Friday, May 16, 2008

அழுகையோடு ஆரம்பமானது முதலிரவு - 3

அழுகையோடு ஆரம்பமானது முதலிரவு - முதல் பகுதி

"ஒரு ரெண்டு நிமிசம் நான் சொல்றத முழுசாக் கேட்டீங்கன்னா
சந்தோசப்படுவேன்…எம்ப்பேர் அருள். நான் காலேஜ்ல இளவரசியோட கிளாஸ்மேட். இப்போ
இளவரசிக்கு நீங்க மாப்பிள்ள பார்த்துட்டு இருக்கிறதாக் கேள்விப்பட்டு தான்
உங்களப் பார்க்க வந்திருக்கேன். உங்களுக்கு மருமகனா வர்றதுக்கு நீங்க என்னத்
தகுதிகள் எதிர்பார்க்கறீங்கனு எனக்குத் தெரியாது, நான் என்னோடத் தகுதிய
சொல்லிட்றேன். இப்போ நான் சென்னைல ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில ப்ராஜெக்ட் லீடரா
வொர்க் பண்றேன். மாசம் 30000 சம்பாதிக்கிறேன். எனக்கு எப்பவுமே எந்தக் கெட்டப்
பழக்கமும் இல்லனு சொல்ல முடியாது. காலேஜ்ல ஸ்மோக், ட்ரிங்க்ஸ் பண்ணதுண்டு, ஆனா
அதெல்லாம் நிறுத்தி இப்போ 5 வருஷம் ஆச்சு. இது நான் போன வருஷம் ஹெல்த் செக்கப்
பண்ணிக்கிட்ட ரிப்போர்ட். அப்புறம் எனக்கு ஜாதகத்துல நம்பிக்கை இல்ல,
இருந்தாலும் உங்க திருப்திக்காக இந்தாங்க என்னோட ஜாதகம். இளவரசிக்கூட 7
வருஷமாப் பழகினதுல எனக்கு அவளோட பாஸிட்டிவ், நெகட்டிவ்னு அவளப் பத்தி முழுசாத்
தெரியும். நான் இவ்வளோப் பேசறதுனால நானும், உங்கப் பொண்ணும் லவ் பண்றோம்னு
நெனச்சிடாதீங்க. இதுவரைக்கும் இளவரசிக்கிட்ட இதப் பத்தி நான் பேசினதில்ல. உங்க
அனுமதி இல்லாம அவகிட்ட நான் இதப் பத்திப் பேசறதும் நல்லா இருக்காதுனு
நெனைக்கிறேன். இதுல என்னப் பத்தி, என்னோடக் குடும்பத்துல இருக்கவங்களப் பத்தி
முழுசா எழுதியிருக்கேன்…படிச்சுப் பாருங்க… கிழிக்கிறதா இருந்தாலும் பரவால்ல,
ஒரே ஒரு தடவப் படிச்சுட்டு அப்புறமா கிழிங்க….அதுலையே என்னோட க்ளோஸ்
ஃப்ரெண்ட்சோட போன் நம்பர்ஸ் கூட இருக்கு, என்னப் பத்தி முழுசாத் தெரிஞ்சவங்க
இவங்க. என்னப் பத்தி விசாரிக்கனும்னா இவங்ககிட்ட நீங்கப் பேசலாம். நீங்க என்ன
ஜாதினு எனக்குத் தெரியாதுங்க, அதனால நான் உங்க ஜாதிதானான்னும் எனக்குத்
தெரியாது. உங்க statusசுக்கும் நான் சமம்னு சொல்ல முடியாது. ஆனா அவளோட
கேரக்டருக்கு நான் பொருத்தமானவன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. அதனால, உங்களோட
statusக்கு ஏத்த மாதிரி உங்க ஜாதியில மாப்பிள்ள பார்க்கிறதுதான் உங்களோட
விருப்பம்னா, நான் எதுவும் சொல்லல. ஏன்னா அவ உங்கப் பொண்ணு, அவளோட வாழ்க்கையப்
பத்தி முடிவெடுக்கறதுல உங்களுக்கும் பங்கு இருக்கு. நான் என்னோட விருப்பத்த
மட்டும் தான் சொல்லியிருக்கேன், முடிவு உங்களோடதாவே இருக்கட்டும். ஒருவேளை
நீங்க என்ன நிராகரிச்சா, நான் வந்துப் பேசின விஷயம் எதுவும் இளவரசிக்குத் தெரிய
வேண்டாம்!"
சொல்லவந்ததை எல்லாம் சுருக்கமாக சொல்லிவிட்டு அவரிடம் தான் கொண்டு வந்திருந்த
கடிதத்தைக் கொடுத்தான். ஒரு மாதிரியாக அவனைப் பார்த்துவிட்டுக் கடிதத்தை
வாங்கிப் படிக்க ஆரம்பித்தார். அவர் படிக்கும் வரை அமைதியாகவே இருந்தவன்,
அவரும் படித்து விட்டு அமைதியாகவே இருக்கவும் அவரைப் பார்த்துப் பேசினான்.
"சார் நான் ரொம்ப நல்லவன்னு சொல்லிக்க விரும்பல, ஆனா எங்கம்மாகிட்ட எங்கப்பா
எப்படி நடந்துக்கனும்னு நான் விரும்பறனோ, அப்படிதான் என்னோட மனைவிகிட்ட நானும்
நடந்துக்குவேன். இதுக்கப்புறமும் நான் சொல்றதுக்கு எதுவுமில்ல. நாங்க வர்றோம்
சார்"
சொல்லிவிட்டு கேட்டை நோக்கி இருவரும் நடக்க ஆரம்பித்தார்கள்.
"தம்பி ஒரு நிமிஷம்…"
திரும்பிப் பார்த்தார்கள்.
"வீட்டுக்குள்ள வாங்க…" புன்னகையோடு சொன்னார்.
எதையோ எதிர்பார்த்து வந்த வினோத் ஒன்றும்புரியாமல் அவனோடு உள்ளே சென்றான்.
இளவரசியின் அப்பா, அம்மாவோடு பேசி விட்டு "அடுத்த வாரம் அப்பாகிட்டப் பேசிட்டு
உங்ககிட்ட பேச சொல்றேங்க" என்று சொல்லிவிட்டு வெளியே வரும்போது காற்றில்
மிதப்பவனை போல இருந்தான் அருள்.விஷயம் இவ்வளவு சுலபமாக முடியும் என்று அவன்
எதிர்பார்க்கவேயில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
அன்று இரவு இருவரும் சென்னை திரும்ப ரயிலேறினார்கள். அதுவரைக்கும் எதுவுமேக்
கேட்காமல் இருந்த வினோத் வாயைத் திறந்தான்.
"மச்சி ஏண்டா அவர்ட்ட நீங்கக் காதலிச்ச விசயத்த சொல்லவேயில்ல?"
"டேய் எந்த அப்பன்கிட்டப் போய் நான் உங்கப் பொண்ணக் காதலிக்கிறேன்னு சொன்னாலும்
அது அவங்களுக்கு நம்ம மேல கோபத்ததான் வரவழைக்கும்… இல்ல உங்கப் பொண்ணும்தான்
என்னக் காதலிச்சான்னு சொன்னாலும் கோபம் அப்படியே பொண்ணு மேலத் திரும்பிடும்…
என்னமோ உலகத்துலப் பண்ணக்கூடாத பெரியத் தப்ப தான் பொண்ணு பண்ணிட்ட மாதிரி…
அதான் சொல்லல"
"சரி அந்த லெட்டர்ல அப்படி என்னதான் எழுதியிருந்த?"
"ம்ம்ம்… I am suffering from love. Please grant me your daughter னு
எழுதியிருந்தேன்"
"மச்சி நக்கல் பண்ணாதடா… அதுல ஒரு காப்பி கொடுத்தா நமக்கும் பின்னாடி உதவியா
இருக்கும்ல?"
"டேய் கடுப்பக் கிளப்பாத… இந்நேரம் இளவரசிக்கு விஷயம் தெரிஞ்சிருக்கனும்… நான்
அவ கால் பண்ணுவான்னு வெயிட் பண்ணிட்டு இருக்கேன்"
"அவங்கப்பா கிட்டயே அவ நம்பர வாங்கியிருக்கலாம்ல"
"போடாங்க… 7 வருச ஃப்ரெண்டுனு சொல்லிட்டு… மொபைல் நம்பர அவர்கிட்டயேக் கேட்க
சொல்றியா?"
"சாரி"
ரொம்ப நேரம் படியிலேயே அமர்ந்திருந்தவன், கடைசி வரை அவளிடமிருந்து கால் எதுவும்
வராததால், வந்து படுத்துக் கொன்டான், செல்போனைக் கையில் பிடித்தபடியே.
அடுத்த இரண்டு நாட்களும் அவளிடமிருந்து அழைப்பை எதிர்பார்த்து எதிர்பார்த்து
ஏமாந்துபோனான். தன்னுடைய வீட்டில் இந்த விசயத்தை எப்படிக் கொண்டுபோவது என்பதும்
பெரும் கவலையாகவே இருக்க, இரண்டு நாள் வேலை பார்த்தவன், மூன்றாம் நாளே
ஊருக்குக் கிளம்பினான். அப்பாவிடம் நேரடியாக இதை எப்படி சொல்வதெனத் தெரியாமல்
துணைக்கு அக்காவையும் அழைத்துக் கொண்டான். அப்பா வேலைக்கு போன பின், அக்கா
மூலமாக, அம்மாவுக்கு விசயத்தை முதலில் சொல்ல அம்மா குதித்த குதியில் இருவரும்
ஆடிப்போனார்கள். அவன் அம்மாவுக்கு எவ்வளவு வேகமாக கோபம் வந்ததோ, இரண்டு பேரும்
பேசப் பேச அவ்வளவு வேகத்திலேயேக் குறைந்தது.
"நான்லாம் உங்கப்பாகிட்டப் பேச மாட்டேண்டா… நீயாச்சு உங்கப்பாவாச்சு" என்று
சொன்னவள், "எல்லாம் பெரிய மனுசனாயிட்டாங்க நாம சொல்றத இனிமே எங்க கேட்கப்
போகுதுங்க" என்று முனக ஆரம்பித்தாள்.
"ம்மா… அந்தப் பொண்ணும் உன்ன மாதிரி ரொம்ப நல்லப் பொண்ணுதாம்மா" – என்கிற
ரீதியில் ஐஸ் வைக்க ஆரம்பித்தான்.
கிட்டத்தட்ட அம்மாவை சமாளித்துவிட்ட சந்தோசம் இருந்தாலும் அப்பாவை நினைத்தாலே
பயமாக இருந்தது.

அவன் எப்போதுமே அம்மா செல்லம் தான். அப்பாவிடம் அளவுக்கு அதிகமாகப்
பேசுவதில்லை.
அக்காவிடம் சொன்னான், "க்கா… அப்பாகிட்ட நீதான் பேசி எப்படியாவது சம்மதிக்க
வைக்கனும்…"
"அப்பாகிட்ட விஷயத்தக் கொண்டு போறது வரைக்கும்தான் என்னோட வேல… அதுக்கப்புறம்
அவர சம்மதிக்க வைக்கிறது உங்கைல தான் இருக்கு"
இரவு எல்லோரும் சாப்பிட்டு முடித்தப் பிறகு, அவன் அக்கா மெதுவாக அப்பாவிடம்
விசயத்தைச் சொல்ல… கேட்டு முடித்தவர் எதுவும் பேசாமல் அவனைப் பார்த்தார். அவன்
தரையைப் பார்த்தான். அவராக எதுவும் கேட்டால் பதில் சொல்லலாம் என்று இருந்தான்.
"கொஞ்சம் தண்ணிக் கொடும்மா"
"நம்மத் தலைல தெளிச்சு வெளிய அனுப்பிடுவாரோ" என்று பயத்தோடே இருந்தான்.
தண்ணீரை வாங்கி மிச்சம் வைக்காமல் குடித்தார்.

அக்கா அவளைப் பார்த்து "எதாவது பேசுடா" என்ற அர்த்தத்தில் முறைத்தாள்.
"அந்தப் பொண்ண எனக்குப் பிடிச்சிருக்குன்னு மட்டும் நான் சொல்லல… கண்டிப்பா
உங்க எல்லாருக்கும் பிடிக்கும்" நிமிராமல் பேசினான்.
"எங்களுக்குப் பிடிக்கும்னு நீயே முடிவு பண்ணிட்டியா?" - அவன் அப்பா.
"உங்களுக்குப் பிடிச்ச மாதிரி நீங்களே எனக்கு ஒருப் பொண்ணப் பார்த்தாலும்,
எனக்கும் அந்தப் பொண்ணப் பிடிக்கும்னு நீங்களே முடிவுபண்ணிதானப் பாப்பீங்க" –
சத்தமாக பேச வேண்டும் என்று நினைத்தாலும் அவனிடமிருந்து சத்தம் அதிகம்
வரவில்லை.
"நாங்க ஒரு பொண்ணுப் பார்த்து அது உனக்கு பிடிக்கலன்னா… கண்டிப்பா வேற
பொண்ணதான் பாப்போம்… ஒரேப் பொண்ணக்காட்டி இவளதான் கல்யாணம் பண்ணனும்னு
சொல்லமாட்டேன்"
"நீங்க வந்து அந்த பொண்ணப் பாருங்க…அவங்க அப்பாகிட்டப் பேசுங்க… உங்களுக்குப்
பிடிக்கலன்னா அதுக்கப்புறம் நான் எதுவும் சொல்லல"
"ப்பா… அந்தப் பொண்ண எனக்கு நல்லாத் தெரியும்ப்பா… என்னோடக் கல்யாணத்துக்கு
வந்திருக்கு… நம்ம வீட்டுப் பொண்ணு மாதிரி நல்லாதான் பேசினா… ஒரு தடவ நீங்கப்
போய்ப் பார்த்துட்டு வர்றதுல என்ன இருக்கு" – அவன் அக்காவும் துணைக்கு வந்தாள்.
ரொம்ப நேரம் எதுவும் பேசாமல் இருந்தவர் , சொன்னார், "சரி இந்த ஞாயித்துக் கிழமை
வர்றோம்னு அவங்க கிட்ட சொல்லிடு… பொண்ணு ஃபோட்டோ இருக்கா?"
"நான் என்ன அவள லவ்வாப் பண்றேன் போட்டோ வச்சிக்கிறதுக்கு… அக்கா கல்யாண
ஆல்பத்துல இருப்பான்னு நெனைக்கிறேன்" - தான் அவளைக் காதலிக்கவில்லை என்று
நம்பவைக்க பொய் சொன்னான்.
எப்படியோ தன்னுடைய வீட்டிலும் பாதி சம்மதிக்க வைத்துவிட்டதில் சந்தோசமாய்
இருந்தாலும் இளவரசியிடம் இன்னும் பேசாமலே இருப்பது அவனுக்குக் கஷ்டமாயிருந்தது.
சென்னை திரும்பிய பிறகும் வேலையில் கவனம் செலுத்த முடியாமல் தவித்துக்
கொண்டிருந்தான். எப்பொழுது வேண்டுமானாலும் அவளிடம் இருந்து அழைப்பு வரும் என்று
எங்கு போனாலும் செல்லைக் கையில் வைத்துக் கொண்டே இருந்தான். அன்று மதியம்
சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது அவன் செல் அலறியது.

( அடுத்தப் பகுதி )

12 comments:

  1. என்னங்க..இப்படி நடுவில நிறுத்திட்டீங்க!! மத்தபடி, கதை நல்லாயிருக்கு!
    ஆனா, பொண்னோட அப்பா உடனே சம்மதிக்கறதுதான்..கொஞ்சம் சினிமா மாதிரி இருக்கு!

    ஜனவரி 10, 2007 காலை 10:29

    ReplyDelete
  2. ஆகா காதல் முரசு முக்கியமானக் கட்டத்துல்ல கட் பண்ணி தொடரும் போட்டுட்டு
    போயிட்டியே... அடுத்த பாகம் எந்நேரம் போட்டாலும் ஒரு மெயில் தட்டி விடு ராசா...

    ஜனவரி 10, 2007 காலை 10:32

    ReplyDelete
  3. என்னங்க.. ரெண்டு எபிசோடா ஹீரோயினிய கண்ணுல காட்ட மாட்டேங்கிறீங்க...

    அதே கேள்வி.... அடுத்தது?

    ஜனவரி 10, 2007 காலை 11:25

    ReplyDelete
  4. அப்ப இளவரசி...வேறொரு இளவரசனைப் பாத்தாச்சு.....சரி. அதுனால என்ன...

    ஜனவரி 10, 2007 மதியம் 12:15

    ReplyDelete
  5. என்ன காதல் கவிஞரே ஒரே சஸ்பென்ஸ்லயே முடிக்கறீங்க???

    அடுத்தது எப்போ????

    ஜனவரி 10, 2007 மாலை 7:30

    ReplyDelete
  6. ம்ம்...அருள் ரொம்ப தைரியசாலிதான்.
    இரு பக்கமும் மாட்டிக் கொள்ளாமல் சாதுர்யமாய் நடந்து ஒருவாறு காதலைத்
    தப்ப வைச்சிட்டார்.

    இனி என்னதான் நடக்கப் போகிறதோ?

    ம்... அடுத்த அங்கத்தைக் காண மிகவும் ஆவலாக காத்திருக்கின்றேன்.

    ஜனவரி 10, 2007 இரவு 9:35

    ReplyDelete
  7. மூன்றே பதிவில் முடித்து விடுகிறேன்னு சொன்னாப்பல இருந்தது? :-)

    ஜனவரி 11, 2007 இரவு 12:31

    ReplyDelete
  8. அன்பு அருட்பெருங்கோ..
    மூன்று தொடரும் முழுசுமா படிச்சேன்....
    ரொம்ப நல்லாயிருக்கு...
    எப்படியோ....நல்லாருக்கு...முடிவும் நல்லயிருந்த மகிழ்ச்சியோ

    இந்த வாரத்திற்கான கவிதை சூப்பர்....

    ஜனவரி 11, 2007 காலை 7:27

    ReplyDelete
  9. நல்லா வந்திருக்கு கதை வாழ்த்துக்கள் அபெகோ

    ஜனவரி 11, 2007 மாலை 5:09

    ReplyDelete
  10. hi arul ,
    i am ravi from banglore,
    just now i see you are web,,,,i am really very proud of your words,,,,,..keep i am watching your words................henceforth,,,,,,,,,,,,,

    best of luck for ,,,,,..............u ?

    ReplyDelete
  11. Dear arutperungo

    Hope u ll publish good things in future tooo...
    Nice to read your words...
    Keep it up
    And 1 request, pls mind ur words in some places.it shouldnt be hurt ur readers

    regards
    praveen kumar
    From Bangalore.....

    ReplyDelete