Wednesday, January 30, 2008

ஜனனி.. ஜனனி..

என்னுடைய தீபாவளிப் பதிவுகளைப் படித்துவிட்டு “நீங்க எழுதற கவிதைகளவிட கவித்துவமானது, ஒரு குழந்தை, அதுவும் பெண்குழந்தை வளர்வதை அருகிலிருந்து ரசிப்பது” அப்படின்னு ஒரு தோழி சொன்னாங்க. உண்மைதான். குழந்தைகளின் குறும்பும், ரகளையும் அருகிலிருந்து அனுபவிப்பதைவிட சுகமானது வேறென்ன? ஊரிலிருக்கும் சொற்ப நாட்களில் அக்கா மகள் ஜனனியின் குறும்புகளை வீடியோ/புகைப்படங்களாக எடுத்துவைத்தாலும், எழுத்தில் கொஞ்சம் பதிவுசெய்துகொண்டால், பின்னால் வாசிக்க அவளுக்கொரு மலரும் நினைவாக இருக்கட்டுமென்று இந்தப்பதிவு!

நான் : ஜனனி தமிழ் படிக்கலாமா?
ஜனனி : நீ சொல்லிக் குடு மாமா (புத்தகத்தோடு வருகிறாள்)
நான் : அ – அம்மா
ஜனனி : நல்லா சொல்லிக் குடு மாமா
நான் : நல்லாதான பாப்பா சொல்லிக் குடுக்குறேன்? அ – அம்மா (நன்றாக இடைவெளிவிட்டு சொல்கிறேன்)
ஜனனி : அப்படி இல்ல மாமா …. அ for அம்மா

(a for apple சொல்லிக் கொடுத்தபின்னாடி தமிழ் சொல்லிக் கொடுத்தா இப்படித்தான் )

***

முதல் நாள் pre kg வகுப்புக்கு போய்வந்தவளிடம்
அக்கா : பாப்பா உனக்கு ஸ்கூல் பிடிச்சிருக்கா?
ஜனனி : ம்ம்ம் நல்லாருக்கும்மா… லேடர் வச்ச சறுக்கல் எல்லாம் இருக்கும்மா
அக்கா : மிஸ்ச புடிச்சிருக்கா? மிஸ் கிட்ட நல்லாப் பேசினியா?
ஜனனி : அந்த மிஸ் நல்லாவே இல்லம்மா
அக்கா : என்னது நல்லாவே இல்லையா?
ஜனனி : வயசான மிஸ்சா இருக்காங்கம்மா…

(அடிப்பாவி)

***

அக்கா : ஊஞ்சல்ல இருந்து எறங்கு, இது என் தம்பி எனக்கு வாங்கிட்டு வந்தது.
ஜனனி : இது எங்க மாமா எனக்கு வாங்கிட்டு வந்தது போம்மா
அக்கா: எனக்குதான் என் தம்பி வாங்கிக் கொடுத்தான்.எறங்குறயா இல்லையா?
ஜனை : உனக்கு வேணும்னா உங்க மாமாகிட்ட போய் வாங்கிக்க போம்மா

(அதற்கு மேல் என்னப் பேச?)

***

டாம் அண்ட் ஜெர்ரி பார்த்துக்கொண்டு இருக்கும்போது,
நான் : ஜனனி, அந்த வெள்ளப் பூனை உன்ன மாதிரியே இருக்குல்ல?
ஜனனி : ம்ம்ம்….நீதான் அந்த கருப்புப் பூனை.
அக்கா : (கோபத்துடன்) ஏய், யாரடி கருப்புனு கிண்டல் பண்ற?
ஜனனி : (கூலாக, டிவியில் இருந்து முகத்தைத் திருப்பாமல்) உங்க தம்பியதாம்மா!

(கேட்ட கேள்விக்கு பதில் சொல்றதுன்னா இது தானா?)

***

அவள் அடம்பண்ணிய ஒரு சமயத்தில், அவளை ஏமாற்றுவதாக நினைத்துக்கொண்டு,
நான் : சரி ஜனனி, நான் ஹைதராபாத் கிளம்பறேன். அப்புறம் பாக்கலாம்.
ஜனனி : ச்சும்மா இது பண்ணாத மாமா
நான் : எது பண்றேன்?
ஜனனி: பந்தாதான்!

(எத்தன தடவ பல்பு வாங்கினாலும் எனக்கும் புரியவே மாட்டேங்குது)

***

அவளுக்கு முடி வெட்டப் போன சலூனில்,
முடிவெட்டுபவர் : எந்த மாதிரிங்க வெட்டலாம்
நான் பதில் சொல்வதற்கு முன்பே,
ஜனனி : எனக்கு நீளமா வளர்ற மாதிரி வெட்டி விடுங்க
முடிவெட்டுபவர் : ???

அங்கே தலைக்கு ‘டை’யடித்துக் கொண்டிருந்தவரைப் பார்த்து,
ஜனனி : மாமா, அந்தத் தாத்தா தலைலேயே ட்ராயிங் வரையறாங்க (சிரித்துக்கொள்கிறாள்)
தலைக்கு ‘டை’யடித்துக் கொள்பவரும் கஷ்டப்பட்டு சிரித்துக்கொண்டார்.

***

அவளுக்கு ஒரு சிறிய குடை வாங்கிக் கொடுத்து,
நான் : தினமும் இத ஸ்கூலுக்கு எடுத்துப் போயிட்டு, வரும்போது மழை பேஞ்சுதுன்னா பிடிச்சுக்கனும் சரியா?
ஜனனி : அம்ப்ரல்லா எடுத்துட்டுப் போனா மிஸ் திட்டுவாங்க மாமா. நான் எடுத்துட்டுப் போக மாட்டேன். அம்மாதான் கொண்டு வரனும்.
நான் : மழ பேஞ்சா மிஸ்செல்லாம் அம்ப்ரல்லா எடுத்துட்டுதான் பாப்பா வருவாங்க. அதனால உன்னலாம் திட்டமாட்டாங்க.
ஜனனி : மிஸ்செல்லாம் அம்ப்ரல்லா எடுத்துட்டு வரமாட்டாங்க!
நான் : அப்பறம் எப்படி வருவாங்க?
ஜனனி : புடவ கட்டிட்டு வருவாங்க!

(கேள்வி தப்பா? பதில் தப்பா?)

***

அக்கா : நேஷனல் பேர்ட் என்ன?
ஜனனி : பீக்காக்
அக்கா : நேஷனல் ஃப்ளவர் என்ன?
ஜனனி : ( முழிக்கிறாள் )
அக்கா : ப்ளவர் னா என்ன?
ஜனனி : பூ
அக்கா: ம்ம்ம் நேஷனல் ஃப்ளவர் என்ன?
ஜனனி : அத்திப்பூக்கள்

(சன்டிவி சீரியல் வாழ்க)

***

கண்கொட்டாமல் கோலங்கள் சீரியலைப் பார்த்துக்கொண்டிருந்தவளிடம்,
நான் : என்னக்கா இப்படி பாத்துகிட்டு இருக்கா?
அக்கா : அவதான் பொறந்ததுல இருந்து என்கூட சேர்ந்து பாக்கறாளே…
நான் : ஜனனி, அவன் யாரு?
ஜனனி : அவந்தான் ஆதி. அவன் கெட்டவன். எல்லாரையும் மெரட்டிட்டே இருப்பான்.
நான் : இது யாரு?
ஜனனி: அவந்தான் தொல்காப்பியன். அவன் நல்லவன். எப்பவும் உண்மையேதான் பேசுவான்.

(கவனிக்கும் திறனை வளர்க்கிறதா? இல்லை டிவிக்கு அடிமையாக்குகிறதா இந்த சீரியல்)

***

பள்ளி விட்டு வரும்போது,
ஜனனி : ம்மா உன்னையும் தாத்தா வந்து ஸ்கூல்ல விடுவாங்களா? அம்மாச்சி வந்து கூட்டிட்டு வந்தாங்களா?
அக்கா : இல்ல பாப்பா நான்லாம் தனியாதான் போயிட்டு வந்தேன்.
ஜனனி : யாருமே உன் கூட வரலியாம்மா? தனியாவேதான் போனியா? (கண் கலங்குகிறது)
அக்கா : ஆமாப் பாப்பா.
ஜனனி : சரிம்மா. நீ பாப்பாவா ஆகி ஸ்கூலுக்குப் போ, நான் பெருசா, அம்மா ஆகி உன்ன வந்து ஸ்கூல்ல கூட்டிட்டு வர்றேன்.

(உட்காந்து யோசிப்பாளோ?)

***

திருப்பூரில் இருந்து கரூர் கிளம்பும்போது,
அக்கா : உன்னோட ட்ரஸ் எல்லாம் எடுத்து பைல வை பாப்பா.
ஜனனி : (அவசரமாக ஒரு பொம்மைத் துப்பாக்கியை எடுத்து உள்ளே வைக்கிறாள்)
அக்கா : இத எதுக்குடி எடுத்து வைக்கிற?
ஜனனி : ரவுடிங்க வந்தா நான் உன்னக் காப்பாத்தனும்ல?

(தமிழ் சினிமா வாழ்க)

***

பள்ளியில் சேர்ந்த முதல் வாரத்தின் ஒரு நாளில்…
மிஸ் : எல்லாரும் டைரி கொண்டு வந்து வைங்க!
ஜனனியைத் தவிர எல்லோரும் வைக்கிறார்கள்.
மிஸ் : எல்லாரும் வச்சாச்சா? இன்னும் யாரோ ஒருத்தங்க வைக்கலியே? யாரது.
ஜனனி : மெதுவாக எழூந்து போய் டைரியை நீட்டுகிறாள்.
மிஸ் : இவ்வளவு நேரம் கேட்டேன்ல… ஏன் வந்து வைக்கல?
ஜனனி (அக்காவிடம் சொல்வது போலவே) : அதான் இப்போ கொண்டு வந்து தர்றேன்ல?
மிஸ் : என்னது?
ஜனனி : (பவ்யமாக) அதான் இப்போ தர்றேன் இல்லைங் மிஸ்?

( மிஸ்சும் சிரித்து விட்டாராம்)அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.