Thursday, May 31, 2007

ஒரு காதல் பயணம் - 10

ஒரு காதல் பயணம் - முதல் பகுதி

உன்னைச் செதுக்கியதில்
சிதறிய அழகுதான்,
வானத்தில் நிலவாய்…

இன்னும் விடியாத ஒரு முன் காலைப் பொழுது.
சந்தித்துக் கொண்ட காதலர்களைப் போல பிரிய மனமில்லாமல் காற்றும் பனியும் கைகோர்த்த படி இருக்கின்றன.
எப்போதும் விடிவதற்குமுன் நீ வரும் அந்த ஆவின் பால் கடைக்கருகேக் காத்திருக்கிறேன்.

ஒவ்வொரு நாளும் “நீ” அலங்கரித்த உன்னையேப் பார்த்து சலித்து விட்டதாம்.
”இரவு” அலங்கரித்த உன்னைப் பார்க்க தூக்கத்தை தூக்கியெறிந்துவிட்டு,

பாதையெங்கும் பார்வைகளை விரித்து வைத்துக் காத்திருக்கின்றன என் கண்கள்.
என் கண்கள் மட்டுமா?

உன் வருகைக்காக ஒவ்வொரு வீட்டு வாசலும்
கோலங்களின் மூலம் தங்களை அழகு படுத்திக் கொண்டிருக்கின்றன.

தூரத்தில் நீ வருகிறாய்.
அப்போது அந்த சாலையோரப் பூஞ்செடிகள் எல்லாம் தலை சாய்த்து உன்னையேப் பார்க்கின்றன.
மெல்ல வந்த நீ , என்னை நெருங்குகிறாய்.
முதன் முறையாய் உன்னை இரவுடையில் பார்க்கிறேன்.
என்னைப் பார்த்ததும் கலைந்திருந்த கூந்தலை சரி செய்கிறாய்.

“ ம்ம்ம்….இரு… இரு… இந்த மாதிரி உன்னப் பார்க்கதான் இவ்வளவு நேரமாக் காத்திட்டிருக்கேன்.
நீக் கெடுத்திடுவப் போலிருக்கே!”

“காலையிலத் தூங்கி வழியற முகத்தப் பார்க்கவா இவ்வளவு தூரம் வந்த?”

“கல்யாணத்துக்கப்புறம், தினமும் காலைல இந்த முகத்துல தான முழிக்கப் போறேன்…
அதான் காலைல அது எப்படி இருக்கும்னுப் பார்க்க வந்தேன்”

“பார்த்துட்டல்ல… கெளம்பு…”

“ ம்ம்ம்… இவ்வளவு தூரம் வந்து கண்ணுக்கு மட்டும் திருப்தியாப் போனா எப்படி? உதடும் துடிக்குதே…”

முறைக்கிறாய்.

“அட, கண் பாத்ததப் பத்தி உதடு சொல்லத் துடிக்குதுனு சொன்னேன்”

“சரி சொல்லிட்டுக் கெளம்பு”

உன் கண்களில் தேங்கியிருந்த தூக்கத்தை மெல்ல விரட்டினாய்

” உன் கண்ண உள் வாடகைக்கு விட்டிருக்கியா, என்ன?”

விழிக்கிறாய்.

“இல்லப் பகல்ல சூரியனும், இப்போ நிலாவும் குடியிருக்கே அதான் கேட்டேன்”

“ஏண்டா இன்னைக்குக் காலையிலேயே ஆரம்பிச்சுட்டியா?”

“சரி சரி மொத்தமாவே சொல்லிட்டுக் கிளம்பிட்றேன்…
நீப் பூசினப் பவுடரும், உதட்டுச்சாயமும் இத்தன நாளா
உன்னோட அழகையெல்லாம் கொறச்சுதான் காட்டியிருக்கு!”

சிரித்துக் கொண்டே முன்னே வந்து விழும் ஒற்றை முடியைத் தூக்கி பின்னே விடுகிறாய்.

“இதெல்லாம் முன்னாடியே பல பேர் சொல்லிட்டாங்க”

“என்னது?”

“அட, பல கவிஞர்கள் ஏற்கனவே சொன்னதுதான?”

“அதெல்லாம் அவங்கவங்க காதலியப் பத்திதான… நான் உன்னப் பத்தி சொல்றேன்”

மீண்டும் முன்னே வந்து விழும் அந்த ஒற்றை முடியைத் தூக்கி பின்னே விடுகிறாய்.

“ அருவிய யாராவது கயிறு போட்டுக் கட்டி வைப்பாங்களா? எப்பவும் இப்படியே விட்டுடலாம்ல?”

அலைபாயும் உன் கூந்தலைப் பார்த்தபடி கேட்கிறேன்.

“அப்படியே விட்டு, அருவியில யாராவது விழுந்துட்டா? அதனாலதான் கட்டி வச்சிருக்கேன்!”

மறுபடியும் முன்னே வந்து விழும் முடியை எடுக்கப் போகிறாய்.

“பொறு! பொறு! அது, நீத் தொட்டுத் தூக்கும் சுகத்துக்காக தான் திரும்பத் திரும்ப முன்னாடி வந்து விழுது!”
என சொல்லிவிட்டு என் கையால் அதை எடுத்துப் பின்னே விடுகிறேன், “இனி அது உன்னத் தொந்தரவு செய்யாது!”

“ஏன்”

“இனிமே அது முன்னாடி வந்தா, என் விரல் தான் படும்னு அதுக்குத் தெரியும்” என்கிறேன்.

கோபத்தோடு திரும்பிக் கொள்கிறது ஒற்றை முடி.

நெடுநேரமாய் உன்னைக் காணாமல், உன் வீட்டிலிருந்து உன்னைப் பார்த்து வர,
உன் பாதுகாப்பு அதிகாரி வருகிறாள்.
தெருமுனை வரை வந்தவள் என்னைப் பார்த்ததும் திரும்பிப் பார்க்காமல் ஓடுகிறாள்.
அவளைப் பார்த்து சிரித்துவிட்டு “சரி, என்னத் தேடி என் தங்கச்சி வந்துட்டா, நான் கிளம்புறேன்…சாயங்காலம் பார்க்கலாம்” என சொல்லி மறைகிறாய்.

~~~~~~~~~

மாலையில் நீ வரச் சொன்ன ரயிலடிக்கு வந்து
தண்டவாளத்தில் அமர்ந்து உனக்காகக் காத்திருக்கிறேன்.
கைகளை இரு பக்கமும் விரித்துக் கொண்டு மெது மெதுவாக
ஒரு தண்டவாளத்தில் கால் மாற்றி கால் வைத்து நடந்து வருகிறாய்.
தலை நிமிர்த்தி நீ என்னைப் பார்த்ததும் தண்டவாளத்தில் இருந்து தடம் புரள்கின்றன உனது கால்கள்.

இரண்டு தண்டவாளங்களுக்கு இடையே இறங்கியவள் என்னை நோக்கி ஓடி வருகிறாய்.
உன்னையேப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருக்கிறேன் நான்.
என்னை நெருங்கியதும் ஓட்டத்தை நிறுத்தி, மூச்சு வாங்குகிறாய்.
எனக்கு மூச்சு நிற்கிறது.

“ என்னடா அப்படிப் பார்க்கிற?”

“இல்ல தண்டவாளத்துல எப்பவும் ரயில் தான வரும், இன்னைக்கு மயில் வருதேன்னுப் பார்க்கிறேன்”

செல்லமாய் என் மார்பில் முட்டுகிறாய்.
மயில் மோதி பயங்கர விபத்துக்குள்ளாகிறது என் இதயம்.

பின் இருவருமாய் நடந்து சென்று அந்த ரயில்நிலைய பெஞ்சில் அமர்கிறோம்.
“என்னது அது கையில ஏதோ புக் வச்சிருக்க? இன்னும் காலேஜ் அரியர்ஸ் பாக்கி இருக்கா?”

“அதெல்லாம் ஒன்னும் இல்ல! இது தான் இயற்கை அகராதியாம்!
இயற்கைப் பொருட்களுக்கெல்லாம் விளக்கம் இருக்கு படிச்சுப் பாரு”
புத்தகத்தை வாங்கி படிக்க ஆரம்பிக்கிறாய்.


· சூரியன் – தினமும் உன்னைப் பார்ப்பதற்காகவே உலக வீதியில் உலா வருபவன்.
· நிலா – உன் அழகைப் பார்த்துப் பொறாமையில் தேய்ந்து தேய்ந்து வளர்பவள்.
· நட்சத்திரங்கள் – உன்னைச் செதுக்கியதில் சிதறிய அழகுச் சில்லுகள்
· மழை – உன்னைத் தொட்டுப் பார்க்க வானம் நீட்டும் நீர்விரல்கள்.
· பூமி – உன் பாதம் பட்டதால் கோடியாண்டு வாழ்வை வரமாய்ப் பெற்றவள்.
· அழகான தேவதை – நீ!
· பேரழகான தேவதை – நீயேதான் - வெட்கப்படும்போது!

அதற்கு மேல் படிக்காமல் புத்தகத்தை மூடுகிறாய்.

“ என்ன அதுக்குள்ள மூடி வச்சிட்ட? இன்னும் இருக்கு!”

“இதுக்கு பேர்தான் அகராதி!” என்கிறாய்.

“அகராதி தான் – காதல் அகராதி!” என்கிறேன் நான்.

“உன்னத் திருத்த முடியாது, அத பத்திரமா வச்சிரு!
கல்யாணத்துக்கு அப்புறமாப் படிச்சுக்கிறேன்” என்று சொல்லிவிட்டு ஓடுகிறாய்.

உன்னைப் பார்ப்பதற்காக விசிலடித்துக் கொண்டு வருகிற ரயில் ஏமாந்துதான் போகும்!

அடுத்தப் பகுதி

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

18 comments:

  1. அன்புடன் கவிதைப் போட்டியில் இயல்கவிதைப் பிரிவின் நடுவர் "திசைகள்" ஆசிரியர் எழுத்தாளர் மாலனின் ஊக்கப் பரிசைப் பெற்றிருக்கிறீர்கள்... வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கும் சென்னைக்கு அமராவதி வந்து எங்களுக்கும் இதம் தரும் என்பதில் பெரும் மகிழ்ச்சி தோழா.


    ஜொள்ளும் லொள்ளும் காதலும் தமிழும் சேர்ந்து ஒரே குஜாலா கீதுப்பா

    //“இல்ல தண்டவாளத்துல எப்பவும் ரயில் தான வரும், இன்னைக்கு மயில் வருதேன்னுப் பார்க்கிறேன்”

    செல்லமாய் என் மார்பில் முட்டுகிறாய்.
    மயில் மோதி பயங்கர விபத்துக்குள்ளாகிறது என் இதயம்//

    //உன்னைப் பார்ப்பதற்காக விசிலடித்துக் கொண்டு வருகிற ரயில் ஏமாந்துதான் போகும்//

    அருமையான கற்பனை

    ReplyDelete
  3. நன்றி சேதுக்கரசி தகவல் தந்தமைக்கு!!!

    வாழ்த்துக்களுக்கும் :)

    ப்ரேமும் முன்பே சொல்லி விட்டார் :)

    ReplyDelete
  4. பிரேம்,

    / வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கும் சென்னைக்கு அமராவதி வந்து எங்களுக்கும் இதம் தரும் என்பதில் பெரும் மகிழ்ச்சி தோழா./

    நீங்க வேற, அமராவதியே இங்க காஞ்சு போய்க் கிடக்கு :)))


    /ஜொள்ளும் லொள்ளும் காதலும் தமிழும் சேர்ந்து ஒரே குஜாலா கீதுப்பா/

    அப்படியா? ;-)

    //“இல்ல தண்டவாளத்துல எப்பவும் ரயில் தான வரும், இன்னைக்கு மயில் வருதேன்னுப் பார்க்கிறேன்”

    செல்லமாய் என் மார்பில் முட்டுகிறாய்.
    மயில் மோதி பயங்கர விபத்துக்குள்ளாகிறது என் இதயம்//

    //உன்னைப் பார்ப்பதற்காக விசிலடித்துக் கொண்டு வருகிற ரயில் ஏமாந்துதான் போகும்//

    அருமையான கற்பனை/

    ம்ம்..நன்றி... சென்னையில் சந்திப்போம் :)

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் அருட்பெருங்கோ.

    ReplyDelete
  6. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி மணியன்!!!

    ReplyDelete
  7. அட அட அட..ஒவ்வொரு வரியும் தேன்..

    ReplyDelete
  8. ரவி,

    / அட அட அட..ஒவ்வொரு வரியும் தேன்../

    நன்றிங்க...
    (உண்மையிலேயே பாராட்டுறீங்கதான? உள் குத்து எதுவும் இல்லையே? ;-) )

    ReplyDelete
  9. அருமையான காதல் கவிதை (காவியம் ) எல்லா வரிகளும் அருமை

    நாளுக்கு நாள் காதல் ஜுரம் கூடிக்கிட்டே போகுது
    காதல் ஜுரத்தில் குளிர் காய்கிறேன் இதமாக

    தினமும் நேற்றைய உங்களிடம் தோற்றுகொண்டுதான் வருகிறீர்கள்

    தபூ சங்கரை மிஞ்சிட்டீங்க ( சத்தியமா இது உள் குத்து இல்லீங்கோ )

    வாழ்த்துக்கள் பயணங்கள் தொடர.....

    நன்றியுடன்
    தோழன் மீறான் அன்வர்

    ReplyDelete
  10. //உள் குத்து எதுவும் இல்லையே? ;-)//

    இதென்னங்க எல்லாரு கிட்டயும் இதையே கேட்கிறீங்க? இது விசயமா உங்க பதிவுல செம ரகளை பண்ணினது ஞாபகம் வருது இப்ப! :D

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள்
    அருமை

    ReplyDelete
  12. ம்ம்.. தபூ சங்கர் கவிதைகள் நினைவுக்கு வருகின்றன. ஒப்பீட்டிற்கு மன்னிக்கவும்.. ரசிக்கும்படியாக இருந்தது.

    ReplyDelete
  13. வாங்க அன்வர்,

    /அருமையான காதல் கவிதை (காவியம் ) எல்லா வரிகளும் அருமை/

    நன்றிங்க‌

    /நாளுக்கு நாள் காதல் ஜுரம் கூடிக்கிட்டே போகுது
    காதல் ஜுரத்தில் குளிர் காய்கிறேன் இதமாக/

    காதல் ஜுரமா? யாருக்குங்க‌?

    /தினமும் நேற்றைய உங்களிடம் தோற்றுகொண்டுதான் வருகிறீர்கள்/

    நான் நேற்று எழுதியத விட இன்றைக்கு இன்னும் நல்லா எழுதனும்னு ஆசப்பட்றேன்... நேற்றைய என்னிடம் தோற்றுப் போகிறேன்னா முன்ன எழுதினத விட இப்ப எழுதறது நல்ல இல்லையோ?

    /தபூ சங்கரை மிஞ்சிட்டீங்க ( சத்தியமா இது உள் குத்து இல்லீங்கோ )

    வாழ்த்துக்கள் பயணங்கள் தொடர.....

    நன்றியுடன்
    தோழன் மீறான் அன்வர்/


    அவரெல்லாம் காதலுக்குன்னே பொறந்தவருப்பா...
    வாழ்த்துக்க‌ளுக்கு ந‌ன்றி அன்வ‌ர்!!!

    ReplyDelete
  14. வாங்க சேதுக்கரசி,

    //உள் குத்து எதுவும் இல்லையே? ;-)//

    இதென்னங்க எல்லாரு கிட்டயும் இதையே கேட்கிறீங்க? இது விசயமா உங்க பதிவுல செம ரகளை பண்ணினது ஞாபகம் வருது இப்ப! :ட் /


    என்னங்க பண்றது, நான் எழுதறத நண்பர்கள் எல்லாரும் கலாய்க்கிறாங்க, தமிழ்மணத்துல பல பேர் நல்லா இருக்குனு சொல்றாங்க... நான் நல்லா எழுதியிருக்கேனா இல்லையானு எனக்கேத் தெரிய மாட்டேங்குது :) அதான் இப்ப‌டி...

    என‌க்கும் ஞாப‌க‌மிருக்கு ர‌க‌ளைய‌ர‌சி ;)

    ReplyDelete
  15. /வாழ்த்துக்கள்
    அருமை /


    நன்றிங்க அனானி!!!

    ReplyDelete
  16. /ம்ம்.. தபூ சங்கர் கவிதைகள் நினைவுக்கு வருகின்றன. ஒப்பீட்டிற்கு மன்னிக்கவும்.. ரசிக்கும்படியாக இருந்தது. /

    காதலைப் பற்றி வாசிக்கும்போது தபு சங்கர் கவிதைகள் கன்டிப்பாக நினைவுக்கு வரும் :)

    ரசித்தமைக்கு நன்றிகள் காயத்ரி!!!

    ReplyDelete
  17. //“இல்ல தண்டவாளத்துல எப்பவும் ரயில் தான வரும், இன்னைக்கு மயில் வருதேன்னுப் பார்க்கிறேன்”//

    saatharana adi illa..
    arutperungo adi..
    summa nethi adi..

    super thala..

    ReplyDelete
  18. / //“இல்ல தண்டவாளத்துல எப்பவும் ரயில் தான வரும், இன்னைக்கு மயில் வருதேன்னுப் பார்க்கிறேன்”//

    saatharana adi illa..
    arutperungo adi..
    summa nethi adi..

    super thala../

    ஆகா...பிரபுராஜா ஏன் இந்த கோபம்? :)

    ReplyDelete