Monday, February 12, 2007

இது காதல் பூக்கும் மாதம் - 120

இது காதல் பூக்கும் மாதம் - முதல் பகுதி

12. நினைந்தவர் புலம்பல்

உன் நினைவுக(ள்)ளைக்
குடித்து குடித்து
போதையிலேயே இருக்கிறது
இந்த மனது.

உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது.

உண்டபோது மட்டும் மகிழ்ச்சி தரும் கள்ளைவிட நினைத்தாலே நெஞ்சினிக்கச் செய்யும் காதல் இன்பமானதாகும்.

என்னையும் உன்னையும்
காலம் வந்து பிரித்தது.
எனக்குள் இருக்கும் உன்னை
யார் வந்து பிரிப்பார்?


எனைத்தொன் றினிதேகாண் காமந்தாம் வீழ்வார்
நினைப்ப வருவதொன் றில்.

விரும்பி இணைந்த காதலரை நினைத்தலால், பிரிவின் போது வரக்கூடிய துன்பம் வருவதில்லை எனவே எந்த வகையிலும் காதல் இனிதேயாகும்.


நிற்காமல் வருகிற விக்கலைப் போல
மீண்டும் மீண்டும் உன்னிடம் வருகிறேன்.
வருவது போல வராமல் போகிற தும்மலாய்
என்னைவிட்டுப் போகிறாய்.



நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும்.

வருவது போலிருந்து வராமல் நின்று விடுகிறதே தும்மல்; அதுபோலவே என் காதலரும் என்னை நினைப்பது போலிருந்து, நினைக்காது விடுகின்றாரோ?


உன் முகவரி கேட்பவரிடம்
என் இதயத்தை காட்டு!
என் முகவரி கேட்பவரிடம்
உன் இதயத்தை…???



யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத் தெந்நெஞ்சத்
தோஒ உளரே அவர்.

என் நெஞ்சைவிட்டு நீங்காமல் என் காதலர் இருப்பது போல, அவர் நெஞ்சை விட்டு நீங்காமல் நான் இருக்கின்றேனா?


என் இதயவீட்டில்
உன்னைக் குடிவைத்துவிட்டு
உன் மனவாசலில்
காத்திருக்கிறேன்.



தம்நெஞ்சத் தெம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்
எம்நெஞ்சத் தோவா வரல்.

அவருடைய நெஞ்சில் எமக்கு இடம் தராமல் இருப்பவர்; எம் நெஞ்சில் மட்டும் இடைவிடாமல் வந்து புகுந்து கொள்வதற்காக வெட்கப்படமாட்டார் போலும்.


என் உயிரை
நழுவாமல் இறுக்கிப் பிடித்திருக்கிறது
உன் நினைவுக் கயிறு.



மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடுயான்
உற்றநாள் உள்ள உளேன்.

நான் அவரோடு சேர்ந்திருந்த நாட்களை நினைத்துத் தான் உயிரோடு இருக்கிறேன்; வேறு எதை நினைத்து நான் உயிர்வாழ முடியும்?


நினைத்துக் கொண்டிருந்தால்
உன்னிடமே போகிறது மனமும்…
மறக்க நினைத்தால்
என்னைவிட்டே போகிறது உயிரும்…
விலகிய பிறகு, உன்னை
நினைப்பதா? மறப்பதா?


மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்
உள்ளினும் உள்ளம் சுடும்.

மறதி என்பதே இல்லாமல் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே பிரிவுத்துன்பம் சுட்டுப் பொசுக்குகிறதே! பினைக்காமல் மறந்துவிட்டால் என்ன ஆகுமோ?

பேசவேண்டாமென்று சொன்னதைப் போல
உன்னை நினைக்கக்கூடாதென்றும் சொல்லிவிடாதே.
காதல்தான் இல்லை, உயிராவது மிஞ்சட்டும்!



எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ
காதலர் செய்யும் சிறப்பு.

எவ்வளவு அதிகமாக நினைத்தாலும், அதற்காகக் காதலர் என் மீது சினம் கொள்ளமாட்டார். அவர் எனக்குச் செய்யும் பெரும் உதவி அதுவல்லவா?


உன்னையும் என்னையும்
பிரித்துப் பார்க்கத் தெரியவில்லை
என்றவள் பிரிந்தே போய்விட்டாய்…
என்னை விட்டு உன்னோடு வந்து
கொண்டிருக்கிறது
என் மனமும், உயிரும்!



விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்
அளியின்மை ஆற்ற நினைந்து.

``நாம் ஒருவரே; வேறு வேறு அல்லர்.'' எனக்கூறிய காதலர் இரக்கமில்லாதவராக என்னைப் பிரிந்து சென்றுள்ளதை நினைத்து வருந்துவதால் என்னுயிர் கொஞ்சம் கொஞ்சமாகப் போய்க் கொண்டிருக்கிறது.


உன்னைப் பார்க்கும் ஆசையெல்லாம்
இந்த நிலவைப் பார்த்துத்
தீர்த்துக் கொள்கிறேன்
பௌர்ணமியன்று மட்டும்!


விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
படாஅதி வாழி மதி.

நிலவே! நீ வாழ்க; இணைபிரியாமலிருந்து, பிரிந்து சென்றுள்ள காதலரை நான் என் கண்களால் தேடிக் கண்டுபிடித்திடத் துணையாக நீ மறையாமல் இருப்பாயாக.

இது காதல் பூக்கும் மாதம் - 130

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

4 comments:

  1. காதல் முரசே,

    கவிதைகள் அனைத்தும் அருமை....

    ReplyDelete
  2. வாங்க இராம்,

    / காதல் முரசே,

    கவிதைகள் அனைத்தும் அருமை..../

    நன்றி ... ஆனா இத கவிதைகள் னு சொல்ல முடியாது... சிறு குறிப்பு மாதிரினு வச்சுக்கலாம்!!

    ReplyDelete
  3. //என் உயிரை
    நழுவாமல் இறுக்கிப் பிடித்திருக்கிறது
    உன் நினைவுக் கயிறு//

    நச்-னு இருக்கு

    ReplyDelete
  4. சேதுக்கரசி,

    /நச்-னு இருக்கு/

    தொங்கிக்கிட்டு இருக்குன்னு சொல்றேன்...

    உங்களுக்கு என்னன்னா நச் னு இருக்கா? ம்ம்ம்....

    ReplyDelete