Wednesday, May 28, 2008

இம்சை அரசி திருமணம், எனது பயணம், ஒரு மலையாளக் கவிதை

16 மே 2008 வெள்ளிக்கிழமை

சுந்தரா ட்ராவல்ஸ் பதிவுக்கு பிறகு நான் ஊருக்கு கிளம்பினாலே ‘என்ன சுந்தரா ட்ராவல்ஸ்லயா?’ என்று அலுவலகத்தில் நண்பர்கள் கலாய்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.அதனால் இம்முறை முன்பதிவு செய்துவிட வேண்டுமென்று முடிவு செய்திருந்தேன். ஆனால் வழக்கம்போல் எனது பொறுமை, சோம்பேறித்தனமெனும் எல்லையைத் தொட்டுவிட்டதால் பயண நாள் வரை முன்பதிவு செய்யவில்லை.

மதியம் மணி 2:00 :

மதியம் உண்ட மயக்கத்தில் உறக்கம் தள்ள, அலுவலகத்துக்குள்ளேயே இருக்கும் விடுதியில் தங்கியிருந்த நண்பனிடம் அறை சாவியை வாங்கிக்கொண்டு அவன் அறைக்கு சென்றுவிட்டேன். ‘தூங்கக்கூடாது, கொஞ்ச நேரம் கண்ணை மூடி படுத்திருந்துவிட்டு எழுந்துவிடலாம்’ எனும் தெளிவான முடிவோடு படுக்கையில் சாய்ந்துவிட்டு எழுந்தபோது மணி 3:00.

மதியம் மணி 3:00 :

அலறியடித்து வண்டியைக் கிளப்பிக்கொண்டு வீட்டிற்குப் பறந்தேன். 6 மணிக்கு மகாத்மா காந்தி பேருந்து நிலையத்தில் பெங்களூர் செல்லும் கர்நாடகா அரசுப்பேருந்தை பிடித்துவிட திட்டம். அதற்கு லிங்கம்பள்ளியில் 5 மணிக்கு மின்ரயிலைப் பிடிக்கவேண்டும். 4:30 மணிக்காவது வீட்டிலிருந்து கிளம்பவேண்டும். வீட்டிற்கு 4 மணிக்கு போய்விட்டால் போதும். இன்னும் நேரமிருக்கிறது என்ற கெத்தில் வீட்டிற்கு அருகில் வந்ததும் அழகியதமிழ்மகனில்(ATM) பணமெடுத்துக்கொண்டு கடையில் சில பொருட்களை வாங்கிக்கொண்டு கரும்புச்சாறு கடைக்கு வந்தேன். இரண்டு கப் குடித்துவிட்டு பையிலிருந்து பணத்தையெடுக்கும்போது கையோடு வந்த நண்பனின் விடுதியறை சாவி என்னைப்பார்த்து எகத்தாளமாக சிரித்தது.

மதியம் மணி 3:45 :

‘மச்சான், நாந்தாண்டா பேசறேன். உங்கிட்ட இன்னொரு ரூம் சாவி இருக்கா’
‘இல்லடா.. என் ரூம்மேட் ஊருக்கு போயிட்டான். ஒரு சாவிதான் இருக்கு. ஏண்டா?’
‘ஒன்னுமில்ல. நீ ஆஃபிஸ் கேட்டுக்கு வா. நான் சாவிய எடுத்துட்டு வர்றேன்’
வந்த வழியே திரும்பி போய் அவனிடம் சாவியைக் கொடுத்துவிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்தபோது மணி 5

மாலை மணி 5 :

இனிமேல் அந்த கர்நாடகா பேருந்தைப்பிடிக்க வாய்ப்பில்லாததால் 8 மணிக்கு கிளம்பும் ஆந்திரா பேருந்தை பிடிக்க பொறுமையாக கிளம்பலாமென்று பைக்குள் எல்லாவற்றையும் திணித்துவிட்டு ஒரு குளியலைப் போட்டேன். தலைக்கு குளித்ததும் தூக்கம் வருகிற மாதிரி இருந்தது. ‘தூங்கக்கூடாது, கொஞ்ச நேரம் கண்ணை மூடி படுத்திருந்துவிட்டு எழுந்துவிடலாம்’ எனும் அதே தெளிவான முடிவோடு படுக்கையில் சாய்ந்துவிட்டு எழுந்தபோது மணி 6:30.

மாலை மணி 6:30 :

ஆட்டோவுக்கு காத்திருந்து சலித்து, நடந்து, பின் லிஃப்ட் கேட்டு ஒருவழியாக ரயில் நிலையம் சென்றபோது மணி 6:45. நாம்பள்ளி செல்லும் அடுத்த ரயில் 6:55 க்கு கிளம்ப தயாராக நின்று கொண்டிருந்தது. கவுண்டரில் பயணச்சீட்டு வாங்க எனக்கு முன்னால் இன்னும் மூன்றே பேர் இருந்த போது அந்த ரியலும் ‘கூ’ என்று (எனக்கு சங்கு) ஊதியபடி கிளம்பிப் போய்விட்டது. அடுத்து செக்கந்தராபாத் செல்லும் ரயிலில் பேகம்பேட் வரை சென்றுவிட்டு அங்கிருந்து ஆட்டோ பிடித்து பேருந்து நிலையம் போகலாமென்று அதி உன்னத முடிவெடுத்து பேகம்பேட்டுக்கே சீட்டு வாங்கினேன். 7:20 க்கு அந்த ரயில் கிளம்பியது.

இரவு மணி 8 :

பேகம்பேட் ரயில்நிலையத்துக்கு வெளியே வந்து ஆட்டோ பிடித்து பேரம் பேசி ஏறியமர்ந்தபோது பத்து நிமிடம் கழிந்திருந்தது.
‘அண்ணா கொஞ்சம் சீக்கிரம் போங்க. பஸ்ச புடிக்கனும்’
‘பஸ் எத்தன மணிக்கு?’
‘8 மணிக்கு’
‘மணி என்ன இப்போ?’
‘8:10’
என்னை முறைத்துவிட்டு முறுக்கினார் ஒரு இருட்டு சந்துக்குள். ஒரு கிலோ மீட்டர் போனதும் அங்கு ஒரு கடமை தவறாத கண்ணியமான காவல்துறை அகராதி ‘இது ஒன் வே. திரும்பிப் போ…போஓஓஓஓஓ’ என்று ஜெயம் சதா மாதிரி (ஆனால் தொப்பை இருந்தது) கை நீட்ட, வந்த வழியே ஆட்டோ திரும்பியது. நான் எங்காவது தனியாக கிளம்பினால் எனக்கு கம்பெனி கொடுக்க சனியனும் சட்டையை மாட்டிக்கொண்டு கிளம்பிவிடும்போல! உருண்டு புரண்டு ஆட்டோ பேருந்து நிலையம் வந்தபோது மணி 8:45.

இரவு மணி 9 :

பெங்களூர் செல்லும் கடைசி அரசுப்பேருந்து கிளம்பிக்கொண்டிருந்தது. சீட்டிருக்கிறதா என்று நடத்துனரைக்கேட்டால் ஒன்றே ஒன்றுதான் இருப்பதாக பாவமாக சொன்னார். எனக்கு அரை டிக்கட் இருந்தாலே போதுமென்று சொல்லி ஏறிக்கொண்டேன். இருக்கையில் சாய்ந்து, ‘தூங்கலாமா? கண்ணை மட்டும் மூடிப் படுத்திருக்கலாமா?’ என்று யோசித்துக்கொண்டே தூங்கி விட்டேன்

17 மே 2008 சனிக்கிழமை

காலை மணி 9:00 :

மெஜஸ்டிக்கில் இறங்கியதும் நண்பனுக்கு தொலைபேசி, அலுவலகம் செல்ல இருந்தவனை வீட்டிலிருக்க சொல்லி, 171 பிடித்து கோரமங்களா போய் அவன் வீட்டைக்கண்டுபிடித்தபோது மணி 10 ஆகியிருந்தது. இரண்டு சமையலறை அளவுக்கு இருந்த அந்த வீட்டின் வாடகை 7500 ரூபாய்! குளித்து முடித்து சமைத்து வைக்கப்பட்டிருந்த சப்பாத்தி, வெண்டைக்காயையும், நண்பன் சூடாக்கிக்கொடுத்த தேநீரையும் பருகிய பிறகு உலகம் அழகாக தெரிந்தது.(எரிக் , நீ நல்லாருப்படா!) அப்பொழுதே கிளம்பி இரவுக்குள் நாமக்கல் செல்லலாமா அல்லது இரவு கிளம்பி காலை நேராக திருமணத்துக்கு போய்விடலாமா என்று குழப்பமாக இருந்ததால், இம்சையரசிக்கே தொலைபேசினேன். நள்ளிரவு 3:30 மணிக்கு (காலையில் என்று பொய் சொன்னார்) திருமணமென்பதால் இரவு தங்கிக்கொள்ள வசதி செய்திருப்பதாக சொல்லவும், உடனே கிளம்ப முடிவெடுத்தேன்.

காலை மணி 11 :

கோரமங்களா வாட்டர் டேங்க் அருகே ஓசூருக்கு பேருந்தேறினேன். ஊர்ந்து ஊர்ந்து சென்றது. மடிவாலா – எலக்ட்ரானிக்ஸ் சிட்டி மேம்பாலப்பணிகள் இன்னும் முடிவடையவில்லை. பல இடங்களில் மரங்களை வெட்டிப்போட்டிருந்தார்கள். ஆனாலும் பெங்களூருக்கே உரிய அந்த ‘பசுமை’ மாற வில்லை ;) 12:30 மணிக்கு ஒசூரை அடைந்தேன்.

மதியம் மணி 1 :

சேலம் செல்லும் அரசு விரைவுப்பேருந்திலேறி படுத்ததுதான் தெரியும். எப்பொழுது சேலம் வந்ததென்றே தெரியவில்லை. 6 மணிக்கு சேலத்திலிறங்கி கடைவீதிக்கு சென்று பரிசுப்பொருள் வாங்கிக்கொண்டு திரும்பினேன். அன்று/அடுத்தநாள் வீரபாண்டி ஆறுமுகத்தின் பேத்திக்கு திருமணமென்பதால் சேலமே ஒளிமயமாக இருந்தது. அடுத்த பேருந்தைப்பிடித்து நாமக்கல்லை அடைந்தபோது மணி 8.

இரவு மணி 8 :

‘ஹலோ’
‘சொல்லுங்க’
‘sam பேசறேன்’
‘யாரு?’
‘சாம்ராஜ் பேசறேன்’
‘ ’
‘அருட்பெருங்கோ பேசறேங்க’
‘அவ தூங்கறா. நான் அவ ஃப்ரெண்ட் பேசறேன். ஒரு நிமிசம் இருங்க அவ தம்பிக்கிட்ட கொடுக்கறேன்’
‘சரிங்க’
‘அண்ணா நீங்க இப்போ எங்க இருக்கீங்க?’
‘பஸ்டாண்ட்லதான்ப்பா’
‘பஸ் எல்லாம் வெளிய வர்ற இடத்துல வெயிட் பண்ணுங்க. நான் வந்துடறேன்’
‘ஓக்கே’

‘ஹலோ…அண்ணா எங்க நிக்கறீங்க?’
‘நீ சொன்ன எடத்துலதாம்ப்பா’
‘நானும் பஸ் வெளிய வர்ற இடத்துலதான் நிக்கறேன்’
‘பக்கத்துல ஒரு டைட்டன் வாட்ச் கடை இருக்கு’
‘நானும் அங்கதான் நிக்கறேன்’
‘தம்பி கொஞ்சம் பின்னாடி திரும்பு’
‘ஹை’
‘ஹை’

இரவு மணி 9 :

விடுதிக்கு சென்று மீண்டுமொரு குளியலைப்போட்டேன். அறையில் கட்டில் ஒரு மூலையிலும் தொ.கா.பெட்டி இன்னொரு மூலையிலும் இருந்தது. அதில் நமீதாவே த்ரிஷா மாதிரிதான் தெரிந்தார். சின்னத்திரையை விட்டு பெரிய திரைக்கு போக முடிவெடுத்து வெளியே வந்தேன். நடக்கும் தூரத்தில் இருந்த KS திரையரங்கில் யாரடி நீ மோகினி ஓடிக்கொண்டிருந்தது. கூட்டம் அதிகமில்லை. பக்கத்திலேயே ஒரு பரோட்டா கடையில் சாப்பிட்டுவிட்டு (வெகுநாட்களுக்கு பிறகு நிறைவாக சாப்பிட்ட திருப்தி) திரையரங்கிற்குள் நுழைந்தேன். வலைப்பதிவில் வேண்டிய அளவுக்கு இதன் விமர்சனங்களைப் படித்துவிட்டதால் சில காட்சிகள் தவிர மீதிப்படம் சப்பென்று இருந்தது.
நயன் அழகாக இருந்தார். அவர் தங்கையாக வந்த மலையாளக் கவிதை அழ்ழகாக இருந்தார்.

இரவு மணி 1:30 :

விடுதியறைக்கு திரும்பி ‘தூங்கலாமா, கொஞ்ச நேரம் கண்ணை மூடி படுத்திருக்கலாமா’ என்று யோசித்ததில், இரண்டில் எதைச் செய்தாலும் திருமணத்துக்கு போக முடியாதென்று அனுபவ அறிவு சொல்லவும் விழித்தபடியே ஒரு லோக்கல் சேனலில் இளையராஜாவை ரசித்துக்கொண்டிருந்தேன்.

இரவு மணி 2:30 :

‘ஹலோ..ஜெயந்தி பேசறேன்’
‘சொல்லுங்க முழிச்சுட்டுதான் இருக்கேன்’
‘3 மணிக்கு அங்க பஸ் வரும். கிளம்பி ரெடியா இருங்க’
‘நான் கிளம்பிக்கறேன். நீங்கதான் கல்யாணப்பொண்ணு நீங்க மொதல்ல கெளம்புங்க’
‘நானும் கிளம்பி ரெடியா இருக்கேன். சும்மாதான உட்காந்திருக்கேன்னு எல்லாரையும் எழுப்பி விட்ற வேலைய எனக்கு கொடுத்துட்டாங்க’
‘சரி நீங்க அடுத்த ஆள எழுப்புங்க. நான் போய் கெளம்புறேன்’

இரவு மணி 3:00 :

குளித்து முடித்து கிளம்பி பேருந்துக்காக காத்திருந்தபோது அறைக்குள் புயல் மாதிரி ஒருவர் நுழைந்தார்.
‘ஹாய்.. ஐ யாம் பாலா’
என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு கேட்டேன், ‘ஜெயந்தி ஃப்ரெண்டா?’
‘ம்ம்ம் ப்ளாக் மூலமா தெரியும்’
‘ஓ.. நீங்களும் ப்ளாக் எழுதுவீங்களா?’
‘இல்ல இல்ல படிக்கறதோட சரி. உங்களுக்கு எப்படி ஜெயந்திய தெரியும்?’
‘எனக்கும் ப்ளாக் மூலமாதான். அப்பறம் ஒரே கம்பனிலதான வேலை செய்யறோம்’
‘நீங்களும் ப்ளாக் எழுதறீங்களா?’
‘ம்ம்ம் ஆமாங்க’
‘என்ன பேர்ல?’
‘அருட்பெருங்கோ ங்கற பேர்ல எழுதறேன்’
‘நீங்க தான் அருட்பெருங்கோவா?’ நம்பிக்கையே இல்லாமல் கேட்டார். இது எப்பொழுதும் நடப்பதுதான். என்னை நேரில் பார்க்கும் யாருமே நான்தான் அருட்பெருங்கோ என்று சொன்னால் நம்ப தயங்குகிறார்கள் :)

18 மே 2008 ஞாயிற்றுக்கிழமை

அதிகாலை மணி 4:00 :

நாமக்கல் அருகே இருக்கும் வள்ளிபுரம் சிவன் கோவில் களை கட்டியிருந்தது.உறவினர், நண்பர்கள் புடை சூழ சரியாக 4:42 மணிக்கு மோகன் பிரபு கைது செய்யப்பட்டார். கைது செய்த ஜெயந்திக்கு பரிசு கொடுத்து வாழ்த்தலாமென்றால் அம்மணியை பிடிக்க முடியவில்லை. மாப்பிள்ளை வீட்டு அழைப்பு என்று மாயமாக மறைந்துவிட்டார். ஒருவழியாக காத்திருந்து அவர்களிருவரும் சாப்பிடப்போன நேரம் தட்டைப்பிடுங்கிவிட்டு பரிசைக்கொடுத்துவிட்டு கிளம்பினோம்.

காலை மணி 8 :

நானும் பாலாவும் அறைக்குத் திரும்பி பைகளை எடுத்துக்கொண்டு வெளியே வந்தோம். கோவையிலிருந்து சென்னை செல்லும் வெஸ்ட்கோஸ்ட் ரயிலை சேலத்தில் 10 மணிக்கு பிடித்துவிட திட்டம். எந்த பேருந்தும் அந்த இடத்தில் நிறுத்தாததால் ஆட்டோ பிடித்து பேருந்துநிலையம் சென்று, காத்திருந்து, பேருந்து வந்ததும் அடித்து பிடித்து ஏறி நிற்பதற்கு இடம் பிடித்தபோது மணி 8:45. ஒரு மணி நேரத்தில் சேலத்துக்கு சென்று ரயிலை பிடிப்போமா என்று சந்தேகமாகத்தான் இருந்தது. அம்மா, அப்பா, அக்கா எல்லோரும் அந்த ரயிலில்தான் திருப்பூரிலிருந்து சென்னைக்கு சென்றுகொண்டிருந்தார்கள். அவர்களோடு சேர்ந்து கொள்ளலாமென்றுதான் அடுத்தநாள் வரவேற்புக்கு செல்லாமல் முதல்நாள் திருமணத்துக்கு சென்றிருந்தேன். 9:55 க்கு பைபாஸ் சாலையில் இறங்கியதுமே, ‘ரயில், சேலம் சந்திப்பில் நின்று கொண்டிருப்பதாக’ அக்கா தொலைபேசினார். அவசரமாக ஆட்டோ பிடித்து ஜங்சனை அடைந்து வரிசையில் நின்று டிக்கட் வாங்கி முதலாம் பிளாட்பாரத்திற்கு நாங்கள் போவதற்குள்…. ரயில் போய்விடவில்லை :) நிதானமாக ஏறி, ஜனனியோடு விளையாடி, பின் நன்றாக தூங்கிக்கொண்டே சென்னை சென்று சேர்ந்தேன்.

கவிதைப் பிரியர்களுக்காக அந்த மலையாளக் கவிதை :
[slideshow id=1 w=320 h=400]