காதல் யந்திரம்
சிறியவனாயிருந்த காலத்தில் எந்தப் பொருளையாவது தொலைத்துவிட்டு அப்பாவிடம் அடி வாங்கும்பொழுதெல்லாம் யோசித்திருக்கிறேன், கடந்த காலத்துக்கு சென்று அந்தப் பொருளை எங்கு வைத்தேனெனெத் தெரிந்து கொள்ள முடிந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்? காலயந்திரம் உருவாக்கும் சாத்தியக்கூறுகளுக்கான எனது தேடல் இப்படித்தான் துவங்கியது. பள்ளிக்காலம் வரைக்கும் எப்படியாவது கடந்த காலத்துக்கு செல்வதே எனது எதிர்கால இலட்சியமாக இருந்ததென்று சொல்லலாம். பள்ளியிறுதியாண்டு படித்துக்கொண்டிருந்த சமயம் உலகம் அழியப்போவதாக பரபரப்பான செய்திகள் வந்தபொழுதுதான் Nostradamus அறிமுகமானார். எதிர்காலத்தில் நடக்கப்போவதை முன்கூட்டியே கணித்திருக்கிறார் என்ற ஆர்வத்தில் அவரது The Prophecies புத்தகத்தை தேடிப்படித்தபோதும் எனக்கதில் பெரிய ஈர்ப்பு வரவில்லை. அறிவியலுக்கு அப்பாற்பட்ட எதனையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
+2 முடித்து திருச்சி RECயில் EEE சேர்ந்தபின்னர் எலக்ட்ரானிக்ஸ் சிப்புகள் எல்லாம் விதவிதமாக பிணைந்து காலயந்திரமாக உருவாவது போல கனவு கண்டேன், இரவு பகல் இரண்டிலும். கல்லூரிகாலத்தில் தான் வெறும் தேடலாக இருந்த எனதார்வம் ஓர் ஆராய்ச்சிக்கான துவக்கமாக உருமாறியிருந்தது. Time machine, time travel குறித்த புனைவுகள், கட்டுரைகள், ஆராய்ச்சிகள் என எல்லாவற்றையும் தேடித்தேடி வாசித்தேன். Sci-Fi திரைப்படங்கள் எனது கணினித் திரையில் விடிய விடிய ஓடிக்கொண்டிருந்த காலமது. காலம் என்பது நான்காவது பரிமாணம் என்பதும், கடந்த காலமும் எதிர்காலமும் சந்திக்கும் புள்ளிதான் நிகழ்காலமென்பதால், நிகழ்காலம் என்ற ஒன்றே கிடையாதென்பதும் புரிபடத் துவங்கியது. எனது புரிதலைக்கொண்டு கல்லூரி இறுதியாண்டில் காலயந்திரம் உருவாக்குவதற்கான Proof Of Concept மாதிரி நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் விளக்கினேன். எவனும் மதிக்கவில்லை. வெறுப்பாக வந்தது.
கல்லூரி முடித்ததும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து டெல்லிக்கு வந்த பின்னரும் காலயந்திரம் தன்னை உருவாக்க சொல்லி என்னைத் துரத்திக்கொண்டே இருந்தது. அலுவல் நேரம் போக தினமும் ஆறு மணிநேரமாவது இதற்காக செலவு செய்தேன். எனது அறை கிட்டத்தட்ட ஓர் ஆய்வுக்கூடம் போலவே வளர்ச்சியடைந்திருந்தது. நான்காண்டு உழைப்பு பெரிய முன்னேற்றமெதனையும் தந்துவிடவில்லை. போகாத ஊருக்கு வழித் தேடுகிறேனோ என்று சலிப்பேற்பட்ட போதும் புதிய ஊரினைக்கண்டு பிடிக்கும் காட்டுவழிப் பயணத்தைப்போல எனது ஆராய்ச்சி தொடர்ந்துகொண்டிருந்தது. எனது விடாமுயற்சி வீண்போகவில்லை. கடந்த காலம், எதிர்காலம் இரண்டுக்கும் பயணிக்கும்படி உருவாக்கியிருந்த எனது காலயந்திரம் அன்றிரவு எதிர்காலத்துக்கு மட்டும் வேலை செய்ய துவங்கியிருந்தது. காலயந்திரத்தில் என்னை இணைத்துக் கொண்டு அம்மாவை நினைத்தபடி கண்மூடினேன். அடுத்த ஓராண்டில் எனக்கும் அம்மாவுக்கும் நடக்கும் சந்திப்புகள் மனத்திரையில் ஓடத் துவங்கின. ஓராண்டுக்குப்பிறகு வெற்றுத்திரையே தெரிந்தது. காலயந்திரத்திலிருந்து வெளியே வந்தேன். எதையோ சாதித்துவிட்ட திருப்தியிருந்தது. சட்டென அந்த யோசனை வரவும் மீண்டும் காலயந்திரத்தில் என்னை இணைத்துக் கொண்டு காலயந்திரத்தையே நினைத்த படி கண்மூடினேன். முதல் காட்சியைப் பார்த்ததுமே என் இதயம் துடிப்பதை நிறுத்தி மகிழ்ச்சியில் குதிக்கத் துவங்கியது. ஆம், அடுத்தநாள் காலை அது கடந்த காலத்துக்கும் வேலை செய்வதை நான் பரிசோதிக்கும் காட்சி ஓடிக்கொண்டிருந்தது. காலயந்திரத்திலிருந்து வெளியே வந்தேன். யுரேகா யுரேகா என்று கத்திக்கொண்டு வீதியில் ஓட வேண்டும் போலிருந்தது. உற்சாகமிகுதியில் மதுவருந்துவதற்காக அந்த மதுவிடுதிக்குப் போயிருந்தேன். மூன்றாவது கோப்பை VSOP உள்ளே போனபிறகுதான் பக்கத்து டேபிளில் தனியே இருந்த அவனை நன்றாகப் பார்க்க முடிந்தது.
‘டேய், நீ அருள் தான?’ என்று கேட்டுக்கொண்டு அவனை நெருங்கினேன். அருள்முருகன் எனது கல்லூரித் தோழன். இத்தனை ஆண்டுகள் கழித்து இங்கெப்படி? அதுவும் தனியாக மதுவருந்திக்கொண்டு? விசாரித்த பிறகு எல்லாவற்றையும் சொன்னான் விரக்தியோடு. கல்லூரி முடிந்ததும் அவனும் பெங்களூரில் ஒரு நிறுவனத்தில் மூன்றாண்டுகள் வேலை பார்த்துவிட்டு MBA படிக்க இங்கு டெல்லி கல்லூரியில் சேர்ந்திருக்கிறான். அங்கே இளாவும் சேர்ந்திருக்கிறாள். இளா என்றால் இளவரசி. அவளும் எங்களுடையக் கல்லூரித்தோழி தான். பழைய கல்லூரித்தோழர்கள் என்பதால் இயல்பாகவே நெருங்கிய நண்பர்களாக இருந்திருக்கிறார்கள். இரண்டாமாண்டு தான் அவர்களுடைய நட்பு காதலாக மலர்ந்திருக்கிறது. காதலே வெட்கப்படுமளவுக்கு ஆறுமாதம் காதலித்திருக்கிறார்கள். அதன்பிறகு வழக்கம்போல இளா வீட்டில் அவளுக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் வரை செல்கையில் தன் காதலை வீட்டில் சொல்லியிருக்கிறாள். ஆனால் அன்பையே ஆயுதமாக்கி அவளை அந்தத் திருமணத்திற்குச் சம்மதிக்க வைத்திருக்கிறார்கள். இவனிடம் வந்து ‘என்ன மன்னிச்சிடு அருள். எல்லாத்தையும் மறந்துட்டு வேற கல்யாணம் பண்ணிக்கோ’ என்று அறிவுறை கூறிவிட்டுக் கொஞ்ச நேரம் அழுதுவிட்டு சென்றிருக்கிறாள். நாளைக்கு அவளுக்கு நிச்சயதார்த்தம் நடக்க இருக்கிறதாம். இவன் துக்கம் தாங்காமல் இங்கு வந்திருக்கிறான்.
அவன் கதை முழுவதையும் கேட்டதும் எனக்கிருந்த உற்சாகமே போய் விட்டிருந்தது. இருவரும் இன்னும் மூன்று கோப்பை அருந்தினோம். அவன் தானே பேசிக்கொண்டு அழ ஆரம்பித்தான். நான் சிகரட்டை எடுத்துப் பற்ற வைத்தேன். புகைக்குள் அருள் தெரிந்தான். இளா தெரிந்தாள். கால யந்திரமும் தெரிந்தது. அருளை எழுப்பி அவன் காதலை நான் காப்பாற்றுவதாக சொன்னேன். அவன் நம்பாமல் பார்த்தான். எனது செல்பேசியெண்ணை அவனிடம் கொடுத்து அடுத்த நாள் காலை 11 மணிக்கு என்னை தொடர்புகொள்ள சொல்லிவிட்டு அறைக்குத் திரும்பினேன். எனக்கு ‘திக்’ ‘திக்’ என்றிருந்தது.
அடுத்த நாள் காலை ‘எதிர்காலம்’ சொன்ன படியே, எனது காலயந்திரம் கடந்த காலத்துக்கும் வேலை செய்யத்துவங்கியிருந்தது. எதிர்காலம் போலவே இதுவும் ஓராண்டுக்கு மட்டுமே. எதிர்கால நிகழ்வுகளைப் பார்க்க மட்டும்தான் முடியும். ஆனால் கடந்த கால நிகழ்வுகளை மனத்திரையில் பார்க்கலாம் + குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் சென்று நமது செயல்களை மாற்றிவிடலாம். அதுதான் எனக்கு அருளையும் இளாவையும் சேர்த்துவிடும் நம்பிக்கையைத் தந்தது. பரிசோதனை செய்துகொள்வதற்காக காலயந்திரத்துடன் என்னை இணைத்துக்கொண்டு கடந்தகாலத்தை தெரிவு செய்தேன். அருளை மனதில் நினைத்துக்கொண்டு கண்மூடினேன். முந்தைய நாள் சந்திப்பு மனத்திரையில் ஓடியது. எனக்குத் தேவையான கடைசி இரண்டு நிமிட கால இடைவெளியைத் தெரிவு செய்து கொண்டு கடந்த காலத்துக்குள் நுழைந்தேன். என்னுடைய செல்பேசிக்கு பதிலாக வேறொரு எண்ணை அவனிடம் கொடுத்துவிட்டு கால யந்திரத்திலிருந்து வெளியேறினேன். எதிர்பார்த்தபடியே 11.15 வரை அவனிடமிருந்து அழைப்பு வரவில்லை. அதன்பிறகு அவனுடைய எண்ணுக்கு நானே அழைத்தேன். வேறொரு எண்ணைக் கொடுத்துவிட்டதற்காக என்னைத்திட்டினான். நான் போதையில் தவறாக சொல்லியிருப்பேனென்று மன்னிப்பு கேட்டுவிட்டு என் முகவரி சொல்லி எனதறைக்கு அவனை வரச்சொல்லியிருந்தேன். அவன் வரும்வரை எனக்கு இருப்பு கொள்ள வில்லை.
நான் செய்யப்போவது எதிர்பார்க்கும் பலனைக் கொடுக்குமா என்று படபடப்பாக இருந்தது. கால யந்திரந்திலேயே பார்த்துவிடலாமென அதனுடன் என்னை இணைத்துக்கொண்டு எதிர்காலத்தை தெரிவு செய்தேன். அருளையும், இளாவையும் மனதில் நினைத்துக்கொண்டு கண்மூடினேன். கதவு தட்டப்படும் அலாரம் காலயந்திரத்தில் கேட்டது. எரிச்சலோடு கால யந்திரத்திலிருந்து வெளியேறினேன். அருள் தான் வந்திருந்தான். எனது அறையையே வித்தியாசமாகப் பார்த்தான். அவனை அமரச் சொல்லிவிட்டு அவனுக்கு எனது காலயந்திரம் பற்றி முழுமையாக விளக்கினேன். நான் அதனை முழுமையாக பரிசோதித்துவிட்டேன் என்பதை நான் கடந்த காலத்துக்கு போய்தான் அவனிடம் கொடுத்த செல்பேசியெண்ணை மாற்றியதைச் சொல்லிப் புரிய வைத்தேன். நம்பியும் நம்பாமலும் என்னைப் பார்த்தான். நான் சொல்வதை மட்டும் செய்தால் போதும், எல்லாம் நல்லபடியாக நடக்குமென நம்பிக்கையளித்தேன். தலையாட்டினான். அவர்களுக்கிடையேயான கடைசிச் சந்திப்பில் என்ன நடந்ததென விசாரித்தேன். எல்லாவற்றையும் சொன்னான். கடைசியாக அவள் ‘என்ன மன்னிச்சிடு அருள். எல்லாத்தையும் மறந்துட்டு வேற கல்யாணம் பண்ணிக்கோ’ என்று சொன்னதாகவும் இவன் அமைதியாக இருந்ததாகவும், அவள் அழுதுகொண்டே சென்று விட்டதாகவும் சொன்னான். எனக்கு எரிச்சலாக வந்தது. விழுந்து விழுந்து காதலிக்கிறான்கள். ஆனால் அதைக் காப்பாற்றத் தெரியவில்லை.
அவர்களின் பெற்றோரைப் போலவே அவனும் அன்பையே ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டுமென சொல்லி அவனை காலயந்திரத்தோடு இணைத்தேன். இளாவை நினைத்துக்கொண்டு கண்மூடினான். அவன் கடந்த காலத்துக்குள் நுழையவேண்டிய கால இடைவெளியைத் தெரிவு செய்தான்.
‘…என்ன மன்னிச்சிடு அருள். எல்லாத்தையும் மறந்துட்டு வேற கல்யாணம் பண்ணிக்கோ’
‘இளா, உன்னோட சூழ்நிலை எனக்குப் புரியுது. நீ என்ன தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு நான் உன்னக் கட்டாயப்படுத்தல. அதே மாதிரி நான் இன்னொரு பொண்ணக் கல்யாணம் பண்ணிக்கனும்னு தயவு செஞ்சு என்னக் கட்டாயப்படுத்தாத. எனக்கு இன்னொரு கல்யாணம் கண்டிப்பா நடக்காது.பை’
சொல்லிக்கொடுத்த மாதிரியே சொல்லிவிட்டு கால யந்திரத்திலிருந்து வெளியேறினான்.
‘அப்பாடா இப்போதான் கொஞ்சம் பாரம் கொறஞ்ச மாதிரி இருக்குடா’
‘அருள், ஒன்னும் கவலப்படாத. எல்லாம் நல்லபடியா நடக்கும்! இளாவோட நம்பர் கொடுத்துட்டுப் போ’
‘நோட் பண்ணிக்கோ 9948645533’
அன்று கவலை குறைந்தவனாக அவனது விடுதிக்குக் கிளம்பிப் போனான்.
கொஞ்ச நேரம் தூங்கிவிட்டு இளாவுக்குத் தொலைபேசினேன். மிகவும் பதற்றமாக இருந்தது அவள் குரல். என் பெயரைச் சொன்னதும் அழ ஆரம்பித்துவிட்டாள். முந்தைய நாளிரவு மதுவருந்திவிட்டு வந்து விடுதியறையில் அருள் தற்கொலை செய்து கொண்டதாகவும் விடுதியே பரபரப்பாக இருப்பதாகவும் காவல்துறைக்கு தகவல் சொல்லப்பட்டிருப்பதாகவும் சொன்னாள். கடந்த காலத்தில் மாற்றம் செய்ததால் எல்லாமே மாறிவிட்டிருந்தது. முந்தைய நாளிரவு என்னுடன் மதுவருந்திவிட்டுப் போனவன் தற்கொலை செய்துகொண்டிருக்கிறான். அப்படியானால் இளாவின் செல்பேசியெண் எனக்கு எப்படி கிடைத்திருக்கும்? குழப்பமாக இருந்தது. விடுதிக்கு உள்ளேயிருந்து யாரையும் வெளியிலும், வெளியிலிருந்து யாரையும் உள்ளேயும் அனுமதிக்கவில்லையெனவும் அவள் வெளியில் மாட்டிக்கொண்டதாகவும் உள்ளே போக முடியவில்லையெனவும் அழுதாள். நான் வரும்வரை அவளை வெளியிலேயே இருக்க சொல்லிவிட்டு அவர்களுடைய விடுதிக்கு கிளம்பினேன்.
வாசலருகே இளா அழுதவாறு நின்றுகொண்டிருந்தாள். காவல்துறை அவள் மீதுதான் தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குத் தொடரும் ஆபத்திருப்பதைச் சொன்னதும் பதற்றமாய் என்னைப் பார்த்தாள். எனக்கெல்லாம் தெரியுமென சொல்லி அவளை எதுவும் பேச வேண்டாமெனக் கேட்டுக்கொண்டு எனதறைக்கு அழைத்துப்போனேன். எனது அறையையே வித்தியாசமாகப் பார்த்தாள். அவளை அமரச் சொல்லிவிட்டு அவளுக்கு எனது காலயந்திரம் பற்றி முழுமையாக விளக்கினேன். நான் அதனை முழுமையாக பரிசோதித்துவிட்டேன் என்பதையும் புரிய வைத்தேன். நம்பியும் நம்பாமலும் என்னைப் பார்த்தாள். நான் சொல்வதை மட்டும் செய்தால் போதும், எல்லாம் நல்லபடியாக நடக்குமென நம்பிக்கையளித்தேன். தலையாட்டினாள். அவர்களுக்கிடையேயான கடைசிச் சந்திப்பில் என்ன நடந்ததென விசாரித்தேன். எல்லாவற்றையும் சொன்னாள். கடைசியாக அவன்
‘இளா, உன்னோட சூழ்நிலை எனக்குப் புரியுது. நீ என்ன தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு நான் உன்னக் கட்டாயப்படுத்தல. அதே மாதிரி நான் இன்னொரு பொண்ணக் கல்யாணம் பண்ணிக்கனும்னு தயவு செஞ்சு என்னக் கட்டாயப்படுத்தாத. எனக்கு இன்னொரு கல்யாணம் கண்டிப்பா நடக்காது.பை’
என்று சொன்னதாகவும், இவள்
‘இன்னொரு கல்யாணம் பண்ணிக்கனும்னு எனக்கு மட்டும் இஷ்டமா அருள்? நீ பையனா பொறந்துட்ட, உன்னால கல்யாணமே பண்ணிக்காம இருக்க முடியும். நா பொண்ணாப் பொறந்துட்டேன் கல்யாணம் பண்ணிக்காம இருக்க நா விருப்பப்பட்டாலும், இந்த சமுதாயம் விடாது. மனசுல உன்ன நெனச்சுட்டு இன்னொருத்தனோட வாழ்ந்துதான் ஆகனும். அதத்தான் பண்ணப்போறேன்.பை.’ என்று சொல்லிவிட்டு அழுதுகொண்டே சென்று விட்டதாகவும் சொன்னாள். எனக்கு எரிச்சலாக வந்தது. விழுந்து விழுந்து காதலிக்கிறாள்கள். ஆனால் அதைக் காப்பாற்றத் தெரியவில்லை. அருளைப் போலவே அவளும் மரணத்தையே ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டுமென சொல்லி அவளை காலயந்திரத்தோடு இணைத்தேன். அருளை நினைத்துக்கொண்டு கண்மூடினாள். அவள் கடந்த காலத்துக்குள் நுழையவேண்டிய கால இடைவெளியைத் தெரிவு செய்தாள்.
‘இளா, உன்னோட சூழ்நிலை எனக்குப் புரியுது. நீ என்ன தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு நான் உன்னக் கட்டாயப்படுத்தல. அதே மாதிரி நான் இன்னொரு பொண்ணக் கல்யாணம் பண்ணிக்கனும்னு தயவு செஞ்சு என்னக் கட்டாயப்படுத்தாத. எனக்கு இன்னொரு கல்யாணம் கண்டிப்பா நடக்காது.பை’
‘மன்னிச்சிடு அருள். நீயும் இன்னொரு கல்யாணம் பண்ணிக்குவன்னு எதிர்பார்த்துதான் நான் இப்படியொரு முடிவுக்கு ஒத்துக்கிட்டேன். நீ இப்படி சொன்னபின்னாடி நான் மட்டும் சந்தோசமாவா இருந்திடப்போறேன்? உன்னதான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு முடிஞ்ச வரைக்கும் போராடுவேன். இன்னொருத்தருக்கு தான்னு முடிவாயிடுச்சுன்னா, அந்த கல்யாணத்துக்கு முன்னாடி என் உயிர் போயிடும்.’
சொல்லிக்கொடுத்த மாதிரியே சொல்லிவிட்டு கால யந்திரத்திலிருந்து வெளியேறினாள்.
‘அப்பாடா, இப்பதான் கொஞ்சம் பாரம் கொறஞ்ச மாதிரி இருக்குப்பா’
‘இளா, ஒன்னும் கவலப்படாத. எல்லாம் நல்லபடியா நடக்கும்’
அன்று கவலை குறைந்தவளாக அவளது விடுதிக்குக் கிளம்பிப் போனாள்.
ஒரு மாதம் கழித்து ஒருமுறை இருவரையும் ஒரு திரையரங்கில் சந்தித்தேன். மீண்டும் இணைந்து விட்டார்கள் போல. அவனுக்குத் தெரியாமல் அவளும், அவளுக்குத் தெரியாமல் அவனும் ரகசியமாக நன்றி சொன்னார்கள். நான் இருவருக்கும் பொதுவாக புன்னகைத்தேன்.
ஆறுமாதம் கழித்து அருள் தொலைபேசியில் என்னையழைத்து மிகவும் பதற்றமாகப் பேசினான்.
‘மச்சான், தப்புப் பண்ணிட்டோம்டா…இளா செத்துட்டாடா…’
‘எப்படிடா? என்ன நடந்தது?’
‘லீவ்ல வீட்டுக்குப் போயிருக்கா. அப்பவே கல்யாணத்த முடிச்சிடனும்னு அவங்க வீட்ல ரொம்ப கம்பல் பண்ணியிருப்பாங்க போல… விஷம் குடிச்சிட்டா… போலீஸ் இப்போ என்னத்தேடுதாம். அனேகமா உன் வீட்டுக்கும் இந்நேரம் போலீஸ் வந்துட்டிருக்கும்’
அவன் சொல்லி முடிப்பதற்குள் ஒரு சத்தத்தோடு அவன் செல்பேசி உயிரிழந்தது.
பதற்றத்தோடு கால யந்திரத்துடன் என்னை இணைத்துக்கொண்டு கடந்த காலத்தை தெரிவு செய்தேன். இளாவை மனதில் நினைத்துக்கொண்டு கண்மூடினேன். கடந்த காலத்துக்குள் நுழையவேண்டிய கால இடைவெளியைத் தெரிவு செய்தேன்.
‘அப்பாடா, இப்பதான் கொஞ்சம் பாரம் கொறஞ்ச மாதிரி இருக்குப்பா’
‘இளா, ஒன்னும் கவலப்படாத. எல்லாம் நல்லபடியா நடக்கும். அப்பறம் ஒரு விசயம். இது சும்மா அருளுக்காக தான். நீ எந்த சூழ்நிலையிலயும் தற்கொலை முடிவுக்கெல்லாம் போகக்கூடாது. தற்கொலை பண்ணிக்கிறத விட நீங்க இப்பவே ஒரு பதிவுத்திருமணம் பண்ணிக்கிறது உங்களப் பாதுகாக்கும்’
நினைத்த மாதிரியே சொல்லிவிட்டு கால யந்திரத்திலிருந்து வெளியேறினேன்.
ஒரு மாதம் கழித்து அருளும், இளாவும் வந்திருந்தார்கள். அருள் வீட்டு சம்மதத்தோடு சொன்ன மாதிரியே பதிவுத்திருமணம் செய்துகொண்டு விட்டார்களாம். அப்புறம் இளா வீட்டிலும் வேறு வழியில்லாமல் ஏற்றுக்கொண்டு இரண்டாவது முறையாகத் திருமணம் நடக்கவிருக்கிறதாம். அழைப்பிதழ் கொடுத்துவிட்டுப் போனார்கள். எனது கால யந்திரம் காதல் யந்திரமாய் மாறிப்போனதில் மகிழ்ச்சியே.
அவர்களுடையத் திருமணத்திற்கும் சென்றிருந்தேன். பரிசுப்பொருளைக் கொடுத்துவிட்டு கேமராவுக்கு போஸ் கொடுத்துக்கொண்டிருந்த போது கதவு தட்டப்படும் அலாரம் காலயந்திரத்தில் கேட்டது. எரிச்சலோடு கால யந்திரத்திலிருந்து வெளியேறினேன். அருள் தான் வந்திருந்தான். எனது அறையையே வித்தியாசமாகப் பார்த்தான். அவனை அமரச் சொல்லிவிட்டு அவனுக்கு எனது காலயந்திரம் பற்றி முழுமையாக விளக்கினேன். நான் அதனை முழுமையாக பரிசோதித்துவிட்டேன் என்பதை நான் கடந்த காலத்துக்கு போய்தான் அவனிடம் கொடுத்த செல்பேசியெண்ணை மாற்றியதைச் சொல்லிப் புரிய வைத்தேன். நம்பியும் நம்பாமலும் என்னைப் பார்த்தான். நான் சொல்வதை மட்டும் செய்தால் போதும், எல்லாம் நல்லபடியாக நடக்குமென நம்பிக்கையளித்தேன். தற்பொழுதுதான் இனி நடக்கப்போகிற எல்லாவற்றையும் எதிர்காலத்துக்குப் போய்ப் பார்த்துக் கொண்டிருந்ததைச் சொன்னேன்.
முதன்மதலாக அவன் கடந்த காலத்துக்கு சென்று பேசியதையும், இருந்தும் இளா பிடிவாதமாக இருந்ததால் அவன் தற்கொலை செய்துகொண்டதையும், பிறகு இளா கடந்தகாலத்துக்கு சென்று அவன் மனதை மாற்றியதையும், பின்னர் அவளும் தற்கொலை செய்துகொண்டதையும், இறுதியில் நான் கடந்த காலத்துக்கு சென்று இளா மனதை மாற்றி பதிவுத்திருமணம் செய்துகொள்ள வைத்ததையும், இரு வீட்டு சம்மதத்தோடு நடந்த இரண்டாவது திருமணத்தில் நான் கலந்து கொண்டதைப் பார்த்துக்கொண்டிருக்கும் போது அவன் இப்போது வந்ததையும் சுருக்கமாகக்கூறினேன்.
பேயறைந்தவனைப்போல இருந்த அருள் , ‘நீ இன்னும் மாறவே இல்லையாடா’ என்று திட்டிவிட்டு தப்பித்து ஓடுபவனைப்போல் ஓடிவிட்டான்.
அதன்பிறகு என்னைக் கொண்டு வந்து இங்கே அடைத்துவிட்டார்கள். எல்லாம் அவனுக்கு உதவப்போய் வந்த வினை.
அந்த நோயாளி சொன்ன பதிலை ஒரு கதையைப்போல குறிப்பெடுத்துக்கொண்ட பொழிலன், பொன்னியிடம் சொன்னான் ‘its really different ponni’ . ‘yeah, But interesting. இத அதீத கற்பனைனு பாராட்டறதா இல்ல மனச்சிதைவு நோய்னு சொல்றதானு எனக்குத் தெரியல’ ஆமோதித்துவிட்டு அடுத்த வார்டுக்கு நகர்ந்தாள் பொன்னி.
‘முருகேசன்… நாங்க உளவியல் ஆய்வுக்காக உங்க கிட்ட பேச வந்திருக்கோம். நீங்க எப்படி இங்க வந்தீங்க?’
‘எனக்கு ரொம்ப நாளா என் முதுகுல யாரோ உட்காந்திருக்கிற மாதிரியே பயமா இருக்கு மேடம்…நான் சின்ன வயசுல எல்லாரையும் உப்பு மூட்டைத் தூக்கிட்டு விளையாடிட்டு இருக்கும்போது….’