Thursday, January 31, 2008

குறுங்கதையும் குறுந்தொகையும் - 1

வாப்பா… அருள். எப்படி இருக்க? நேரத்துலையே வர்றேன்னு சொல்லியிருந்த?’

‘சாரி ஆண்ட்டி. வர்ற வழில கொஞ்சம் லேட்டாகிடுச்சு.இளா எங்க ஆண்ட்டி?’

‘மாடியில்’ என்று அவர் கைகாட்ட படியில் ஏறினான். அவனுக்கும் இளாவுக்கும் இடையில் இருப்பது கெமிஸ்ட்ரி, பையாலஜி எல்லாம் கலந்த ஒரு ‘இது’வாலஜி. அவனுக்கு குன்னூர். அவளுக்கு கோயம்புத்தூர். +1, +2 இருவரும் ஒன்றாக குன்னூரில் படிக்கும்போது அறிமுகம். அதன்பிறகு கோவையில் ஒரே கல்லூரியில் இடம் கிடைத்து இன்னும் நான்கு வருடங்களும் சேர்ந்தே படித்தார்கள். இப்பொழுது அவன் சென்னையிலும், அவள் கோயம்புத்தூரிலும் மென்பொருள் துறையில் பணி. அவர்களுக்குள் இருப்பது நட்பா? காதலா? என்றால், நட்பையும் காதலையும் பிரிக்கிற கோட்டில் அவர்கள் நடந்து கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லலாம். சொல்லி விட்டால் காதல். சொல்லாமல் விட்டால் நட்பு.

அவளிடமே கேட்டுவிடுவதில் அவனுக்கும் தயக்கமில்லைதான். ஆனால் அவள் மறுக்கும் பட்சத்தில், அவனை விட அவளுக்கே அது பெரிய வலியாகப் போய்விடுமென்றே தவிர்த்துவிட்டான். அவளுக்கோ தன் அப்பாவை நினைத்து பயம். சாதிப்பற்றும், அதைவிட அதிகமாய் ஜாதகம் மேல் நம்பிக்கையும் உள்ளவரிடம் என்ன பேச முடியும்? அவர் மனதைப் புண்படுத்தவும் அவளுக்கு விருப்பமில்லை. ஆனாலும் இப்போதெல்லாம் அவனே காதலைச் சொல்லிவிடக்கூடாதா என்று ஏங்க ஆரம்பித்துவிட்டாள்.

‘ஹலோ… இதான் நீ சொன்ன டைமா?’
‘சாரி கேட்டுக்கறேன் மேடம்…உடனே கெளம்புங்க சீக்கிரம் போய்ட்டு வந்துடலாம்’

“ம்மா… நாங்க மதியம் வெளியவே சாப்டுக்கறோம்” என்று சொல்லிவிட்டு அவனை பின்னால் உட்காரசொல்லிவிட்டு ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்தாள்.

நாளை வரும் அவளுடைய இருபத்து நான்காவது பிறந்தநாளுக்காகத்தான் புடவை எடுக்க அவனையும் அழைத்துக்கொண்டு சேரன் டவர்சுக்குப் போகிறாள். அவனுக்குப் பிடித்த புடவைகளில் அவளுக்குப் பிடித்த ஒன்றை தேர்ந்தெடுப்பதா இல்லை அவளுக்குப் பிடித்த புடவைகளில் அவனுக்குப் பிடித்த ஒன்றை தேர்ந்தெடுப்பதா என்ற சண்டை முடியும்போது ஒரு ரோஸ் நிற புடவை தேர்வாகியிருந்தது. மதியம் அன்னபூர்ணாவில் சாப்பிட்டுவிட்டு மூன்று மணிக்கு வீட்டுக்கு வந்தார்கள்.

‘அங்கிள இன்னைக்குப் பாக்க முடியலயே! சரி ஆண்ட்டி நான் ஃப்ரெண்ட்ஸ்ங்களையும் பாக்கனும். இப்போ கிளம்பறேன்.நாளைக்கு வர்றேன்’ என்று சொல்லி கிளம்பிவிட்டான்.

ன்னடி இந்த கலர் எடுத்துட்டு வந்திருக்க? உனக்கு ரோஸ் கலர் புடிக்காதுன்னு சொல்லுவ!’
‘இல்லமா… இது எனக்கு நல்லாருக்கும்னு அருளும் சொன்னான். சரி ட்ரை பண்ணலாம்னு எடுத்துட்டேன்’

அவளுடைய அம்மாவுக்கும் அவள் மனதிலிருப்பது தெரியாமல் இல்லை. அவர்கள் காதலிக்கிறார்கள் என்றே நம்பிக்கொண்டு அவளாக சொல்வாள் என்றுதான் எதிர்பார்த்துக்கொண்டிருந்தார். அவள் அப்பாவிடம் சொன்னால் அவர் குதிப்பார்தான். இருந்தாலும் ஒற்றை மகளின் தகப்பனிடம் சம்மதம் வாங்குவதில் சிரமம் இருக்காதுதான். ஜாடை மாடையாக அவரிடம் இந்த பேச்சையெடுக்கும்போதெல்லாம் மௌனம் மட்டும்தான் பதில்.

றுநாள் பிறந்தநாள் வாழ்த்து சொல்ல அவள் வீட்டுக்கு வந்திருந்தான். அவர்களும் பேரூர் கோயிலுக்குப் போய்விட்டு அப்போதுதான் வந்திருந்தார்கள். அவளுக்குப் பிடித்த பாடல்களாக தேர்வு செய்து பதிவு செய்யப்பட்ட ஐபாட் ஒன்றை பரிசாகக் கொடுத்தான். ஐபாட் வாங்க வேண்டுமென்று போனவாரம்தான் அவனிடம் சொல்லிக் கொண்டிருந்ததை நினைத்துக் கொண்டாள். அவள் அப்பாவுடன் சோபாவில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அவன் முன்னிலையிலேயே அப்பாவிடம் அதனைச் சொல்லிவிடலாமா என்று துடிப்பாக இருந்தது அவளுக்கு. உள்ளே பயமும், காதலும் அலைக்கழிக்க வெளியே அமைதியாக இருந்தாள்.

‘என்னப்பா..நேத்து வீட்டுக்கு வந்துட்டு நான் வர்றதுக்குள்ள ஓடிட்ட போல…’ சிரித்துக்கொண்டே கேட்டார் இளாவின் அப்பா.
‘இல்ல அங்கிள். பசங்களயும் பாக்க வர்றேன்னு சொல்லியிருந்தேன்…அதான் போயிட்டேன்’
‘அப்போ குன்னூர் போகவேயில்லையா?’
‘இல்ல அங்கிள் அப்பாவும், அம்மாவும் ஒரு கல்யாணத்துக்காக மதுரை போயிருக்காங்க. நான் இப்படியே சென்னை திரும்ப வேண்டியதுதான்.’
‘கல்யாணம்னு சொல்லவும் தான் ஞாபகம் வருது’ என்று சொல்லிவிட்டு ‘ஜெயாஆஆ’ என்று உள்ளே அழைத்தார்.

இளாவுடைய அத்தைதான் ஜெயா.ஈரோட்டில் பள்ளியொன்றின் தலைமையாசிரியை. ஜோதிடத்தில் ஆர்வம் வந்து அதில் பட்டயப்படிப்பெல்லாம் படித்தவர். ஆனால் தொழில்முறையாக ஜோதிடம் பார்ப்பவரில்லை. நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் மட்டும் பொழுதுபோக்கு மாதிரி ஜாதகம் பார்த்து சொல்வார். இளாவின் அப்பாவுக்கும் காசுக்காக ஜோதிடம் பார்ப்பவர்களை விட இவர் மேல் நம்பிக்கை அதிகம். அவர் வர சொல்லியிருந்ததால் அன்று வந்திருந்தார்.

அவரையும் உட்கார சொல்லிவிட்டு, இளாவின் ஜாதகத்தை எடுத்துக் கொடுத்தார்.
‘இந்த பொறந்தநாள்ல இருந்தாவது இளாவுக்கு கல்யாண யோகம் வருதான்னு பாரு ஜெயா. இருபத்தஞ்சு ஆரம்பிக்குதில்ல’
அவள் அத்தையும் சிரித்துக்கொண்டே ஜாதகத்தை வாங்கி பார்க்க ஆரம்பித்தார்.
இளாவுக்கு திக் திக் என்று அடித்துக்கொண்டது. கல்யாணத்துக்கு என்ன அவசரமென்று மனதுக்குள் திட்டிக்கொண்டாள்.

‘ம்ம்ம்… வர்ற சித்திரைல இருந்து குருபலன் வருதுண்ணா. கல்யாணம் பண்ற யோகம் தான்’ என்று ஆரம்பித்தார் அவள் அத்தை.
‘எப்படிப்பட்ட வரன் அமையும்னு எதாவது இருக்கா? ’
‘அமைப்பெல்லாம் பார்த்தா மணவாழ்க்கை சிறப்பா இருந்தாலும், வேற இனத்துலதான் சம்பந்தம் ஆகற மாதிரி இருக்கு’
‘….’
‘தீர்க்கசுமங்கலியா இருப்பா. அதுல ஒரு குறையும் இருக்காது’
‘எந்தப்பக்கமிருந்து வரன் வரும்னு ஒன்னும் தெரியலையா’
‘வடக்கு திசைல இருந்துதான் வரன் அமையும். கொஞ்சம் மேட்டுப்பகுதில இருந்துதான் வரப்போற மாதிரி தெரியுது’
‘வடக்கு திசையா?’
‘வடக்குதிசைன்னதும் ஏண்ணா பயப்படுறீங்க. என்ன இமயமலைல இருந்தா சம்பந்தம் பேச வரப்போறாங்க? பக்கத்துல ஊட்டியோ, குன்னூரோ நல்ல வரனாத் தேடுங்க’

அதுவரை அமைதியாக இருந்த இளா,
‘எந்தூர்னு சொன்னீங்கத்த?’ என்று ஆர்வத்தில் சத்தமாகவே கேட்டுவிட்டாள்.
‘ஊட்டியோ, குன்னூரோனு சொன்னேன்’
அருள் எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருந்தான்.
அவர்களிருவரையும் பார்த்துக்கொண்டிருந்தார் அவள் அப்பா.

ஜாதகத்தை வாங்கி வைத்தவர், அவள் அத்தை உள்ளே சென்றதும், அவர்களிடம் கேட்டார்.
‘என்ன ரெண்டு பேரும் லவ் பண்றீங்களா?’
பயத்துடன், அவள், அவன் கண்களையும், அவன், அவள் கண்களையும் பார்த்துக்கொண்டாலும் இருவரும் எந்த பதிலும் சொல்லவில்லை.
‘ஏன் முழிக்கிறீங்க. அதான் உங்க கதையெல்லாம் ஜாதகத்துல தெரிஞ்சு போச்சே! சரி உங்கப்பாம்மா திரும்பி வரும்போது கோயம்புத்தூர் வழியாதான போவாங்க. பாத்துப் பேசறேன்.’ எந்த உணர்வோடு சொல்கிறார் என்று தெரியவில்லையென்றாலும், அதில் கோபம் மட்டும் இல்லையென்று தெரிந்தது.
அவளுக்கு நிம்மதியாக இருந்தது. அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

ள்ளறையில்…
‘அப்பாடா.. நான் நெனச்ச மாதிரியே நடந்துடுச்சு ஜெயா. நீ மட்டும் அப்படி சொல்லலன்னா உங்கண்ணன்கிட்ட இத எப்படி சொல்லியிருப்பேன்னே எனக்குத் தெரியல’
‘என்னண்ணி… நம்ம இளாவுக்காக ஒரு பொய் கூட சொல்ல மாட்டேனா’ சிரித்தார் ஜெயா.

----

குறுந்தொகை :

23. குறிஞ்சி – தோழி கூற்று

அகவன் மகளே அகவன் மகளே
மனவுக்கோப்பன்ன நன்னெடுங்கூந்தல்
அகவன் மகளே பாடுக பாட்டே
இன்னும் பாடுக பாட்டேஅவர்
நன்னெடுங்குன்றம் பாடியபாட்டே.
- அவ்வையார்.

“குறி சொல்பவளே!
குறி சொல்பவளே!
நல்ல நீண்ட கூந்தல் கொண்ட
குறிசொல்பவளே!
மீண்டும் சொல்!
அவன் வாழும்
நல்ல உயர்ந்த மலையைப் பற்றி
மீண்டும் சொல்!”

( காதலை குறிப்பால் உணர்த்தியது )

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.