Friday, February 09, 2007

இது காதல் பூக்கும் மாதம் - 90

இது காதல் பூக்கும் மாதம் - முதல் பகுதி

9. கண் விதுப்பழிதல்

உன்னை எனக்குக் காட்டியதால்
கோடிமுறை நன்றி சொல்லியிருப்பேன் என் கண்களுக்கு…
நீ பிரிந்ததும் என்னைக் காண மனமில்லாமல் அவை
கண்ணீரால் தம் முகம் மறைக்கின்றன!



கண்டாங் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாங்காட்ட யாங்கண் டது.

தீராத இக்காமநோய் கண்கள் காட்ட யாம் கண்டதால் விளைந்தது; அவ்வாறிருக்க காட்டிய கண்கள் தாமே இப்போது அழுவது ஏன்?

காதலில்
கண் பேசியதெல்லாம்
மனதுக்குப் புரிந்தது.
பிரிவில்
மனம் சொல்வதெதுவும்
அழுகிறக் கண்ணுக்குப் புரிவதில்லை.


தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
பைத லுழப்ப தெவன்.

ஆராய்ந்து உணராமல் அன்று நோக்கிக் காதல் கொண்ட கண்கள், இன்று அன்புகொண்டு உணராமல் துன்பத்தால் வருந்துவது ஏன்?

உன் தரிசனத்துக்காக
என்னை உன்பின்னே அலையவிட்டவை,
இன்று உன்னைப் பார்க்க முடியாமல்
ஒளிந்து கொள்ள வைக்கின்றன!
புரிந்துகொள்ளவே முடியவில்லை
என் கண்களையும்,
பிரிந்து போன உன்னையும்!


கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்க துடைத்து.

அன்று காதலரைக் கண்கள் தாமே விரைந்துநோக்கி இன்று தாமே அழுகின்றன; இது நகைக்கத்தக்க தன்மை உடையது.

என்னை விட்டுப் போவதென முடிவெடுத்தபின்
என் காதலைப் போல
என் கண்களையும் கொன்று விட்டுப் போ!
அல்லது
வற்றாத கண்ணீரைத் தந்து விட்டுப் போ!



பெயலாற்றா நீருலந்த வுண்க ணுயலாற்றா
உய்வினோ யென்கண் நிறுத்து.

என் கண்கள் தப்பிப் பிழைக்க முடியாத தீராத காமநோயை என்னிடத்தில் உண்டாக்கி நிறுத்திவிட்டு தாமும் அழமுடியாமல் நீர் வறண்டு விட்டன.

என் காதல் கடலை விடப் பெரியது.
உன் பிரிவால் வழியும் கண்ணீர்க்கடலோ
என் காதலைவிடப் பெரியது.



படலாற்றா பைதல் லுழக்குங் கடலாற்றாக்
காமநோய் செய்தவென் கண்.

அன்று கடலும் தாங்கமுடியாத காம்நோயை உண்டாக்கிய என் கண்கள் இன்று உறங்கமுடியாமல் துன்பத்தால் வருந்துகின்றன.

உன்னைக்
காதலில் நனைத்தேன்.
நீயோ பிரிந்துவிட்டு
என் கண்களை நனைக்கிறாய்…


ஓஒ வினிதே யெமக்கிந்நோய் செய்தகண்
தாஅ மிதற்பட் டது.

எமக்கு இந்தக் காமநோயை உண்டாக்கிய கண்கள் தாமும் இத்தகைய துன்பத்தைப் பட்டு வருந்துவது மிகவும் நல்லதே!

உன் பிரிவால்
அழுதழுது என் கண்ணீர்
வற்றிப் போனாலும்,
சுரந்துகொண்டே இருக்கிறது…
உன் மீதானக் காதல்!



உழந்துழந் துண்ணீ ரறுக விழைந்திழைந்து
வேண்டி யவர்கண்ட கண்.

அன்று விரும்பி நெகிழ்ந்து காதலரைக் கண்ட கண்கள் இன்று உறக்கமில்லாத துன்பத்தால் வருந்தி வருந்திக் கண்ணீரும் அற்றுப் போகட்டும்.

நீ காதலை வைத்தது
உள்ளத்திலோ உதட்டிலோ தெரியவில்லை.
ஆனால் விலகும்போது
கடலை வைத்துவிட்டுப் போகிறாய்
என் கண்ணில்!



பேணாது பெட்டா ருளர்மன்னோ மற்றவர்க்
காணா தமைவில கண்.

உள்ளத்தால் விரும்பாமலே சொல்லளவில் விரும்பிப் பழகியவர் ஒருவர் இருக்கின்றார். அவரைக் காணாமல் கண்கள் அமைதியுறவில்லை.

பாவம் என் கண்கள்.
நீ தூங்கவே விடுவதில்லை…
காதலித்த போதும், பிரிந்தபிறகும்!



வாராக்காற் றுஞ்சா வரிற்றுஞ்சா ஆயிடை
யாரஞ ருற்றன கண்.

காதலர் வாராவிட்டால் தூங்குவதில்லை; வந்தாலும் தூங்குவதில்லை; இவற்றுக்கிடையே என் கண்கள் மிக்க துன்பத்தை அடைந்தன.

உன்னிடம்
என் காதலைக் காட்டிக் கொடுத்ததும்,
உன் பிரிவை ஊருக்கெல்லாம்
அழுதேக் காட்டிக் கொடுக்கப் போவதும்,
என் கண்கள்தாம்!



மறைபெற லூரார்க் கரிதன்றா லெம்போ
லறைபறை கண்ணா ரகத்து.

அறையப் படும் பறபோல் துன்பத்தை வெளிப்படுத்தும் கண்களை உடைய எம்மைப் போன்றவரிடத்தில் மறைபொருளான செய்தியை அறிதல் உரார்க்கு அரிது அன்று.

இது காதல்ல் பூக்கும் மாதம் - 100

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

8 comments:

  1. //காதலில்
    கண் பேசியதெல்லாம்
    மனதுக்குப் புரிந்தது.
    பிரிவில்
    மனம் சொல்வதெதுவும்
    அழுகிறக் கண்ணுக்குப் புரிவதில்லை//

    //உன்னை எனக்குக் காட்டியதால்
    கோடிமுறை நன்றி சொல்லியிருப்பேன் என் கண்களுக்கு…
    நீ பிரிந்ததும் என்னைக் காண மனமில்லாமல் அவை
    கண்ணீரால் தம் முகம் மறைக்கின்றன!//

    //என் காதல் கடலை விடப் பெரியது.
    உன் பிரிவால் வழியும் கண்ணீர்க்கடலோ
    என் காதலைவிடப் பெரியது. //

    //பாவம் என் கண்கள்.
    நீ தூங்கவே விடுவதில்லை…
    காதலித்த போதும், பிரிந்தபிறகும்! //

    எல்லாமே அருமை. திருவள்ளுவரோட கூட்டணி போட்டு நல்லாவே கொண்டாடுறீங்க காதல் மாதத்தை.....

    ReplyDelete
  2. பாவம் என் கண்கள்.
    நீ தூங்கவே விடுவதில்லை…
    காதலித்த போதும், பிரிந்தபிறகும்!

    ம்ம்... அடிக்கடி நொந்து, துடித்து அழுது வடிக்கும் இந்தக் கண்கள் பாவம் செய்தவைதான்!

    ReplyDelete
  3. வாங்க பிரேம்,

    /எல்லாமே அருமை. திருவள்ளுவரோட கூட்டணி போட்டு நல்லாவே கொண்டாடுறீங்க காதல் மாதத்தை..... /

    பாருங்க நம்ம நிலமைய... திருவள்ளுவர்கூட கூட்டணி போட வேண்டியதாப் போச்சு!!! ;-)

    ReplyDelete
  4. வாங்க சத்தியா,

    /ம்ம்... அடிக்கடி நொந்து, துடித்து அழுது வடிக்கும் இந்தக் கண்கள் பாவம் செய்தவைதான்! /

    உண்மைதான்! வேறென்ன சொல்வது? :-(

    ReplyDelete
  5. //காதலில்
    கண் பேசியதெல்லாம்
    மனதுக்குப் புரிந்தது.
    பிரிவில்
    மனம் சொல்வதெதுவும்
    அழுகிறக் கண்ணுக்குப் புரிவதில்லை.//

    நல்லா இருக்கு...

    ReplyDelete
  6. வாங்க சேதுக்கரசி,

    / //காதலில்
    கண் பேசியதெல்லாம்
    மனதுக்குப் புரிந்தது.
    பிரிவில்
    மனம் சொல்வதெதுவும்
    அழுகிறக் கண்ணுக்குப் புரிவதில்லை.//

    நல்லா இருக்கு.../

    ம்ம்ம்... உண்மைதானே?

    நன்றிங்க...

    ReplyDelete
  7. ஒவ்வொரு கவிதையும் அருமை அருள்

    ReplyDelete
  8. வாங்க கோபி,

    /ஒவ்வொரு கவிதையும் அருமை அருள்/

    ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நன்றிகள்!!! :-)

    ReplyDelete