கொஞ்சங்கூட விடியாத நல்ல இருட்டு. இன்னும் கோழி கூட கூப்புட்ல. வெங்காயத் தோட்டத்துல தண்ணியடைக்கறதுக்காவ தெக்கியூர் ரோட்ல சைக்கிள்ல பறந்துகிட்டு இருந்தாரு கிட்டாஞா.சாமியாடித் தோட்டத்துக்கிட்ட மேக்கத் திரும்பும்போதுதான் - அந்நேரத்துல தெக்க இருந்து யாரோ வெக்கு வெக்குனு ஓடியார மாதிரி இருந்துது. வர்றவங்க என்னமோ கத்திகிட்டே வாராப்ல இருந்துது. காதோட சேத்து துண்ட உருமா கட்டிருந்ததால கிட்டாஞாவுக்கு ஒரு சத்தமும் கேக்கல. ஏதாவது கெட்டது நடந்து போச்சோனு வெசனப்பட்டவரு துண்ட அவுத்துக்கிட்டே மேக்கத் திரும்பாம தெக்கையே விட்டாரு சைக்கிள.
'அது யாரு கிட்டாஞாவா? ஆஞா*… கணக்கம்பட்டியாரு ஊர்ல இருக்காரா?' ஓட்டத்துலையே சத்தம் போட்டுகிட்டு வந்தது வேற யாருமில்ல. நம்ம வடவத்தூர் பால்காரன் பொண்டாட்டிதான். அவளும் ஓடியார இவரும் சைக்கிள மிதிக்க ரெண்டு பேரும் கிட்டத்துல வந்துட்டாங்க.
'இருக்காப்ல… இருக்காப்ல… என்ன சமாசாரம்… நீ இந்நேரத்துல ஒத்தைல வர்றவ? வூட்ல ஆம்பளையாளு இல்லியா'
'அதையேன் ஆஞா கேக்குற… அந்தாளுக்கு ராத்திரில இருந்து வவுத்துநோவு… அனத்திகிட்டே இருக்குது… சுக்குத்தண்ணி கொடுத்தும் ஒன்னும் கேக்கல.. இன்னும் பால்கறக்கவும் கெளம்பாம வவுத்தப் புடிச்சுக்கிட்டு படுத்துருக்கு… அதான் கணக்கம்பட்டியாருகிட்ட துண்ணூறு* வாங்கியார சொன்னுச்சு… குறுக்கால ஓடியாரேன்… என்ன செத்த அவர் வூட்ல எறக்கி வுட்றீயா' - மூச்சுவுடாம பொலம்புறா அவ.
'ஏறு ஏறு இதுக்குதான் இந்தக் கோலத்துல ஓடி வந்தவளா.. நான் என்னமோ ஏதோனு தவுதாயப்* பட்டுட்டேன்' அவள ஏத்திகிட்டு கணக்கம்ப்பட்டியாரு வூட்டுக்கு சைக்கிள மிதிச்சாரு கிட்டாஞா.
எருமப்பட்டிக்கு தெக்க இருந்து வலையப்பட்டிக்கு வடக்க வரைக்கும் கணக்கம்பட்டியாருன்னா தெரியாதவங்க இருக்க மாட்டாங்க. அவரு பேரு அங்கமுத்துப்புள்ள னு ஊர்ல கொஞ்சம் பெருசுங்களுக்குதான் தெரியும். கணக்கம்பட்டியில இருந்து இங்க பொழைக்க வந்ததால கணக்கம்பட்டியாருனு பேராகிப்போச்சு. அந்தக்காலத்துல அவரு, கிட்டாஞா, கங்காணியெல்லாம் ஒரு சோட்டு. கணக்கம்பட்டியாருக்கு கொலதெய்வமெல்லாம் அவங்கூரு அங்காயிதான்னாலும் முருகனதான் மொதல்ல கும்புடுவாரு. காலங்காத்தால குளிச்சி முடிச்சு வந்தாருன்னா குறி கேக்க, நல்ல நாள் குறிச்சுட்டு போவ, துண்ணூறு மந்திரிச்சு வாங்கிட்டுப் போறதுக்குன்னு ஒரு கூட்டம் நிக்கும். அவருக்கும் சோசியம் கீசியமெல்லாம் எதுவும் தெரியாது. பஞ்சாங்கத்துல நல்ல நாளு பாத்து சொல்லுவாரு. சோழி போட்டு முடிவு சொல்லுவாரு. முருகனக் கும்புட்டு கொஞ்சம் துண்ணூறு அள்ளிக் கொடுப்பாரு. அவ்வளவுதான். ஆனா அவரு சொல்ற நாளு கெழமையெல்லாம் நல்லதாதான் நடந்திருக்கு. சோழி போட்டு முடிவு சொன்னாருன்னா பத்துக்கு எட்டு பெசகாம நடந்திரும். அவரு மந்திரிச்சத் துண்ணூற பூசிக்கிட்டு கொஞ்சம் வாயில போட்டுகிட்டா எல்லா நோவும் போன எடந்தெரியாம ஓடீரும். அப்பிடி ஒரு ராசி.
எப்பவாது மவளப் பாக்கனும்னு இருந்தா பொனாசிப்பட்டிக்கு சொல்லாம கொள்ளாம ஓடிருவாரு. நல்ல வேள அன்னைக்கு கணக்கம்பட்டியாரு ஊர்லதான் இருந்தாரு.
வாசல்லயே கட்டுல்ல குறுக்கிகிட்டுப் படுத்திருந்தவரு சைக்கிளு சத்தம் கேட்டு நாய் கொலைக்கவும் எந்திரிச்சுக்கிட்டாரு. துண்ணூறுக்கு இந்தமாதிரி நேரங்கெட்ட நேரத்துல அடிக்கொருதரம் ஆளுங்க வர்றதுதான். பால்காரன் பொண்டாட்டிய பாத்ததும் 'யாரு பால்காரன் பொண்டாட்டியா? ஓம்புருசனுக்குன்னுதான் வவுத்துநோவு வரம் வாங்கிட்டு வந்திருக்குமே' ன்னு சிரிச்சுகிட்டே கேணி மோட்டுக்குப் போயிட்டாரு. எந்நேரமா இருந்தாலும் அவரு குளிச்சிட்டு வந்துதான் துண்ணூறு மந்திரிக்கிறது. இந்நேரத்துல தொட்டித்தண்ணி சிலீர்னு இருக்குந்தான். ஆனா அவரு குளிக்காம துண்ணூறு அள்ளித் தர்றதில்ல. வேட்டிய அவுத்துட்டு துண்ட கட்டிகிட்டு தொட்டித்தண்ணிய மூனு வாளி மொண்டு தலையோட ஊத்திக்கிட்டு நிமுசத்துல வந்து சேந்துட்டாரு. மொதல்ல துண்ட அவுத்து இடுக்குல இறுக்கி துண்ணூற அள்ளி அவரு பூசிக்கிட்டதும், அவரப் பாக்க கோயில் பூசாரி கணக்காதான் இருந்துச்சு. சாயம்போன முருகன் படத்துக்கு முன்னாடி கையெடுத்து கும்பிட்டவரு 'இந்தப் பூசத்துக்கு பழனி போவும்போது புது படம் வாங்கியாரனும்'னு நெனச்சுக்கிட்டே ஒரு முருகன் பாட்ட மனசுக்குள்ள பாடுனாரு. பயபத்தியோட கொஞ்சம் துண்ணூற அள்ளி அவகிட்ட நீட்டுனதும், அத வாங்கி முந்தியில முடிஞ்சுகிட்டு பால்காரன் பொண்டாட்டியும் கெளம்பிட்டா. கிட்டாஞாவும் வெங்காயத்தோட்டத்துக்கு கிளம்பறதையும் பாத்துகிட்டே மனசுக்குள்ள, 'முருகா பால்காரனுக்கு நோவு கொணமாவனும்'னு வேண்டிகிட்டு கணக்கம்பட்டியாரும் டீத்தண்ணி வைக்க போயிட்டாரு. இன்னும் கோழி கூப்புட்லன்னாலும் அன்னைக்குப் பொழுது கணக்கம்ப்பட்டியாருக்கு விடிஞ்சிடுச்சுனுதான் சொல்லனும். முருகனக் கும்பிட்டு துண்ணூறு பூசிட்டா அவருக்கு பொழுது விடிஞ்சிருச்சுன்னு அர்த்தம்.
அன்னைக்குக் காத்தால ஆறுமுவம் டீக்கடையில பெருசுங்க எல்லாம் நாயம் பேசிக்கிட்டு இருக்கும்போது ரெண்டாவது வட்டம் பால் ஊத்த வந்தான் வடவத்தூர்க்காரன்.
'ஏய் என்னப்பா மொத சாமந்தான் ஒனக்கு வவுத்துநோவுன்னு ஒம்பொண்டாட்டி கணக்கம்பட்டியாருகிட்ட துண்ணூறு வாங்கிட்டுப் போனா… நீ என்னடான்னா 'எனக்கென்னா நோவு எனக்கேது சாவு'ங்கற கணக்கா பாலத்தூக்கிகிட்டு சைக்கிள்ல சுத்துறவன்' - கேட்டது கிட்டாஞாதான்.
'கிட்டாஞா…. கணக்கம்பட்டியாரு துண்ணூறு உள்ள போனதுக்கப்புறமும் வவுத்து நோவு வவுத்துல தங்குமா? நோவுக்கே நோவு கண்டிருக்குமில்ல?' சிரிச்சுக்கிட்டே போயிட்டான் பால்காரன்.
கணக்கம்பட்டியார இப்படி யாராவது ஒசத்தியா* சொல்லிட்டா ஒடனே கிட்டாஞாவுக்கு உச்சி குளுந்துரும். பால்காரன் போனதும் கிட்டாஞா ஆறுமுவத்துகிட்ட சொன்னாரு - 'கணக்கம்பட்டியான்கிட்ட துண்ணூறு வாங்கிப் பூசுனா பழனி மல முருகங்கையால பூசிக்கிட்ட மாதிரிடா'
கணக்கம்பட்டியார் மேல எல்லாருக்கும் எப்பிடி இப்படி ஒரு நம்பிக்கனு ஆறுமுவத்துக்கு ஆச்சர்யமா இருக்கும். அவன் இந்தூருக்கு வந்து கட போட்டு ஏழு வருசந்தான் ஆச்சு.
'ஏன் ஆஞா கணக்கம்பட்டியாருக்கு நெசமாலுமே அருளிருக்கா?' அவன் அப்படி கேட்டதும் கிட்டாஞா பழைய கதைய எடுத்து விட்டாரு. அது பத்து வருசத்துக்கு முந்தி நடந்தது.
பத்து வருசத்துக்கு முந்தி ஒரு நாளு மாரியாயிக் கோயிலுக்கு கும்பாயிசேகம் பண்ணீட்றதுன்னு கோயில்ல வச்சு ஊர் பெருசுங்க முடிவு செஞ்சாங்க.ஆளாளுக்கு இன்னின்ன வேலைனு போனமாசம் செத்துப்போன கந்தசாமிதான் சொல்லிக்கிட்டு வந்தாரு. கிட்டாஞாவுக்கு ராமக்கல் ஐயனப் பாத்து பேசியாரப் பொறுப்பக் கொடுத்திருந்தாங்க. கணக்கம்பட்டியார வரவு செலவ பாத்துக்க சொல்லிருந்துது.மக்யா நாளே*, ராமக்கல்லுக்கு ஐயனப் பாக்கப் போன கிட்டாஞா சித்திர மாசம் பத்தாந்தேதினு நாள் குறிச்சுகிட்டு வந்துட்டாரு. வளர்பெறையில வெள்ளிக்கிழமையா அமஞ்சது நல்ல அம்சமுன்னு ஊராளுங்களுக்கெல்லாம் சந்தோசம்.ஆனா கணக்கம்பட்டியாருக்கு அந்த நாள சொன்னதும் சுருக்குனு ஆகிப்போச்சு. ஏன்னா அதுக்கும் ஆறு வருசத்துக்கு முந்தி சித்திர மாசம் இதே ரெண்டாவது வெள்ளிக்கிழம தான் பிடாரியம்மங் கோயில் திருநாள்ல ஒரு கெட்டது நடந்துது. பங்காளிங்களுக்குள்ள இருந்த வாப்பேச்சு சண்ட முத்தி வெட்டுக் குத்துனு ஏழு உசுர இந்த ஊரு காவு கொடுத்துது அன்னைக்குதான். அதனாலயே கணக்கம்பட்டியாரு அந்த நாள கேட்டதும் கிட்டாஞாகிட்ட மெல்ல விசயத்த சொல்லிட்டாரு. அன்னைக்கு சாய்ங்காலமே கிட்டாஞா ராமக்கல்லுக்குப் போய் அந்த ஐயனையே ஊருக்கு இழுத்துட்டு வந்துட்டாரு. கோயில் திண்ணையிலயே இந்த சமாசாரத்தப் பேசி முடிவு பண்ணீர்றதுன்னு கூட்டம் போட்டிருந்தாங்க.
(மீதிக்கதய நாளைக்கு சொல்றேன்...)
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.
இது ரொம்ப அநியாயம்..இப்படி பாதில நிறுத்தக்கூடாது..
ReplyDeleteகதை ரொம்ப அருமை..
//
ReplyDeleteகணக்கம்பட்டியாரு துண்ணூறு உள்ள போனதுக்கப்புறமும் வவுத்து நோவு வவுத்துல தங்குமா?
//
'கணக்கம்பட்டியான்கிட்ட துண்ணூறு வாங்கிப் பூசுனா பழனி மல முருகங்கையால பூசிக்கிட்ட மாதிரிடா'
//
இது தெரியாம நான் அப்பப்ப டாக்டர பாக்க போயிடறேனே.
என்னபா அவர் அட்ரஸ்??
:-))
நல்ல பேச்சு நடை உங்களுக்கு கை வந்திருக்கு.. தொடருங்க.. வாழ்த்துக்கள்..
ReplyDeleteநல்லா இருக்கு.அடுத்த பாகத்துக்கு வெயிட்டீஸ்...
ReplyDelete//எருமப்பட்டிக்கு தெக்க இருந்து வலையப்பட்டிக்கு வடக்க வரைக்கும் கணக்கம்பட்டியாருன்னா தெரியாதவங்க இருக்க மாட்டாங்க//
உங்கூருப் பக்கமும் வலையபட்டி இருக்குதுங்ளா? எனக்குத் தெரிஞ்சு வலையபட்டி,சிவகங்கை ஜில்லாவுல பொன்னமவராவதி கிட்டயில்ல இருக்கு??
கணக்கம்பட்டியாரு வந்துட்டாரா.. அடுத்த பாகத்தையும் படிச்சிட்டுக் கருத்தச் சொல்றேன் :) நல்லா எழுதீருக்கப்பா கதைய.
ReplyDeleteஊர்கதை நல்லாதானே இருக்கு. எந்த ஊருண்ணே இது??
ReplyDelete/இது ரொம்ப அநியாயம்..இப்படி பாதில நிறுத்தக்கூடாது..
ReplyDeleteகதை ரொம்ப அருமை../
அடுத்தப் பகுதி போட்டுட்டேன்பா :)
சிவா,
ReplyDelete/இது தெரியாம நான் அப்பப்ப டாக்டர பாக்க போயிடறேனே.
என்னபா அவர் அட்ரஸ்??
:-))/
சொல்றேன் சொல்றேன் நாளைக்கு சொல்றேன் :)
/நல்ல பேச்சு நடை உங்களுக்கு கை வந்திருக்கு.. தொடருங்க.. வாழ்த்துக்கள்../
ReplyDeleteநன்றிங்க ரசிகன்... ஊர்ல பேசுறததான் அப்படியே எழுதிருக்கேன்...
/நல்லா இருக்கு.அடுத்த பாகத்துக்கு வெயிட்டீஸ்.../
ReplyDeleteநன்றி சுதர்சன் :)
//எருமப்பட்டிக்கு தெக்க இருந்து வலையப்பட்டிக்கு வடக்க வரைக்கும் கணக்கம்பட்டியாருன்னா தெரியாதவங்க இருக்க மாட்டாங்க//
உங்கூருப் பக்கமும் வலையபட்டி இருக்குதுங்ளா? எனக்குத் தெரிஞ்சு வலையபட்டி,சிவகங்கை ஜில்லாவுல பொன்னமவராவதி கிட்டயில்ல இருக்கு??/
வலையப்பட்டி நாமக்கல் - முசிறி பாதையில் வரும். எருமப்பட்டி, நாமக்கல் - துறையூர் பாதையில் வரும்.
எருமப்பட்டிக்கும் வலையப்பட்டிக்கும் இடையில் இருக்கிற பாதையில்தான் கதை நடக்கும் ஊர் இருக்கு :)
/கணக்கம்பட்டியாரு வந்துட்டாரா.. அடுத்த பாகத்தையும் படிச்சிட்டுக் கருத்தச் சொல்றேன் :) நல்லா எழுதீருக்கப்பா கதைய./
ReplyDeleteஆமா ராகவன் கணக்கம்பட்டியாரு வர வேண்டிய நேரத்துலதான் வந்திருக்காரு :) நாளைக்கு தெரியும் ;-)
/ஊர்கதை நல்லாதானே இருக்கு. எந்த ஊருண்ணே இது??/
ReplyDeleteஇது எங்க ஊரும்மா :) அதாவது நாமக்கல் தெரியுமா? அதுல இருந்து ஒரு 15 கி.மீ கெழக்கால வந்தா எருமப்பட்டி வரும் அங்கன இருந்து ஒரு 3 கி.மீ தெக்கால வந்தா நம்மூருதான் ;)
ஆல் இன் ஆல் அழகுராசாவாயிட்டயேப்பா...
ReplyDeleteபாடலாசிரியர்
கதாசிரியராவும் இருக்காரு..
அப்படியே பணம்கிணம் போடறாப்பல ஒரு ஆளைப்பிடிப்பா..
/ஆல் இன் ஆல் அழகுராசாவாயிட்டயேப்பா...
ReplyDeleteபாடலாசிரியர்
கதாசிரியராவும் இருக்காரு../
நீங்களும் கலாய்க்கறீங்களா?
/அப்படியே பணம்கிணம் போடறாப்பல ஒரு ஆளைப்பிடிப்பா../
புடிச்சு அப்புறம் என்னங்க்கா பண்றது??? ;-?