Wednesday, June 08, 2011

பெண்ணழகி பெரும்பேரழகி



மேலே உள்ள தெலுங்குப் பாடலுக்கான எனது தமிழ் வரிகள் கீழே :

பெண்ணழகி பெரும்பேரழகி
ஐம் பொன்னழகி கருங் கண்ணழகி
என்னழகா என் பேரழகா
பூ சொல்லழகா அது செய்யழகா

நீயே காதலி நானே சாரதி
காதல் பயணம் பழகு
பாதை இருக்கு பாதம் இருக்கு
ஏனோ முளைக்கும் சிறகு

விலகி பழகி நழுவி தழுவி
விரலும் விரலும் கோர்த்தால் சித்தம்
இதழும் இதழும் கோர்த்தால் முத்தம்

ச ச ரி ரி க க பதநி
ச ச ரி ரி க க பதநி

நீ நடக்கும் சாலையெல்லாம்
பூச்செடிகள் பூத்துக் குலுங்கும்
நீ பேசும் வார்த்தையெல்லாம்
தேனீக்கள் தேடித் திரியும்
நீ சிரிக்கும் சிரிப்பையெல்லாம்
விண்மீன்கள் விலைக்கு வாங்கும்
நீ சொல்லும் கவிதையெல்லாம்
என்காதல் கொள்ளை கொள்ளும்
இரவின் மடியில் இதயம் உறங்க
இமைகள் விசிறி விசிறும்
கனவின் தயவில் இமைகள் உறங்க
இசையாய்த் துடிக்கும் இதயம்

இதயம் இமைக்கும் இமைகள் துடிக்கும்
கண்ணும் கண்ணும் கலந்தது கொஞ்சம்
நெஞ்சும் நெஞ்சும் கலந்தது மிஞ்சும்

ச ச ரி ரி க க பதநி
ச ச ரி ரி க க பதநி

கோவிலுக்கு நீவரும் பொழுது
உனைக்கண்டு கோபுரம் குனியும்
காதலிக்கும் உயிர்கள் எல்லாம்
நீவந்தால் உயிலை எழுதும்
மாமழையில் நனையும் பொழுது
உனைத்தொட்டு மழையும் குளிக்கும்
நள்ளிரவைத் தாண்டும் விடியல்
நீப்பேச உறக்கம் உறங்கும்
உறங்கும் வரையில் மயங்கும் நிலையில்
இமையில் இருக்கும் கனவு
விழிக்கும் வரையில் விழியின் திரையில்
தனியாய்த் தவிக்கும் நனவு

இரவும் பகலும் கனவும் நனவும்
நீயும் நானும் பேசியது காதல்
நீயும் நானும் பேசியது காதல்

ச ச ரி ரி க க பதநி
ச ச ரி ரி க க பதநி

Wednesday, May 11, 2011

காதல்வரவு

வெறுமையாய் உருகும்
எனது வைகறைக் கனவுகளெல்லாம்
நீ வந்து உறையத்தான்.

விருப்பமின்றி தொடரும்
ஓரிரு கெட்டப்பழக்கங்களும்
உனது விருப்பத்தின்பொருட்டு விட்டொழிக்கத்தான்.

வெள்ளைத்தாளில் கருப்பில் வரைந்த
எனது கோட்டோவோயங்கள் எல்லாம்
உனக்குப் பிடித்த வண்ணங்களால் நிரப்பத்தான்.

அரைப்பக்கம் மட்டுமே எழுதப்படும்
எனது நாட்குறிப்புகளெல்லாம்
உனதுரையால் பூர்த்தி செய்யத்தான்.

காதல் வழியும்
எனது கற்பனைக் கவிதைகளெல்லாம்
நீ வந்து நிஜமாக்கத்தான்.

Monday, February 21, 2011

புகைப்படம்

மழையில் நனைந்த உனது படத்திலிருந்து
துளித்துளியாய் சொட்டுகிறது
அழகு.

*

பூக்கடையில் யாரோ
உனது புகைப்படம்
விற்கிறார்கள்.

*

உனது படங்கள் இரண்டைக் காட்டி
எதில் அழகாயிருக்கிறேனென கேட்கிறாய்.
அப்படியே படம் பிடிக்கலாம் போலிருக்கிறது.

*

நீயிருப்பது
புகைப்படமுமல்ல, நிழற்படமுமல்ல
இசைப்படம்.

*

விளக்கணைந்த இரவுகளில்
உனது படம் ஒளிர
வெளிச்சமாகிறது வீடு.

Monday, February 14, 2011

காதல் எழுதிய கவிதைகள்

காதல் எழுதிய கவிதைகள் (அ) கவிதை எழுதிய காதல்

*

நீ இயல்பாகத்தான் பேசுகிறாய்.
எனக்குத்தான் உன்னிடம் பேசுவதே
இயல்பாகி விட்டது.

*

எல்லா மொழியிலும்
எனக்கு காதலைக் குறிக்கும் ஒரு சொல்
உனது பெயர்.

*

உன்னுடைய ஒவ்வொரு பிறந்தநாளிலும்
நீ தன்னை ஒரு முறை சுற்றி வந்ததாய் பெருமைப்படுகிறது
சூரியன்.

*

உனது அக்கறையை அனுபவிக்கவேனும்
இன்னும் சிலநாள் நீடிக்கட்டும்
எனது காய்ச்சல்.

*

நீ பரிசளித்த விலையுயர்ந்த உடையினும்
எனக்குப் பிடித்த நிறத்துக்காக நீ செலவழித்த
மூன்று நாள் தேடலில் ஒளிந்திருக்கிறது காதல்.

*

நீ பார்த்து பார்த்து
உன்னிலும் அழகாகிறது
உன் வீட்டுக் கண்ணாடி.

*

'பார்க்காமலே காதலிக்கிறப் பழக்கம் மீன்களுக்குண்டு' என்கிறேன்.
'உண்மையாகவா?' என கண்களை உருட்டுகிறாய்.
சந்திக்காத காதல் மீன்கள் இரண்டும் ஒன்றுபோல உருள்கின்றன.

*

குளிரோ வெப்பமோ
குறைக்கிற ரகசியம் கற்றிருக்கிறது
உன் முத்தம்.

*

இசையென வழிகிறது.
வீணை நரம்புகளும் உனது விரல் நரம்புகளும்
காதலில் பதிக்கிற முத்தங்கள்.

*

எத்தனை கவிதையெழுதியென்ன?
பிடித்திருக்கிறதென நீ சொல்லப்போகிற ஒன்றிரண்டைத் தவிர
மற்றவை எல்லாம் தற்கொலை செய்துகொள்ளப்போகின்றன!

Thursday, February 03, 2011

அழகு குட்டி செல்லம்

அண்ணன் மகள் மித்ராவுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்து காணொளி பதிவாக...
[flashvideo filename=video/Mithra-Video/MithraBday2011.flv /]