Monday, December 19, 2005

மேலும் சில த(பி)த்துவங்கள்!

1.குவார்ட்டர் அடிச்சுட்டுக் குப்புறப் படுக்கலாம் - ஆனா
குப்புறப் படுத்துக்கிட்டு குவார்ட்டர் அடிக்க முடியாது!

2.நாய் வாலை ஆட்டலாம் - ஆனா
வால் நாயை ஆட்ட முடியாது!

3. Trainக்கு டிக்கட் வாங்கிட்டு Platformல உட்காரலாம் - ஆனா
Platformக்கு டிக்கட் வாங்கிட்டு Trainல உட்கார முடியாது!

4. காக்கா என்னதான் கறுப்பா இருந்தாலும் அது போடற முட்டை வெள்ளை! - அதோட
முட்டை என்னதான் வெள்ளையா இருந்தாலும் அதுக்குள்ள இருக்க காக்கா கறுப்புதான்!

5.வாயால மூச்சு விட முடியும் - ஆனா
மூக்கால தண்ணிக் குடிக்க முடியுமா?

வாழ்க்கைத் தத்துவம் :

நீ எவ்வளவு பெரிய Dancer-ஆ இருந்தாலும்
உன் சாவுக்கு உன்னால ஆட முடியாது!

(நன்றி : மின்மடலில் அனுப்பிய நண்பருக்கும் அவருக்கனுப்பிய முகம் தெரியாத நண்பருக்கும்)

(தமிங்கிலத்தில் பதிந்ததற்கு மன்னிக்க!)

Thursday, December 15, 2005

நம்ம ஊர் நடு நெலமவாதி!


நம்ம ஊர்ப்பக்கம் பாத்தீங்கன்னா நடு நெலம வாதின்னு சொல்லிக்கிட்டு
நெறயப்பேர் திரியறாங்க!
ஒரு தடவ மாமனுக்கும் மச்சானுக்கும் தகராறுன்னு நம்ம நடுநெலம
வாதியக் கூப்பிட ஊர் மக்க வந்திருந்தாங்க!
பிரச்சன என்னான்னா நம்ம மாமங்காரங் ஒரு ஆயிரம் ரூவாவ
மச்சாங்காரங்கிட்ட குடுத்து வச்சிர்ந்திருக்கான்.
இப்பத் திருப்பிக் கேட்டா மச்சாங்காரன் தர முடியாதுன்னுட்டான்.
சரி நம்ம நடு நெலமக் கார்ரு எப்பட்றா பிரச்சனயத்
தீக்கறார்னுப் பாத்தேன்.
நேரா மச்சாங்கிட்டப் போனவரு ஆயிரத்தையும் புடுங்குனாரு.
மாமங்கிட்ட ஐநூறு, மச்சாங்கிட்ட ஐநூறு எண்ணிக்
குடுத்துட்டுப் போய்ட்டாரு.
நாங் கேட்டதுக்குச் சொல்றாரு :
"ரெண்டுப் பக்கமும் பிரச்சினப் பண்ணிக்கக் கூடாதில்ல - அதாம்ப்பா".

நாங் என்னாச் சொல்றன்னா நாயம்னு தெரிஞ்சா அந்தப்
பக்கஞ் சாஞ்சிட வேண்டியதுதான? இதுல என்னா வெக்கம்?

என்னங்க நாஞ் சொல்றது?

Wednesday, December 14, 2005

தேர்தல் - 2006

அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் எந்தக் கட்சி/கூட்டணி ஆட்சி பீடம் ஏறும், எந்த கட்சி/கூட்டணி மண்ணைக் கவ்வும் என்பதைத் தேர்தல் முடிந்ததும் தெரிந்து கொள்ளலாம் :-)))

நமது கரையில் நடக்கும் தேர்தலில் நீங்கள் வெற்றி பெறும் கூட்டணியிலா, இல்லையா? என்று தெரிய பக்கத்தில் உள்ள வாக்குப் பெட்டியில் உங்கள் வாக்கைப் பதியும் படி கேட்டுக் கொள்கிறோம்! நன்றி வணக்கம் _/\_ வாக்குபோட ----->

-சந்திப்போம்.

updated 0n - 16 - 02 - 2008 :

இங்கு நடந்த தேர்தல் நீங்கள் கையெழுத்துப் போடுவது தமிழிலா இல்லை ஆங்கிலத்திலா என்பது பற்றி. டெம்ப்ளேட் மாற்றியதில் வாக்குப்பெட்டி காணாமல் போய்விட்டது :) உங்கள் கையெழுத்தைப் பற்றி கருத்து சொல்ல விரும்பினால் மறுமொழியிடவும். நன்றி.

கரூர் - திருச்சி இலவச சேவை


குழந்தையை அணைத்துக் கொள்ளும் தாயின் கரத்தைப் போல வஞ்சி மாநகரை அணைத்துக் கொண்டு செல்கிறது - வரலாற்றில் ஆண் பொருணை என வருணிக்கப்பட்ட - அமராவதி ஆறு. ஆடி மாதத்தின் ஒரு மாலைப் பொழுதில் வஞ்சியில் இருந்து புறப்பட்ட நமது பேருந்து அமராவதி ஆற்றைக் கடந்து கிழக்கு நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.பழங்காலத்தில் சேர மன்னர்கள் சோணாடு சென்ற ராஜபாட்டை இதுவாகத் தான் இருக்குமோ? நாமறியோம்! இதோ சாலைக்கு வலப்புறத்தில் தெரிகிறதே இது என்ன? பத்தடி உயரத்தில் கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட மன்னர்களின் கோட்டை மதில் சுவர் போல இருக்கிறதே! உள்ளே பிரம்மாண்டமாகத் தெரிகிறதே அது சேர மன்னனின் அயுதக் கொத்தளமா? ஆ மேலே புகைப் போக்கிகள் போலத் தெரிகிறதே!வெற்றி வாகை சூடிய மன்னனை வரவேற்கக் காத்திருக்கும் யானைகளைப் போல சாலையின் இரு பக்கமும் நான்கு காத தூரத்துக்கு வரிசையாக நிற்கின்றனவே - சரக்கு வண்டிகள். ம். இப்போதுதான் தெரிகிறது.இது புலியூர் செட்டிநாடு பூசுமண் தொழிற்கூடமல்லவா!
இப்போது பேருந்து செல்கின்ற சாலைக்கு இணையாக இடப்புறத்தில் வந்து கொண்டிருக்கிறது இருப்புப்பாதை.அதையும் தாண்டி வடக்கேப் பார்த்தால் தெரிவது பசுமை! பசுமை!பசுமை! பொன்னியாற்றின் நீரால் பாசனம் பெறும் கிராமங்களில் உள்ள வாழைத்தோப்புக்களும், தென்னந்தோப்புக்களுமே பசுமைக்குக் காரணம். இப்போது சாலையின் வலப்புறத்தில் மறுபடியும் நாம் பார்ப்பது புலியூரில் பார்த்தது போன்ற அதேக் கட்டமைப்பு. இவை என்ன? மன்னர்களின் அரண்மனைகளில் உள்ள சுரங்கப்பாதைகளைப் போல இத்தனைக் குழாய்கள். ஓ! பேருந்து மாயனூருக்கு வந்து விட்டதா? இது தமிழ்நாடு குழாய்த் தயாரிப்புத் தொழிற்சாலை அல்லவா?
பேருந்தின் இரைச்சல் ஒலியையும் மீறி ஏதோ சல சல வென ஓர் ஓசைக் கேட்கிறதே இது என்ன? ஆகா! வடக்கில் இருந்து இரு வாய்க்கால்கள் சாலைக்கு அடியேப் புகுந்து தெற்கே வந்து இதோ சாலைக்கு இணையாக கிழக்கு நோக்கி செல்கின்றன! அந்த வாய்க்கால்களில் புரண்டோடும் தண்ணீர் எழுப்பிய ஓசை தானா அது?அந்த வாய்க்கால்கள் பொன்னியாற்றில் இருந்து தெற்கில் உள்ள ஊர்களுக்காகப் பிரிக்கப் பட்டவையாயிருக்கும். பேருந்து கிழக்கு நோக்கி செல்ல செல்ல வாய்க்கால்களுக்கும் சாலைக்கும் உள்ள இடைவெளி அதிகமாகிக் கொண்டே செல்கிறது.
பேருந்து இப்போது கிருட்டிணராயபுரம், மகாதானபுரம் ஆகிய சிற்றூர்களைத் தாண்டி வந்து நின்று விட்டது.இப்போது பேருந்தின் இரு பக்கமும் மக்களின் சத்தம் அதிகமாகக் கேட்கிறதே! வாழைப்பழங்களையும், மல்லிகை, கனகாம்பரம் போன்ற பூக்களையும் கையில் வைத்துக் கொண்டு பயணிகளிடம் வியாபாரம் செய்வோரைக் காண முடிகிறது.ஒவ்வொருப் பேருந்திலும் பத்துப் பதினைந்து பேர் சன்னலில் கூப்பாடு போட்டுக் கொண்டு இருக்கின்றனர்.எதற்காக பேருந்து நிற்கிறது என்று நாம் அறிந்து கொள்ள வேண்டாமா? வாருங்கள் பேருந்தில் இருந்து இறங்கி சற்று தூரம் காலாற நடந்து வரலாம்.நமது பேருந்துக்கு முன் இத்தனைப் பேருந்துகளும், சரக்கு வண்டிகளும், மகிழ்வுந்துகளும் காத்திருக்கின்றனவா?இன்னும் முன்னே சென்று பார்ப்போம். கிழக்கு நோக்கி சென்று கொண்டிருந்த சாலை இப்போது வடக்கு நோக்கி வளைகிறது.அது என்ன சாலைக்கு நடுவேத் தடுப்பு போடப்பட்டிருக்கிறது? ம் . இதுதானா செய்தி ! இதுவரை நாம் வந்த சாலைக்கு இணையாக இடப்புறத்தில் வந்து கொண்டிருந்த இருப்புப்பாதையை,பேருந்து செல்லும் சாலை இங்கே குறுக்கிடுகிறது.அதனால் தான் இருப்புப்பாதையில் தொடர்வண்டி வரும் நேரங்களில் சாலைப் போக்குவரத்துத் தடுக்கப்படுகிறது. அந்த சமயங்களில் பயணிகளிடம் பொருட்களை விற்றுப் பிழைப்பு நடத்துகின்றனர் இந்த சிறு வியாபாரிகள்.
தூரத்தில் போருக்கு அழைக்கும் சங்கொலியைப் பொல ஒரு சத்தம் கேட்கிறது - அது தொடர்வண்டியாகத்தான் இருக்கும், வாருங்கள் நாம் மீண்டும் பேருந்தில் ஏறிக் கொள்வோம். தொடர்வண்டிப் போனப் பிறகு போக்குவரத்து திறந்துவிடப்படுகிறது. பேருந்து மெல்ல ஊர்ந்து இருப்புப்பாதையைக் கடந்து வடக்கே செல்கிறது. நாம் இப்போது மீண்டும் ஒரு வாய்க்காலைக் கடக்கிறோம். பேருந்து உடனே மீண்டும் கிழக்கு நோக்கித் திரும்புகிறது. நமக்கு இடப்புறம் நாம் பார்ப்பது என்ன - ஏரியா? கடலா? சமுத்திரமா? வெறும் நீர்ப்பரப்பாகத் தெரிகிறதே! நீரின் ஓட்டத்தைப் பார்த்தபின் தான் புரிகிறது - இது தான் பொன்னியாறு.ஆடி மாதம் ஆதலால் பொன்னிப் பெருக்கெடுத்து ஓடுகிறாள்.
அப்படியே மெதுவாகத் திரும்பி நமக்கு வலப்புறம் பார்க்கிறோம். அட வாய்க்காலே ஓர் ஆற்றைப் போல் அல்லவா ஓடிக்கொண்டு இருக்கிறது.வாய்க்காலில் ஒரு பக்கக் கரையில் சிறுவர்களும் பெரியவர்களும் குளித்துக் கொண்டு இருக்கும் காட்சியைக் காண்கிறோம். பெரியவர்கள் உழைத்தக் களைப்பில் நீராடுவதை அவர்களின் நிதானமானக் குளியலில் காண முடிகிறது. ஆனால் சிறுவர்கள் அப்படி அல்ல - அவர்கள் துள்ளி விளையாடுவதையும், பாலத்தில் இருந்து வாய்க்காலில் குதித்து நீந்துவதையும் பார்க்கிறோம். அப்படியே வாய்க்காலின் அடுத்தக் கரைக்கு நம் பார்வையை செலுத்தினால் அங்கு பெண்கள் குளிப்பதையும், துணிகளைத் துவைத்துக் கொண்டிருப்பதையும் காண்கிறோம் அதற்கு மேலும் அங்கு பார்வையை செலுத்துவது பண்பாடில்லை ஆதலால் அந்தக் கரையைத் தாண்டி பார்க்கிறோம் - அங்கே இருப்புப்பாதை ஓடிக்கொண்டிருக்கிறது.
இதென்ன மன்னனை வாழ்த்தும் மக்களின் பேரொலி போல ஒரு சத்தம்.பேருந்தின் வேகமும் குறைகிறதே.சாலையில் மக்கள் கூட்டம் ஒன்று ஆற்றில் குளித்த ஈரத்துடன் வந்து கொண்டிருக்கிறது. தமிழரின் இசை வாத்தியமானப் பறை எழுப்பும் ஒலி நமது நரம்புகளைக் கூட முறுக்கேற்றுகிறதே! சன்னலில் எட்டிப் பார்ப்போம்! ஓ! ஆடிப் பெருக்கின்போது கிராமத்தில் இருக்கும் தம் குலதெய்வங்களை பொன்னியாற்றுக்குக் கொண்டு வந்து குளிப்பாட்டி எடுத்துச் செல்வது பொன்னியாற்றின் கரையோரக் கிராம மக்களின் வழக்கம்.இதுவும் அப்படியான ஒரு கிராம மக்களின் குலதெய்வத் திருவிழாதான் போலும்! சாமி சிலைகளை தலையில் தூக்கி வந்துகொண்டிருப்பவரிடம் எத்தனை மகிழ்ச்சி - சாமியை அவரேத் தொட்டுக் குளிப்பாட்டித் தூக்கி வருவது மகிழக்கூடியதுதான் - இல்லையா?. மக்கள் அனைவரும் தத்தம் குலதெய்வப் பாடலைப் பாடியபடி செல்கின்றனர். ஆற்றுக்குள் எட்டிப் பார்த்தால் இதுமாதிரியான குலதெய்வ திருவிழா ஆங்காங்கே நடந்து கொண்டிருப்பது தெரிகிறது. சரி பொன்னி ஆற்றின் மறு கரையில் ஏதோ நகருவது போலத் தெரிகிறதே அது என்ன? ஆம் நமது சாலையைப் போலவே பொன்னி ஆற்றின் மறுகரையை ஒட்டி ஒரு சாலை செல்கிறது - அது நாமக்கல்லையும் முசிறியையும் இணைக்கும் சாலை. அதற்கு அடுத்து ஒரு வாய்க்கால் உண்டு அதற்குப் பெயர் வடகரை வாய்க்கால். நமக்கு வலப்புறம் ஓடுவது தென்கரை வாய்க்கால்.
இதோ மீண்டும் சங்கொலி போன்ற அந்த சத்தம் கேட்கிறது! தொடர் வண்டி தான் வருகிறது போல, நாம் சற்று திரும்பி வலப்பக்கம் பார்ப்போம். ஆமாம் தொடர்வண்டி சீராப்பள்ளியிலிருந்து வஞ்சி நோக்கிச் செல்கிறது நமக்கு எதிர்த் திசையில்! பேருந்திலிருந்தும் தொடர்வண்டியில் இருந்தும் வாய்க்காலில் இருந்தும் சிறுவர்களும் இளைஞர்களும் கைகளை ஆட்டி சிரிக்கிறார்கள். சில குறும்புக்கார இளைஞர்கள் விசிலடித்து சத்தம் எழுப்புகின்றனர். நாம் அப்படியே கருப்பூர் முருகன் கோயிலையும், பல சிற்றூர்களையும் தாண்டி சென்றுகொண்டிருக்கையில் நமக்கு வலப்புறம் வந்து கொண்டிருந்த வாய்க்கால் திடீரென சாலைக்கடியேப் புகுந்து நமக்கு இடப்புறமாக வர ஆரம்பிக்கிறது.பொன்னியாறும் நம் கண்ணுக்குத் தெரியும் தொலைவில் இருந்து விலகி செல்கிறது.வாய்க்காலுக்கும் ஆற்றுக்கும் இடையே நாம் பல தென்னந்தோப்புகளையும், வாழைத்தோப்புகளையும் காண்கிறோம்.வாய்க்காலில் நீர்ப்பரப்பை ஒட்டி வளைந்திருக்கும் மரக்கிளைகளில் சிறுவர்கள் தொங்கிக்கொண்டு விளையாடுவதைப் பார்த்துக்கொண்டே நாம் குளித்தலைக்கு வந்து சேர்கிறோம். குளித்தலை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஊர் - அதை சொல்லாமல் சென்றால் இரசிகர்கள் கோவித்துக் கொள்வார்கள் - கலைஞர் முதன் முதலாகப் போட்டியிட்டு வென்ற சட்டமன்றத் தொகுதிதான் இந்தக் குளித்தலை.இப்போது சைவர்கள் அப்படியே மூக்கைப் பிடித்துக் கொள்ளவும் - வாய்க்காலை ஒட்டி மீன் விற்பனை நடக்கிறதல்லவா? மீன் வாசம்/வாடை பேருந்துக்குள்ளும் வீசுகிறது.குளித்தலைக்குள் நாம் நுழைவதற்கு முன்பே ஒரு சாலை வடக்கேப் பிரிகிறது - அது குளித்தலையையும் , முசிறியையும் இணைக்கும் பாலத்துக்குச் செல்லும் சாலை. பொன்னியாற்றின் குறுக்கேக் கட்டப்பட்டுள்ள பாலங்களிலேயே அகலமானப் பாலம் இதுவாய்த்தானிருக்கும்.
நாம் குளித்தலையைத் தாண்டி சிறுகமணி , பெருகமணி என பல ஊர்களைக் கடந்து போய்க்கொண்டுஇருக்கிறோம்...சாலை ஓரங்களில் இப்போது நாம் பார்க்கும் பேருந்துகள் வித்தியாசமாய்த் தெரிகின்றனவே! அதில் உள்ள மக்களும் இந்த ஊர் மக்கள் போல் தெரியவில்லையே! மக்கள் அனைவரும் கொண்டாட்ட மனநிலையில் இருப்பதைப் பார்த்தால் இது முக்கொம்பாக இருக்குமோ? ஆம்..இது முக்கொம்பேதான்...பொன்னியாற்றில் இருந்து கொள்ளிடமாறு பிரியும் இடமான இந்த முக்கொம்பைப் பார்க்க பல ஊர்களில் இருந்து மக்கள் வந்திருக்கிறார்கள்.அதுவும் ஆடி மாதம் பார்ப்பதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். சரி நாம் இன்னொரு நாள் சாவகாசமாக உள்ளே நுழைந்து பார்ப்போம்.இப்போது சீராப்பள்ளி நோக்கி நமது பயணத்தைத் தொடருவோம்.
பத்தாண்டுகளுக்கு முன் ஏரியாகவும், குளமாகவும் இருந்த இடங்களில் இப்போது தீப்பெட்டிகளை அடுக்கி வைத்தது போலத் தெரிகிறதே - இவைதான் அடுக்குமாடி குடியிருப்புகளா? சாலை மேட்டிலும் வீடுகள் பள்ளத்திலும் இருப்பதைப் பார்க்கிறோம். கண்ணுக்குப் பசுமை மறைந்து ஒருவித தூசிப்படலம் தெரிய ஆரம்பிக்கிறது. இதுவரை பேருந்தின் இரைச்சல் மட்டுமேக் கேட்டு வந்த நமக்கு வெளியே இருந்தும் பல இரைச்சல் சத்தம் கேட்க ஆரம்பிக்கிறது. நாம் சொல்லாமலேயே இரசிகர்கள் யூகித்திருப்பார்கள் - நாம் சீராப்பள்ளி வந்துவிட்டதை. நாம் பேருந்தை விட்டு இறங்கும் இந்த இடந்தான் சத்திரம் பேருந்து நிலையம். நாம் நமது பயணத்தில் பிரிய வேண்டிய நேரம் வந்து விட்டது - பிரிதொறு பயணத்தில் மீண்டும் உங்களை சந்திக்கிறேன்.

( (அ)ண்ணே! வடக்கப் போறவங்கல்லாம்...இங்ங்னயே நில்லுங்ணே பஸ்ஸு இங்ங்னயே வரும்......தெக்கப் போறவங்க சென்ட்ரலுக்குப் போய்டுங்ணே
(அ)க்கா! உங்ளுக்குந்தாங்க்கா சொல்றேன்! )


கரூரில் இருந்து திருச்சிக்கு பேருந்திலோ தொடர்வண்டியிலோ சென்றவர்கள் கண்டிப்பாக ரசித்திருப்பார்கள் என்று நம்புகிறேன்.
மற்றவர்களும் ரசித்திருந்தால் "+" குத்துங்க இல்லாட்டி "-" குத்துங்க

- சந்திப்போம்

Thursday, December 01, 2005

களவும் கற்று மற!


பொருள் – 1 :

களவும் – திருட்டு ( முதலான தீயப் பழக்கங்களை )
கற்று மற – எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு பிறகு மறந்து விட வேண்டும்……

பொருள் – 2:

களவும் கற்று – களவு வாழ்க்கையின் நினைவுகளை
மற – கற்பு ( திருமண ) வாழ்க்கையில் மறக்கவும்….

இரண்டில் எது சரி ?
இரண்டுமே தவறா?

தமிழறிந்தவர்கள் சொல்லுங்கள்!


பிறகு,

தாயை நேசிப்பதாகச் காட்டிக்கொள்ள மனைவியைக் கொடுமைப் படுத்தும் கணவர்களுக்குப் பிடித்தப் பழமொழி – தாய்க்குப் பின் தாரம்!
ஏதோ தாய்க்கு அடுத்த நிலையில் தாரத்தை வைப்பது போல அந்தப் பழமொழி அர்த்தப்படுத்தப் பட்டு விட்டது.

பொதுவாக ஒருத் துறையில் சிறந்து விளங்கும் ஒருவரை அதேத் துறையில் கடந்த காலத்தில் சிறந்து விளங்கிய ஒருவரோடு ஒப்பிட்டுப் பேசும்போது,
அவருக்குப் பிறகு இவர்தான் சிறந்தவர் என்று சொல்லுவது வழக்கம்.

உ-ம் : சிவாஜிக்குப் பிறகு சிறந்த நடிகர் கமல்தான்! ( உதாரணத்துக்கு தான் சொல்லியுள்ளேன்… )

அது போல ஒருவனுடைய வாழ்விலும் முதல் 25 – 30 வருடங்களுக்குத் தாய்த் துணையாய் இருக்கிறாள்…
அதற்குப் பிறகு அல்லது அவளுடைய காலத்துக்குப் பிறகு துணையாய் இருப்பவள் – மனைவி…

எனவே சுருக்கமாக சொன்னால்,

தாய்க்குப் பின் தான் தாரம் – என்பது தவறு
தாய்க்குப் பின் தாரம் தான் என்பதே சரி - எனது கருத்து

(உங்களுக்கெல்லாம் தெரிந்த விதயம் தான் என்றாலும்
மணமானவர்கள் அனுபவத்தைச் சொல்லுங்கள்!)