Friday, May 19, 2006

ஓருக் குட்டிக்(காதல்)கதை!

அந்தப் பூங்காக் குழந்தைகள் விளையாடுவதற்காக உருவாக்கப் பட்டது என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்.
கொளுத்தும் வெயிலிலும் கூட அது எப்போதும் காதலர்களால் மட்டுமே நிரம்பியிருக்கும்.
சூரியன் தன் இருப்பைக் காட்ட ஆரம்பித்த அந்தக் காலை வேளையிலேயே அந்தப் பூங்காவுக்குள் நுழைந்தார்கள் இருவரும்.
அவளுடையத் தோள் மேல் தன் வலது கையைப் போட்டபடி அவனும், அவனுடைய இடுப்பைத் தன் இடது கையால் சுற்றியபடி அவளும்.

“அருள், இந்தப் பூங்காவுக்கு நாம இதுவரைக்கும் எத்தன தடவை வந்திருப்போம்?”
“இங்க இருக்கிற மரத்துக்கிட்ட தான் கேட்கனும், எனக்கென்னமோ நான் பிறந்ததுல இருந்தே இந்தப் பூங்காவுக்கு வந்துகிட்டு இருக்கிற மாதிரி தான் தோணுது”

ஒரு வகையில் அவன் சொல்வதும் உண்மைதான். அவன் வாழ்வில் இரண்டாவது முறைப் பிறந்தது இந்தப் பூங்காவில்தான்.
அப்போது இது குடும்பத்தோடு எல்லோரும் வரும் பூங்காவாய் இருந்தது.ஒரு நாள் தன்னுடையப் பூனைக்குட்டியோடு அவள் இந்தப் பூங்காவுக்கு வந்திருந்த போதுதான் முதன்முதலாய் அவளைப்பார்த்தான். அப்போதேப் பூனைக்குட்டியாய் மாறி விட ஆசைப்பட்டவன், இப்போது அவள் பின்னே ஒரு பூனைக்குட்டியாகவே மாறியிருந்தான்.

“அரசி, இந்த மரத்துல இதுக்கு முன்ன நீ பூ பூத்துப் பார்த்திருக்க?”
“அது வருஷத்துல ஒரு தடவை மட்டும் தான் பூக்கும், போன வருஷம் பூத்திருந்தத நான் பார்த்தேன்”

“நான் எப்படிப் பார்க்காமப் போனேன்?”
“வெளியில வரும்போதாவது சுத்திலும் என்ன இருக்குன்னுப் பார்க்கனும், எப்பவும் என்ன மட்டுமேப் பார்த்துக்கிட்டு இருந்தா இப்படித்தான்”

“இப்ப மரத்த விட்டுட்டு, உன்னப் பார்க்கனும்..அதான? இரு.. இரு..இந்தப் பூவ மட்டும் பறிச்சுட்டு வந்துட்றேன்..”
“அது அவ்ளோ உயரத்துல இருக்கே, வேண்டாம் விடுங்க…”

“கொஞ்சம் இரு..அந்தப் பூ அப்ப இருந்து ஏக்கத்தோட உன்னையேப் பார்த்துட்டு இருக்கு, அதப் பறிச்சு உங்கிட்டக் கொடுக்கலேன்னா என்னதானத் திட்டும்”, சொல்லிக்கொண்டே ஒரு பெஞ்ச் மீது ஏறி கொஞ்சம் எக்கிப் பறித்தான் அந்தப் பூவை.
அவனிடமிருந்து அதை வாங்கிக் கொண்டவள், கையிலேயே வைத்துக் கொண்டாள்.
“அதப் போய் அப்படி எக்கிப் பறிக்கிறீங்களே, கீழ விழுந்தா என்னாகறது?”

“அந்தப் பூ விழுந்திருந்தா, வேறப் பூ பறிச்சுத் தந்திருப்பேன்”
“ம்ஹூம்…உங்களத் திருத்தவே முடியாது!” என்று சிணுங்கியவள் பூவைச் சூடிக்கொள்ளத் திரும்பி நின்றாள்.
அவன் கையால் பூவைச் சூடிக்கொண்ட பின் அவர்கள் வழக்கமாய் அமரும் அந்த மரத்தடிக்குச் சென்று அமர்ந்து கொண்டார்கள்.

“இன்னைக்கு என்னங்கக் கூட்டமே இல்ல?”
“எல்லாருமே நம்மள மாதிரிக் காதலிக்கிறது மட்டுமே வேலையா இருப்பாங்களா என்ன?”

“ம்ம்..அதுவும் சரிதான்”
அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தவன் காதலில் பிதற்ற ஆரம்பித்தான்.

“எப்பவும் கூட்டத்துக்கு நடுவிலப் பார்த்தாலே நீ தனியா அழகாத் தெரிவ; இன்னைக்கு பூங்காவில உன்னமட்டும் தனியாப் பார்க்க நீ எவ்ளோ அழகா இருக்கத் தெரியுமா?”
“அழகா இல்லாமப் பின்ன எப்படி இருப்பேனாம்? ஒரு நாளைக்கு ஒரு தடவை சொன்னாப் பரவால்ல! காலைலத் தூங்கி எழுந்ததுல இருந்து ராத்திரித் தூங்கப் போற வரைக்கும் ஆயிரத்தெட்டு தடவ “நீ அழகா இருக்கடி”னு சொல்லி சொல்லி எனக்கே மனசுல நான் அழகினு பதிஞ்சு போச்சு, நாம நினைக்கிற மாதிரிதான நாம இருப்போம்..அதான் நான் எப்பவும் அழகா இருக்கேன்”

அவள் பேசுவதையே ரசித்துக் கொண்டிருந்தவன், “நீ அழகா இருக்கிறதுக்கு இதுதான் காரணம்னா ஒவ்வொரு பிறந்த நாள் முடிஞ்சவுடனே உனக்கு மட்டும் ஒரு வயசுக் கம்மியாயிடுதே அதுக்கென்னக் காரணமாம்??”
“ஆமா, ஒரு தடவ “நீ அழகா இருக்கடி”னு சொன்னா ஒன்பது தடவ “நான் உன்னக் காதலிக்கிறேன்”னு சொல்றீங்க…தினமும் சொல்ற உங்களுக்கும் சலிக்கல…தினமும் கேட்கிற எனக்கும் சலிக்கல..இப்படி தினம் தினம் காதலிக்கப் படறவங்களுக்கு எப்படி வயசுக் கூடுமாம்??”

“எனக்கு மட்டும் கூடுது!”
“உங்க அளவுக்கு என்னாலக் காதலிக்க முடியல இல்ல! அதான் நீங்கக் காதலிக்கிறத விடக் காதலிக்கப் படறது கம்மி! அதனாலதான் உங்களுக்கு வயசுக் கூடிக்கிட்டேப் போகுது!”

“அரசி! நீ எப்போ இந்த மாதிரியெல்லாம் பேச ஆரம்பிச்ச?” ஆச்சரியமாய்க் கேட்டான்.
வழக்கமாய் அவள் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் அவன் தான் இப்படி காதலில் உருகிக் கொண்டிருப்பான்.
நேரம் கரைந்து, வெயில் கொஞ்சம் அதிகமாகவே இருவரும் பூங்காவை விட்டு வெளியே நடந்து வந்தார்கள்.

அவள்,எதிரில் இருந்த ஐஸ்க்ரீம் கடையைக் காட்டிக் கேட்டாள், “அருள், ஒரே ஒரு ஐஸ்க்ரீம் ப்ளீஸ்”
“உன்ன ஐஸ்க்ரீம் சாப்பிடக்கூடாதுனு சொல்லியிருக்கேன்ல…அப்புறம் குண்டாயிட்டீன்னா உன்ன வீட்ல எல்லாரும் ஜோதிகானு கிண்டல் பண்ணப் போறாங்க”

ஒவ்வொரு முறை அவள் ஐஸ்க்ரீம் கேட்கும்போதும் அவன் முதலில் மறுப்பதும், பின் அவளுடையக் கெஞ்சல், சிணுங்கலில் அவன் ஐஸ்க்ரீமாய் உருகி, ஒன்றை வாங்கித் தருவதும் வழக்கமாய் நடப்பதுதான். ஐஸ்க்ரீம் வாங்கிக்கொண்டு நடக்க ஆரம்பித்தார்கள். ஒருக் குழந்தையைப் போல் அவள் ஐஸ்க்ரீமை ருசிப்பதை, ரசித்துக் கொண்டே வந்தான்.

“ம்ம்…இப்படிதான் ஐஸ்கிரீம சாப்பிடறதா..பாரு உதட்டுக்கு மேல எல்லாம்..”, சொல்லிக்கொண்டே அவள் உதட்டருகே கையைக் கொண்டுபோனான்.
“அருள்! இது பொது இடம்! ஞாபகம் இருக்கட்டும்”, என்று சொல்லி விட்டு உதட்டை அவளேத் துடைத்துக் கொண்டாள்.

“அடிப் பாவி! உன்னோட உதட்டப் போய் பொது இடம்னு சொல்றியே! அது நம்மோடத் தனி இடம்டி”
“ம்ம்..என்னோடத் தனி இடம்டா!”

பேசிக்கொண்டே அந்தத் துணிக்கடைக்கு வந்து சேர்ந்தார்கள். அவர்கள் இருவரும் காலையில் கிளம்பியதே அடுத்த வாரம் அவர்களுக்கு நடக்க இருக்கும் கல்யாணத்திற்கு துணியெடுக்கத்தான். ஆனால் ஒருநாளைக்கு ஒருமுறையாவது அந்தப் பூங்காவுக்குள் நுழையாமல் அவர்களால் இருக்க முடியாது.அதனால்தான் காலையில் முதலில் பூங்காவில் கொஞ்ச நேரம் கழித்துவிட்டுப் பிறகுக் கடையை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள்.
இருவருக்குமேப் பெற்றோர் இல்லாததால்தான் அவர்கள் மட்டும் தனியே வந்திருந்தனர்.

கடைக்குள் நுழைந்ததும், அவளே ஆரம்பித்தாள்:
“எப்பவும் சொல்ற மாதிரி புடவை வேண்டாம்னு சொல்லிடாதீங்க, கல்யாணத்தன்னைக்காவது நான் புடவையக் கட்டிக்கிறேன்”
“என்னை…”
“உங்களையுந்தான்…”, சிரித்தாள்.
“சரி என்ன மாதிரிப் புடவை பார்க்கலாம்”
“பட்டெல்லாம் வேண்டாம், சிம்பிளா ஒரு கைத்தறிப் புடவை, தலைல ஒரே ஒரு ரோஸ், கழுத்துல ஒரு சின்ன செயின் இது மட்டுதான் என்னோடக் கல்யாண costume! So கைத்தறிப் புடவையேப் பார்க்கலாம்”
“என்னக் கலர்ல பார்க்கலாம்?”
“உங்களுக்குப் பிடிச்ச பச்சை”
“ம்ஹூம்… உனக்குப் பிடிச்ச ப்ளூ”
இருவரும் மாறி மாறி சண்டை போட்டு முடிவில் அவள் சொன்னாள்,
“சரி எனக்குப் புடவை பிடிக்கும், அத உங்களுக்குப் பிடிச்ச பச்சைக் கலர்ல எடுத்துடுவோம்..உங்களுக்கு சுடிதார் பிடிக்கும், ஒரு சுடிதார் எனக்குப் பிடிச்ச ப்ளூ கலர்ல எடுத்துடுவோம்! சரியா??”
“ம்ம்ம்…எக்ஸ்ட்ராவா ஒரு சுடிதார் வேணும், அதுக்கு இப்படியெல்லாம் ஒரு காரணமா? சரி சரி ரெண்டுமே எடுத்துடுவோம்!”
அவனுக்குப் பிடித்த பச்சை நிறத்தில் ஒரு புடவையை எடுத்துக் கொண்டு, சுடிதார் பகுதிக்கு வந்தார்கள்.
“அருள், இந்த மெட்டிரியல் எப்படி இருக்குன்னுப் பாருங்க?”
“இதுக்கென்னத் துப்பட்டாக் கிடையாதா?”
“இல்ல இந்த மாதிரி தச்சா துப்பட்டாப் போடாம இருக்கிறதுதான் இப்ப ஃபேஷன்”
“அப்போ plain-material வேண்டாம் embroidery பண்ணது எடுக்கலாம்…இந்தா இது எப்படி இருக்குன்னுப் பாரு”
“ம்ம்..பரவால்லியே உங்களுக்குக் கூடக் கொஞ்சம் dressing sense இருக்கு!”
“என்னோட dressing sense-ச வச்சி உனக்கு எது நல்லா இருக்குனுதான் சொல்லத் தெரியும்; எனக்கு நீயே பார்த்து ஒன்ன select பண்ணு”
அவனுக்கு அவளே ஓர் ஆடையைத் தேர்ந்தெடுத்தாள், அவளுக்குப் பிடித்த நிறத்தில்.
எல்லாம் முடித்துக் கொண்டு வீடு திரும்புகையில் வாசலிலேயே அவர்களுக்கு வரவேற்புக் காத்திருந்தது.

“ஏன் தாத்தா! Dress வாங்கப் போறோம்னு காலையிலேயேக் கிளம்பிப் போய்ட்டு இப்பதான் வர்றீங்க…இவ்ளோ நேரம் எங்கப் போய் லவ் பண்ணிட்டு இருந்தீங்க?”
கேட்டு விட்டு உள்ளே ஓடும் பேத்தியைத் துரத்திக்கொண்டு ஓடுகிறார்கள், அடுத்த வாரம் அறுபதாம் கல்யாணம் செய்துகொள்ளப் போகும் அருளும், அரசியும்!


அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

23 comments:

  1. சான்ஸே இல்ல.. சூப்ப்ப்ப்ப்ப்ப்பர்...
    :-)
    பின்னிட்டீங்க போங்க

    ReplyDelete
  2. I guessed the climax in the very beginning.. please start write in different way. however the story is good...

    ReplyDelete
  3. பிரபு ராஜா,

    பாராட்டுக்கு நன்றிங்க...
    மனசு ரெண்டும் பின்னுவதுதானே காதல்??

    அனானி,

    முதலிலேயே யூகிப்பீங்கன்னு நான் எதிர்பார்க்கல...
    இன்னும் நல்லா எழுத முயற்சி பண்றேன்...

    விமர்சனம் எப்படி இருந்தா என்ன? உங்க பெயரிலேயே வந்து சொல்லியிருக்கலாமே?

    அன்புடன்,
    அருள்.

    ReplyDelete
  4. அட... அட... நானும் ஏதோ இளம் ஜோடிகளின் காதல் என நினைத்து வாசிச்சுக் கொண்டு போனால்....?????
    கடைசியில் தாத்தா, பாட்டி. ம்... இதுவும் நல்லாத்தான் இருக்கு. பாராட்டுக்கள் அருள்.

    ReplyDelete
  5. சத்தியா,

    காதல் ஒன்றும் இளம் ஜோடிகளுக்கு மட்டுமானது இல்லையே!

    காதலர்க்கு வயது கூடலாம், காதலுக்குக் கூடுமா என்ன? (திரைப்பட வசனம் போல இருந்தாலும் கேள்வி நியாயம் தானே?)

    அன்புடன்,
    அருள்.

    ReplyDelete
  6. கதை நல்லா இருந்தது. பாராட்டுக்கள்!

    ReplyDelete
  7. சிபி,

    பாராட்டுக்கு ரொம்ப நன்றிங்க!!

    அன்புடன்,
    அருள்.

    ReplyDelete
  8. அறுபது ஆயிடுச்சு!!மணிவிழா நெருங்கிடுச்சு!!ஆனாலும் டீனேஜ்தான்!
    ஆஹா!காதல் கொண்டாட்டம் தான்!!
    உள்ள காலம் எந்நாளும் தான்!!:-).

    அன்புடன்,
    துபாய் ராஜா.

    ReplyDelete
  9. இருபதின் காதலில் உணர்ச்சி அதிகம்,
    அறுபதின் காதலில் உணர்வு அதிகம்!
    - யாரோ சொன்னது!

    சரிதானே ராஜா?

    அன்புடன்,
    அருள்.

    ReplyDelete
  10. 60 வயதில் இந்த கதையில் சொல்லீருக்க மாதிரி தன் மனைவியை அழகா இருக்கா ன்னு சொல்லர கனவன் இருக்கானா என்ன?? எனக்கு சந்தேகமா இருக்கு..

    ReplyDelete
  11. வாங்க அனானி,

    அந்த மாதிரி இருக்காங்களானு தெரியல..

    ஆனா அந்த மாதிரி இருக்கனும்னு ஆசைப்படறது தப்பில்லையே??

    அன்புடன்,
    அருள்.

    ReplyDelete
  12. என்ன பெரியவரே!!! இந்த வயசிலேயும் ரொமேன்ஸ் கேட்குதா!
    இப்படிதான் கேட்கனும்னு நினைச்சேன்

    ஆனால் காதலுக்கு வயதில்லை என அருள் புரிய வைச்சிட்டார்.

    பாராட்டுக்கள் நண்பரே

    ReplyDelete
  13. /என்ன பெரியவரே!!! இந்த வயசிலேயும் ரொமேன்ஸ் கேட்குதா!
    இப்படிதான் கேட்கனும்னு நினைச்சேன்

    ஆனால் காதலுக்கு வயதில்லை என அருள் புரிய வைச்சிட்டார்.

    பாராட்டுக்கள் நண்பரே /

    நன்றி நாகராஜ்!!!

    ReplyDelete
  14. 60 m kalyanathuku pilakalthane dress edupinam? thangaleva poi edupinam? nalla kathai anegama ungada ella thodar kathaikalum vasishanan sari sirukathi epidi irukendu parpam endu athaum vaishu parthan.ellatilaum kalakreengal.suvarsayama kathaiya kondupora alage thani :-)
    Anonymous maathiri nan mudivai guess panella.

    ReplyDelete
  15. வாங்க சிநேகிதி,

    /60 m kalyanathuku pilakalthane dress edupinam? thangaleva poi edupinam? /

    பிள்ளைகளும் எடுத்தாலும் வாழ்க்கைத் துணைக்கு நாமே எடுத்துத் தருவது போல வருமா? ;)

    /nalla kathai anegama ungada ella thodar kathaikalum vasishanan sari sirukathi epidi irukendu parpam endu athaum vaishu parthan.ellatilaum kalakreengal.suvarsayama kathaiya kondupora alage thani :-)
    Anonymous maathiri nan mudivai guess panella./

    மிகவும் நன்றிங்க...மேலும் வாசித்து விட்டு கருத்து சொல்லுங்கள்!!!

    ReplyDelete
  16. எதிர் பார்க்காத முடிவு! நல்ல சிந்தனை! அருள் - அரசி அழகான பெயர்கள்.

    ReplyDelete
  17. /எதிர் பார்க்காத முடிவு! நல்ல சிந்தனை! அருள் - அரசி அழகான பெயர்கள்./

    ஆம் தீக்ஷண்யா
    முடிவு மட்டுமே யோசித்து விட்டு கதையை சும்மா வளர்த்தேன் :)
    அருளரசி??? :)

    ReplyDelete
  18. கதை மிகவும் அருமை...
    அது சரி அருள் யார் அந்த அரசி?

    ReplyDelete
  19. சான்ஸே இல்ல.. சூப்ப்ப்ப்ப்ப்ப்பர்...
    :-)
    பின்னிட்டீங்க போங்க!! ரீப்பீட்டே!!

    ReplyDelete
  20. வாங்க முத்து,

    / கதை மிகவும் அருமை...
    அது சரி அருள் யார் அந்த அரசி?/

    என்னங்க கதையப் படிச்சுட்டு இப்போ கேட்கறீங்க? அருளின் மனைவிதான் அரசி!!! (கதைல தான கேட்டீங்க?)

    ReplyDelete
  21. / சான்ஸே இல்ல.. சூப்ப்ப்ப்ப்ப்ப்பர்...
    :-)
    பின்னிட்டீங்க போங்க!! ரீப்பீட்டே!!/

    நன்றி சிநேகிதன் :)

    ReplyDelete
  22. romba nalla irruku.. kalakitinga.. super..

    ReplyDelete
  23. / romba nalla irruku.. kalakitinga.. super../

    நன்றிங்க சுகந்தி!!!

    ReplyDelete