ்ச நேரத்தில் நான் கரூரில் இருந்து வந்த வண்டி எங்களை முந்திக் கொண்டு சென்றது. அதிலேயேப் போயிருக்கலாமோ என்று யோசித்தேன். ஆனால் முந்தி சென்ற வண்டி வாழைக்காய் ஏற்றி வந்த ஒரு லாரியோடு மோதி லாரி கவிழ்ந்திருந்தது. பேருந்திலிருந்தவர்களுக்கு பெரிதாக பாதிப்பில்லை என்றே நினைக்கிறேன். நல்ல வேளை நான் அதில் செல்லவில்லையென்று நினைத்துக் கொண்டது மனம். கொஞ்ச நேரத்தில் எப்படியெல்லாம் மாற்றி நினைக்க ஆரம்பித்து விடுகிறது அது!

ரயில் தர்மபுரியை நெருங்கும்போது அக்காவிடமிருந்து அழைப்பு, “குட்டி, நியூஸ் தெரியுமா பழனியில இன்னைக்கு ரோப் கார்ல ஒரு கேபின் அறுந்து விழுந்ததுல 4 பேர் எறந்துட்டாங்களாம்” எனக்கு பயங்கர அதிர்ச்சி. நாங்களும் பழனி ஏறி இறங்கியது அதே ரோப் காரில்தான். அதுவும் முதலில் நாங்களும் ஞாயிறுதான் பழனி செல்வதாக இருந்தது, நான் ரயிலைப் பிடிக்க தாமதமாகிவிடுமென்றுதான் சனிக்கிழமையன்றே போய் வந்தோம். ஐதராபாத், பழனி, நாமக்கல் னு எல்லா எடத்துலயும் எஸ்கேப்பாகிட்டே வந்திருக்கேன் :) ரயிலில் எனக்கு லோயர் பெர்த் கிடைத்திருந்தது. சைட் லோயரில் 0.1 டன் எடையில உட்காந்திருந்த ஒருத்தர் படுக்கும்போது எனக்கு மேல் இருந்த மிடில் பெர்த்தில் ஏறினார். எனக்கென்னமோ அதுதான் எமனுடைய அடுத்த அட்டெம்ட்டா இருக்குமோ என்று தோன்றியது. போன வாரம் பார்த்த எமதொங்கா தெலுங்கு படமெல்லாம் அப்போ எதற்கு ஞாபகத்துக்கு வந்ததுன்னே தெரியல. மிடில் பெர்த்த தாங்கிப் பிடித்திருக்கும் அந்த சங்கிலியைத் தொட்டுத் தொட்டுப் பார்த்தேன். நல்லா உறுதியாகதான் இருந்தது. அந்த நம்பிக்கையிலேயே தூங்கி ஒருவழியாக பத்திரமா வந்து சேர்ந்துட்டேன்! :)

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.