Thursday, May 29, 2008

எறும்புக்கு உப்புமா வைத்த எட்டாவது வள்ளல்

காரக்குழம்பு வைத்தால் காரமாக இருக்க வேண்டுமென்பதன் புரிதலில் உப்புமா என்றால் உப்பாக இருக்க வேண்டுமென என் அக்கா தவறாக புரிந்து கொண்ட ஒரு காலைப்பொழுதில் தட்டில் வைத்த உப்புமாவை தொடாமல், தொட்டுக்கொள்ள வைத்திருந்த சர்க்கரையை மட்டும் உள்ளே தள்ளி கொண்டிருந்தாள் ஜனனி. அதைக் கவனித்த அக்கா, ‘ஜனனி, இப்போ ரெண்டு பேர்ல யார் மொதல்ல சாப்பிட்றாங்கன்னு பாக்கலாம் சரியா? தட்டுல எதுவும் மிச்சம் வைக்கக் கூடாது.’ என்று சொல்லிவிட்டு அக்காவும் சாப்பிட ஆரம்பிக்க, என்ன செய்வதென்று புரியாமல் தவித்த ஜனனி, உப்புமாவை உருண்டை உருண்டையாக உருட்டி, அக்கா குனியும்போது, பக்கத்திலிருந்த நாற்காலிக்கு அடியில் உருட்டிவிட ஆரம்பித்தாள். நான்காவது உருட்டலில் இதனைக் கவனித்து விட்ட அக்கா, நாற்காலிக்கடியில் நான்கு உப்புமா உருண்டைகளைப் பார்த்ததும், ஜனனியைப் பார்த்து முறைத்தார். சற்றும் தாமதிக்காமல் ஜனனியிடமிருந்து பதில் வந்தது – ‘அம்மா, அந்த எறும்புங்க எல்லாம் பாவம்தான? அதுக்கெல்லாம் பசிக்கும் தான? அதுக்குதான் நான் உப்புமா போட்டேன்!’*அக்கா : ‘வெயில் காலத்துல தண்ணி ஜில்லுனு குடிக்காத பாப்பா’

ஜனனி : ‘அப்போ night காலத்துல?’*அக்கா : ‘துணி தேய்க்கறவங்களே ரெண்டு நாளா வரல. தொவச்ச துணியெல்லாம் அப்படியே இருக்கு’

மாமா : ‘அவங்க வரலன்னா, முன்னாடியிருக்கிற கடைல கொடுக்க வேண்டியதுதான’

ஜனனி : ‘ஐயோ, ரெண்டு பேரும் ஏன் இப்படி வம்பு பண்றீங்க? Iron box மேல தான இருக்கு. எடுத்து தேய்ங்களேன்!’

அக்காவும், மாமாவும் கப்சிப்.*ஜனனி : ‘மாமா, அம்மாவ விட்டுட்டு நான் மட்டும் தனியா கரூர்ல அம்மாச்சி வீட்டுக்கு போனேனே’

நான் : ‘அப்பறம் ஏன் அம்மாகிட்டப் போறேன்னு அடுத்த நாளே திருப்பூர் ஓடிட்ட?’

ஜனனி : ‘நான் தூங்கும்போது அம்மா காத பிடிச்சுட்டு தான தூங்குவேன்? கரூர்ல அம்மாச்சி காதுதான் இருந்தது. அதான் திருப்பூர் போயிட்டேன்’*அக்கா : ‘குட்டி, இவளுக்கு ஸ்கூல் லீவ் விட்டதுல இருந்த எப்போ பாத்தாலும் அந்த tom & jerry CD யே போட்டு பாத்துட்டு இருக்கா. Tom & jerry பைத்தியமாவே ஆகப்போறான்னு நெனைக்கிறேன்’

அக்காவிடமிருந்து செல்பேசியைப் பிடுங்கி ஜனனி சொன்னாள் – ‘மாமா, அம்மா எப்போ பாத்தாலும் சீரியலே பாத்துட்டு இருக்காங்க. சீரியல் பைத்தியமாவே ஆகப்போறாங்க’*கடந்த வாரம் குடும்பம் மொத்தமும் சென்னையில் இருந்த போது ஜனனிக்கு தூக்கம் வருகிற நேரம் மட்டும் எல்லோரும் காணாமல் போய்விடுவார்கள். பின்ன என்னங்க? கத சொன்னா தூங்கனும். திரும்ப திரும்ப கதையே கேட்டுட்டு இருந்தா? அவள கத சொல்லி தூங்க வைக்கிறதுக்குள்ள எனக்கு தூக்கம் வந்து நான் உளற ஆரம்பிச்சுட்றேன். அவளுக்கு கரடிக்கதை சொல்லிட்டே வந்து தூக்கத்துல சுந்தரா ட்ராவல்ஸ் ஓட்ட ஆரம்பிச்சுட்றேன். முதல் கத சொல்லும்போது ஒவ்வொரு வரிக்கும் ‘அப்பறம் மாமா’ ன்னு கேட்டுட்டே வருவா. கொஞ்ச நேரத்துல அது ‘அப்பறம்’ னு சுருங்கும். இன்னும் கொஞ்சம் கதை ஓட்டினோம்னா, அந்த ‘அப்பறமும்’, ‘ம்ம்ம்’ னு சின்னதாகிடும். அப்புறம் நாந்தான் கத சொல்லிட்டே இருப்பேன் அவகிட்ட இருந்து சத்தமே இருக்காது. மெதுவா அவ கைய எடுத்துட்டு, போர்வைய போத்தினதும், போர்வைய விலக்கிட்டு, காத பிடிச்சுட்டு ‘வேற கத சொல்லு மாமா’ னு மறுபடியும் ஃப்ரெஷ்ஷா ஆரம்பிப்பா பாருங்க.. எனக்கு அப்பவே கண்ண கட்ட ஆரம்பிச்சுடும். அடுத்து அவளுக்கு சொல்றதா வாக்கு கொடுத்திருக்கிற கதையோட பேரு – ‘அஞ்சு தல யான முட்டக் கத’. உங்களுக்கு யாருக்காவது இந்த கதை தெரியுமா?