Tuesday, February 05, 2008

நீங்களுமா நீலகண்டர்?

குறுந்தொகைப் பாடல்களைத் தேடிக்கொண்டிருக்கும்பொழுது நண்பனின் தேடலில் சிக்கியது இது. பதினெட்டாம் நூற்றாண்டில் நீலகண்ட சுவாமிகள் என்பவரால் எழுத(தொகுக்க?)ப்பட்ட பாடல்கள் அடங்கியது. முழுக்க முழுக்க நன்னெறி கருத்துகளைக் கூறும் பாடல்கள். சிறு வயதில் கேட்ட சில நன்னெறிக் கதைகளை உவமையாகவும் சில பாடல்களில் காணலாம். இருநூறு ஆண்டுகளுக்கு முந்தைய கருத்துகள் என்பதால் இன்றைய காலகட்டத்துக்குப் (குறைந்தபட்சம் எனக்கு) பொருந்தாதவையும் இருந்தாலும் அதனையும்கூட நல்லகருத்தாக மாற்றியும் பொருள் கொள்ள முடியும்.

சரி விசயத்திற்கு வருவோம். கருத்து மழைக்கு நடுவே இடைச்செருகலாக அங்கங்கே காதல் வர்ணனைகளும் இருக்கின்றன. நமக்குத் தேவையான அதை மட்டும் பார்ப்போம் :-) பொருள் விளக்கிக் கூற வேண்டிய அளவுக்கு இல்லாமல் ஓரிரண்டு முறை நிதானமாக வாசித்தாலே புரிந்துகொள்ளக் கூடிய அளவிற்கு மிக மிக எளிமையாகவே இருக்கின்றன எல்லாப் பாடல்களும். பொருள் வேண்டுமென்றால் அருகிலேயே ஞானவெட்டியான் அவர்களுடைய பதிவிற்கு இணைப்பும் கொடுத்துள்ளேன், சொடுக்கி வாசித்துக் கொள்ளலாம். வாங்க படிக்கலாம்…

பாடல் எண் - 10

வண்டு மொய்த்தனைய கூந்தல் மதன பண்டாரவல்லி
கெண்டையோடு ஒத்த கண்ணாள் கிளிமொழி வாயின் ஊறல்
கண்டு சர்க்கரையோ தேனோ கனியொடு கலந்த பாகோ
அண்டர் மாமுனிவர்க்கு எல்லாம் அமுதம் என்று அளிக்கலாமே

( இப்படிதான் ஆரம்பிக்கனுமோ? பொருள் )

பாடல் எண் – 19

தேனுகர் வண்டு மது தனை உண்டு தியங்கியே கிடந்ததைக் கண்டு
தானதைச் சம்புவின் கனி என்று தடங்கையில் எடுத்துமுன் பார்த்தாள்
வானுறு மதியும் வந்தது என்றெண்ணி மலர்கரம் குவியும் என்று அஞ்சிப்
போனது வண்டோ பறந்ததோ பழம் தான் புதுமையோ இது எனப் புகன்றாள்.

( என்னா கற்பனை… என்னா கற்பனை… பொருள் )

பாடல் எண் – 44

அத்தியின் மலரும் வெள்ளை யாக்கைகொள் காக்கைதானும்
பித்தர்தம் மனமும் நீரில் பிறந்த மீன் பாதம் தானும்
அத்தன் மால் பிரம்ம தேவனால் அளவிடப் பட்டாலும்
சித்திர விழியார் நெஞ்சம் தெரிந்தவர் இல்லை கண்டீர்.

( இவரையும் புலம்ப வச்சிட்டாங்களே… பொருள் )

பாடல் எண் - 76

அன்னம் பழித்தநடை யாலம் பழித்த விழி அமுதம் பழித்த மொழிகள்
பொன்னம் பெருத்த முலை கன்னங் கறுத்த குழல் சின்னஞ் சிறுத்த இடை பெண்
என் நெஞ்சு உருக்க அவள்தன் நெஞ்சு கற்றகலை என்என்று உரைப்பதினி நான்
சின்னஞ் சிறுக்கியவள் வில்லங்கம் இட்டபடி தெய்வங் களுக்கு அபயமே!

( இதுக்கெல்லாம் கடவுளக் கூப்பிடலாமா? பொருள் )

பாடல் எண் – 83

உண்ணல் பூச்சூடல் நெஞ்சு உவத்தல் ஒப்பனை
பண்ணல் எல்லாம் அவர் பார்க்கவே அன்றோ?
அண்ணல் தம் பிரிவினை அறிந்தும் தோழிநீ
மண்ண வந்தனை இது மடமை ஆகுமால்.

( பிரிச்சுட்டாங்களோ? பொருள் )

பாடல் எண் – 89

தண்டுலாவிய தாமரைப் பொய்கையில்
மொண்டு நீரை முகத்தருகு ஏந்தினாள்
கெண்டை கெண்டை எனக்கரை ஏறினாள்
கெண்டை காண்கிலள் நின்று தயங்கினாள்.

( இந்த உவமை எத்தன வருசமா இருக்கு? பொருள் )

பாடல் எண் - 91

நிலைத்தலை நீரில் மூழ்கி நின்றவள் தன்னை நேரே
குலைத்தலை மஞ்ஞை கண்டு கூ எனக் காவில்ஏக
முலைத்தலை அதனைக் கண்டு மும்மதக் கரிவந்துற்ற
தலைத்தலைச் சிங்கம் என்று அக்களிறு கண்டு ஏகிற்றம்மா.

( இனிமே ‘சிங்கம்ல’ அப்படினு சொல்லிக்குவாங்களோ? பொருள் )

பாடல் எண் - 101

மாகமா மேடை மீதில் மங்கை நின்று உலாவக் கண்டு
ஏகமா மதி என்றெண்ணி இராகு வந்துற்ற போது
பாகுசேர் மொழியினாளும் பற்றியே பாதம் வாங்கத்
தோகைமா மயில் என்றெண்ணித் தொடர்ந்த ரா மீண்டதன்றே.

(ஆகா ஆககா… பொருள் )

பாடல் எண் - 106

கொல்உலை வேல் கயல்கண் கொவ்வை அம் கனிவாய்மாதே
நல்லணி மெய்யில் பூண்டு நாசிகாபரணி மீதில்
சொல்லதிற் குன்றி தேடிச் சூடியது என்னோ என்றான்
மெல்லியல் கண்ணும் வாயும் புதைத்தனள் வெண்முத்தென்றாள்.

( என்னமா சமாளிக்கிறாங்கப்பா! பொருள்)

பாடல் எண் – 107

அருகில் இவளருகில் இவளருகில் வர உருகும்
கரிய குழல் மேனியவள் கானமயில் சாயல்
பெரிய தனம் இடை சிறிது பேதை இவள் ஐயோ
தெருவில் இவள் நின்ற நிலை தெய்வம் எனலாமே.

(நீங்களுமா நீலகண்டர்? பொருள்)

பாடல் எண் - 108

அலகு வாள்விழி யிழை நன் னுதல்
திலகம் கண்டெதிர் செஞ்சிலை மாரனும்
கலகமே செய்யும் கண் இதுவாம் என
மலர் அம்பு ஐந்தையும் வைத்து வணங்கினான்.

( ம்ஹும் … முடியல… பொருள்)

இன்னுமிருக்கிற சிற்றின்பப் பாடல்களையெல்லாம் விளக்கினால் தமிழ்மணத்தில் சூடான இடுகைகளில் இடம்பிடிக்கும் அளவுக்குக் கூட பாடல்கள் இருக்கின்றன :) அதனால் சிற்றின்பத்தை நிறுத்திவிட்டு, அழகான கருத்துடன் எளிமையான பாடல்கள் சில…

பாடல் எண் - 1

ஆபத்துக்கு உதவாப் பிள்ளை அரும்பசிக்கு உதவா அன்னம்
தாபத்தைத் தீராத் தண்ணீர் தரித்திரம் அறியாப் பெண்டிர்
கோபத்தை அடக்கா வேந்தன் குருமொழி கொள்ளாச் சீடன்
பாபத்தைத் தீராத் தீர்த்தம் பயனில்லை ஏழும்தானே.

பாடல் எண் – 4

ஒப்புடன் முகம் மலர்ந்தே உபசரித்து உண்மை பேசி
உப்பிலாக் கூழ் இட்டாலும் உண்பதே அமிர்தம் கும்
முப்பழ மொடு பால் அன்னம் முகம் கடுத்து இடுவாராயின்
கப்பிய பசியினோடு கடும்பசி ஆகும் தானே

பாடல் எண் – 5

கதிர்பெறு செந்நெல்வாடக் கார்க்குலம் கண்டு சென்று
கொதிநிரைக் கடலில் பெய்யும் கொள்கைபோல் குவலயத்தே
மதிதனம் படைத்த பேர்கள் வாடினோர் முகத்தைப் பாரார்
நிதிமிகப் படைத்தோர்க் கீவார் நிலை இலார்க்கு ஈயமாட்டார்.

பாடல் எண் – 8

தண்டாமரையின் உடன் பிறந்தும் தண்டே நுகரா மண்டூகம்
வண்டோ கானத்து இடைஇருந்து வந்தே கமல மதுவுண்ணும்
பண்டே பழகி இருந்தாலும் அறியார் புல்லோர் நல்லோரைக்
கண்டே களித்தங்கு உறவாடித் தம்மில் கலப்பார் கற்றாரே.

பதிவின் நீளம் கருதி இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். எல்லாப் பாடல்களும் மதுரைத் திட்டத்தில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. நல்ல உவமை + அழகான சந்தம் + தமிழின் இனிமையுடன் நிறையப் பாடல்கள் இருக்கின்றன. வாசித்துப் பாருங்கள்…

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.