Thursday, August 04, 2011

கண்ணாடி(ய) கவிதை

*

உலக அழகியின் புகைப்படத்தை
உன் வீட்டில்
கண்ணாடி என்பீர்களா?

*

உனதழகை
நீ பார்க்கும்பொழுது
பிரதிபலிக்கிற கண்ணாடி
நீ பார்க்காதபொழுது
உள்வாங்கிக் கொள்கிறது தெரியுமா?

*

உன் வீட்டுக் கண்ணாடிக்கு
தினமும் உனதழகை ரசிக்கும்
அதிர்ஷ்டம் தந்த மச்சங்களாய் மின்னுகின்றன
நீ ஒட்டி வைத்த ஸ்டிக்கர் பொட்டுகள்.

*

நீ வரைந்த கண்ணாடி ஓவியங்களின்
அழகை விசாரிக்கும்பொழுது
உன் 'கண்'ணாடியதை எப்படி ஓவியமாக்க?

*

உன்னை அழகாய்க் காட்டியதற்காக
நீ முத்தமிட்ட கணத்திலிருந்து
தன்னை அழகாய்க் காட்டிக்கொள்ள தவிக்கிறது
உன் வீட்டுக் கண்ணாடி.

Monday, August 01, 2011

மித்ரா மை ஃப்ரெண்ட்

ஓராண்டுக்கு முன்னர் அண்ணன் மகள் மித்ராவின் பேச்சு :

*

மித்ரா : அவளுடைய சுடிதாரை எடுத்துக்கொண்டு வந்து , அம்மா இதோட ஃப்ரெண்ட் எங்கம்மா?
அண்ணி : ஒன்றும் புரியாமல் விழிக்க..
மித்ரா : எங்கம்மா இதோட ஃப்ரெண்ட்?
அண்ணி : ட்ரெசுக்கு ஏது பாப்பா ஃப்ரெண்ட்?
மித்ரா : இந்தா இங்க இருக்கு. என்றபடி அந்த சுடிதாரின் துப்பட்டாவை எடுத்துக்கொண்டு ஓடுகிறாள்.

(சுடிதாரின் ஃப்ரெண்ட் அதன் துப்பட்டா என்பது உங்களுக்கு தெரியுமா?)

*

மொட்டைமாடியில் மித்ராவுக்கு சோறு ஊட்டுகையில்..

அண்ணி : அங்கப் பாரு பாப்பா.. அதான் அப்பா காக்கா.. அது அம்மா காக்கா..
மித்ரா : அது?
அண்ணி : அதுதான் பாப்பா காக்கா..
மித்ரா : எங்கம்மா சித்தப்பா காக்கா?

(காக்காவில் சித்தப்பாவைத் தேடுகிறாளா? சித்தப்பாவை காக்கா என்கிறாளா?)

*

ஜனனியின் அத்தை வீட்டில்..

ஜனனியின் அத்தை : மித்ரா பரவால்ல அமைதியா இருக்கா. ஜனனியா இருந்தா இந்நேரம் என்ன சட்னியாக்கியிருப்பா..
மித்ரா : ஜனனி உங்கள சட்னியாக்கினா, நான் உங்கள தோசையாக்கிடுவேன்!

(என்னா வில்லத்தனம்?)

*

வீட்டிலிருந்து கடற்கரைக்கு கிளம்பும்போது அண்ணா, அண்ணி, மித்ரா மூவரும் ஒரு பைக்கில் கிளம்ப, நான் தனியே ஒரு பைக்கில் கிளம்ப, மித்ரா சொல்லிச் சிரிக்கிறாள் : சித்தப்பா உங்க பின்னாடி உட்கார ஆள் இல்லையே..

( நான் என்ன சொல்ல? :) )

*

நான் US கிளம்பும்போது சமையல் பொருட்கள், பாத்திரங்களை அடுக்கிக்கொண்டு வந்ததைப் பார்த்த மித்ரா என்ன நினைத்துக்கொண்டாளோ, பக்கத்து வீட்டுக்காரர் ‘உங்க சித்தப்பா எதுக்கு அமெரிக்கா போயிருக்காங்க?’ என்று கேட்டபோது சொல்லியிருக்கிறாள் : ‘எங்க சித்தப்பா சமையல் வேல செய்ய போயிருக்காங்க!’

( அவ சொன்னதும் பாதி உண்மைதான் :))