Tuesday, January 29, 2008

ஒரு சின்ன கால்குலேட்டருக்காக இத்தன ரணகளமா?

கல்லூரியில ரெண்டாவது வருசம் படிக்கும்போது நடந்தது இது. எங்கள மாதிரி மொத்தம் முப்பதே பேர் இருக்கிற வகுப்புல ப்ராக்ஸி போட்றதுங்கறது கஷ்டம்தான். செமஸ்டர் ஆரம்பமா இருந்ததால எல்லாரும் புது லெக்சரருங்க. ஆளு, பேரெல்லாம் அவங்க தெரிஞ்சிக்கிற வரைக்கும், ஷிஃப்ட் வச்சு மாத்தி மாத்தி ப்ராக்ஸி போட்டு கட்டடிச்சிட்டு இருந்தோம். ஒரு நாள் இன்னொருத்தனுக்குப் பதிலா நான் ப்ராக்ஸி போட்டேன். அன்னைக்குனு பாத்து வகுப்புக்கு வந்த வாத்தி அட்டெண்டன்ச எடுத்து வச்சிட்டு (அட்டெண்டன்ஸ்ல பேரப் பாத்துதான் கூப்பிடனுமா? அப்படியே உட்காந்திருக்கவங்களப் பாத்து கூப்பிட்டா என்னவாம்?) ஏதோ ஒரு பேரக் கூப்பிட்டு கேள்வி கேட்க ஆரம்பிச்சிட்டார். கொஞ்ச நேரத்துல நான் ப்ராக்சி போட்ட பையனோட பேர அவர் கூப்பிட்டதும் எனக்கு என்னப் பண்றதுன்னு தெரியல. அவனுக்கு அட்டெண்டன்ஸ் போச்சுன்னா அப்பறம் அடுத்த நாள் எனக்கு ப்ராக்சி போட மாட்டானேன்னு அவன் பேர கூப்பிட்டதும் நான் எந்திரிச்சுட்டேன். ஏதோ கேள்வி கேட்டார். யோசிக்கிற மாதிரி நடிக்கிறது, நெத்திய சுருக்குறது, கேள்வியையே இன்னொருதடவ சொல்றது, அரைகுறையா எதையாவது உளறுறது இதெல்லாம் முதல்வருசமே முயற்சி செஞ்சு பல்பு வாங்கிட்டதால, கேள்விய அவர் முடிக்கிறதுக்கு முன்னாடியே ‘நோ ஐடியா’னு சொல்லிட்டேன். என்னை அப்படியே நிக்க சொல்லிட்டு, அடுத்த பேர கூப்பிட அட்டெண்டன்ஸ் எடுத்தவர் சொல்லி வச்ச மாதிரி என்னோட பெயரையேக் கூப்பிட்டதும் வகுப்புல எல்லாப் பயலுகளும் சிரிக்க ஆரம்பிச்சுட்டானுங்க. அவரு கடுப்பாகி திரும்பவும் என் பேர சத்தமா சொல்லி ‘கெட் அப்’ அப்படிங்கறார். “நான் நிக்கறேன்! நான் நிக்கறேன்!” னு பார்த்திபன்கிட்ட நம்ம கஜேந்திரன் சொன்ன மாதிரி சொல்லவா முடியும்? நாந்தான் இன்னொருத்தன் பேர்ல நின்னுகிட்டு இருக்கேனே!!! என் பேர்ல வேற எவனாவது எந்திரிச்சு என்னக் காப்பாத்துவான்னு பாத்தா எல்லாப் பயலுகளும் வடிவேலு காமெடியப் பாக்கற மாதிரி சிரிச்சுக்கிட்டே இருக்கானுங்க. அவரு கடுப்பாகி ‘வேர் இஸ் ஹி?’ னு கத்தறார். ‘ஹி இஸ் ஆப்செண்ட்’ னு ( அதாவது நான் இன்னைக்கு ஆப்செண்ட்னு ) நானே சொல்லித் தொலைக்கிறேன். ‘தென் ஹு கேவ் அட்டெண்டன்ஸ் ஃபார் ஹிம்?’ னு முறைக்கிறார். அதுக்காவது எவனாவது கையத் தூக்குவான்னுப் பாத்தா அதுக்கும் ஒரு பயலும் கையத் தூக்கல. பாவிகளானு திட்டிகிட்டே அதுக்கும் நானே கையத் தூக்கறேன். அவரு கடுப்பாகி என்ன வெளியப் போக சொல்லிட்டு ஒரு வார்த்த சொன்னார் பாருங்க எனக்கு சிரிப்ப அடக்கவே முடியல. என்ன சொன்னாரா? “யு க்காண்ட்ட் ச்சீட் மீ” னு தான்!

*

கடைசி செமஸ்டர் முழுக்க ப்ராஜக்ட் வேலைதான். அதனால கிளாஸ் எதுவும் நடக்காது. தினமும் காலைலயும் சாயங்காலமும், போய் டிப்பார்மெண்ட் ஆஃபிஸ்ல ஒரு ரெஜிஸ்டர்ல கையெழுத்துப் போட்டுட்டு வந்தாப் போதும். கிளாஸ் இருந்த செமஸ்டர்லயே காலேஜ்க்கு போகாம அட்டெண்டன்ஸ் லேக் ஆகி நம்ம வீட்டுக்கு லெட்டர் போகும். கிளாசே இல்லனா கையெழுத்துப் போடறதுக்கு மட்டும் காலேஜ் போக முடியுமா? நம்மப் பசங்களயே கையெழுத்துப் போட சொல்லிட்டு எஸ்கேப் ஆகிட்டு இருந்தேன். ஒருத்தன்கிட்ட சொல்லி அவன் போகலேன்னா மிஸ் ஆகிடுமேன்னு என் செட்டுப் பசங்க எல்லார்கிட்டவும் சொல்லியிருந்தேன். அப்படியும் மிஸ் ஆச்சுன்னா தினமும் பொறுப்பா போற தங்கச்சி ஒருத்திகிட்டவும் சொல்லி வச்சிருந்தேன். இப்படி எல்லாம் சுமூகமாப் போயிட்டு இருந்தப்ப நான் காசாளரா இருந்த அசோஷியனோட பொறுப்பாசிரியர் என்ன வந்து பாக்க சொல்லி பசங்ககிட்ட சொல்லியிருக்கார். அவரும் எங்க டிப்பார்ட்மெண்டுதான். நான் கொஞ்சம் சினிமா, ஊர் சுத்துறதுனு பிசியா இருந்ததாலப் போய் பாக்கவே முடியலங்க :( நான் வர்றேனா இல்லையானு பாக்க ரெஜிஸ்டர எடுத்துப் பாத்திருக்கார், எல்லா நாளும் என் கையெழுத்து இருந்திருக்கு. என்னடா இவன் தினமும் வர்றான் ஆனா நம்மளப் பாக்க மாட்டேங்கறானேன்னு கடுப்பாக ஆரம்பிச்சுட்டார். இது கொஞ்ச நாள் நடந்திருக்கு. அப்புறம் அவருக்கு சந்தேகமாகி ரெஜிஸ்டர எடுத்து ஆஃபிசுக்கு உள்ள வச்சிட்டார். ஒருத்தன் ஒரு கையெழுத்துதான் போடறானான்னு ஒரு ஆஃபிஸ் அசிஸ்டெண்ட் பொண்ண வச்சு கண்காணிக்க ஆரம்பிச்சுட்டார். நம்மப் பசங்க கில்லாடியாச்சே. அந்தப் பொண்ணு அசரற நேரம் பார்த்து கையெழுத்தப் போட்டுடுவானுங்க. அவருக்கு தினமும் டென்சன் ஏறிக்கிட்டேப் போயிருக்கு. அப்போ நான் ஊர்ல இல்ல. அவரு கிளாஸ் ரெப்புகிட்ட கூப்பிட்டு இத சொல்லியிருக்கார். அவனும் யாரும் ப்ராக்ஸி சைன் போடவேணாம்னு எல்லார்கிட்டவும் சொல்லியிருக்கான். பிரச்சினை பெருசாகவும் யாரையும் கையெழுத்துப் போட வேணாம்னு நானும் தனித்தனியா கால் பண்ணி சொல்லிட்டு ஒரு வாரம் கழிச்சு அவரப் பாக்கறதுக்காக காலேஜ் பக்கம் போனேன், உள்ள இருந்து ஒருத்தன் வந்தான், அவனும் என்ன மாதிரி ஒரு பத்து நாளைக்கு மேல ஊருக்குப் போயிட்டு அன்னைக்குதான் வந்திருந்தான். ‘என்ன மச்சான் உனக்கு ரெண்டு வாரமா யாரும் சைன் போடாம இருந்திருக்கானுங்க… இப்போதான் உனக்கும் நானே போட்டுட்டு வர்றேன்’ னு சொன்னதும் எனக்கு அவனக் கொலையே பண்ணலாம் போல இருந்துச்சு. அதுக்கப்புறம் “நான் அவன் இல்லை” மாதிரி “தினமும் நாந்தான் கையெழுத்துப் போட்டேன்”னு திரும்ப திரும்ப சொல்லியேதான் எஸ்கேப்பாக முடிஞ்சது.

*

இது ஒருத்தனுக்கு உதவலாம்னு போய் நான் சிக்கினது. ஆறாவது செமஸ்டர்ல communication skills னு ஒரு பேப்பர் இருக்கும். இங்கிலீஸ் மாதிரிதான். அது நமக்குக் கொஞ்சம் சுமாரா வரும்ங்கறதால முதல் ரெண்டு இண்டர்னல்லயும் நல்ல மார்க் இருந்துச்சு. மூணாவது இண்டர்னல் எழுத வேணாம்னு இருந்தேன். எப்படி இருந்தாலும் பெஸ்ட் ரெண்டுதான் எடுத்துப்பாங்க. இன்னொருத்தன் முதல் ரெண்டுலயும் ஃபெயில் ஆகியிருந்ததால மூணாவத அவனுக்குப் பதிலா எழுத சொன்னான். ரெண்டு பேரும் மாத்தி எழுதினோம். இன்னொரு பேப்பர் இதே மாதிரி வேற ஒருத்தன மாத்தி எழுத சொல்லியிருந்தான். ஆனா அந்த லெக்சரர் அத க்ளாஸ்லயே கண்டு பிடிச்சுட்டார். மாத்தி எழுதினவன் அந்த விசயத்தப் போய் communication skills எடுத்த மேடம்கிட்டவும் பொலம்பியிருக்கான். யாருக்குப் பதிலா எழுதின? ன்னு அவங்க கேட்க எழுத சொன்னவன் பேர இவன் சொல்ல…. Communication skills ல அவன் பேருக்கு நேரா மார்க்கப் பாத்திருக்காங்க. முப்பதுக்கு - 13, 12, 25 னு இருந்த்திருக்கு. அப்படியே மேலப் போனா 27, 29, 11 னு ஒரு மார்க் வந்திருக்கு – அதுக்கு நேரா என்னோட பேரு :) இந்தப் பையன வந்து என்ன பாக்க சொல்லுனு சொல்லியனுப்பியிருக்காங்க. வழக்கம்போல நான் பிஸியா இருந்ததால போகவே முடியல. ஃபைனல் எக்சாம் எழுதும்போது, முடிச்சிட்டு வந்து அவங்களப் பாக்கலன்னா பேப்பர் திருத்தமாட்டாங்கன்னு சொல்லியனுப்பினதால போய் அவங்களப் பாத்தேன். எதுவும் தெரியாத மாதிரி என்னப்பா மூனாவது இண்டர்னல்ல மார்க் கொறஞ்சிருக்குனு கேட்டாங்க. எனக்கு ஏற்கனவே நல்ல மார்க் இருந்ததால நான் மூனாவது இண்டர்னல் எழுத வேணாம்னுதான் இருந்தேன், அட்டெண்டன்ஸ் லேக் ஆகியிருந்ததால அட்டெண்டன்ஸ்க்காகதான் வந்தேன். படிக்கல! அப்படி னு ஏதோ சமாளிச்சேன். இந்த பையன் என்ன 13, 12, வாங்கிட்டு இருந்தவன் மூனாவது இண்டர்னல்ல 25 வாங்கியிருக்கான்? அப்படினு கேட்கவும் , ஏற்கனவே ஃபெயிலாகிட்டதால நல்லாப் படிச்சிருப்பான் மேடம்னு சொல்லி வச்சேன். திருத்தினப் பேப்பர் எல்லாம் ஏற்கனவே எங்க கைக்கு வந்திட்டதால அந்தம்மா அதுக்கு மேல எதுவும் கேட்க முடியாம அனுப்பிட்டாங்க.ஆனாலும் அந்த செம் ரிசல்ட் வர்ற வரைக்கும் கொஞ்சம் பதட்டமாதான் இருந்தது.

*

இன்னொரு செமஸ்டர்ல ஒரு லெக்சரர் கிட்ட மாட்டினது இது எல்லாத்த விடவும் பெரிய காமெடி. Fluid mechanics class ங்க அது. கால்குலேட்டர் இல்லாம அந்த க்ளாஸ்க்கு வரக்கூடாதுனு நான் போகாத என்னைக்கோ அந்த லெக்சரர் சொல்லியிருக்கார். 8:30 மணி காலேஜ்க்கு 8:20 க்கே எந்திரிச்சு ஒரு கையால ப்ரஷ் பண்ணிகிட்டே இன்னொரு கையால மூஞ்சியக் கழுவிட்டு, டிபன் சாப்பிடக்கூட நேரம் இல்லாம பேக்கரியில ஒரு டீயக் குடிச்சுட்டு ஓடி வர்ற அவசரத்துல டைம் டேபிள் எல்லாம் பாத்து கால்குலேட்டர் தூக்கிட்டு வர்றதுக்கு எவனுக்குதாங்க நேரம் இருக்கும்? (அப்பாடா எம்மேல தப்பே இல்லனு சொல்லியாச்சு). அன்னைக்கு கால்குலேட்டர் இல்லாமப் போய் உட்காந்துட்டேன். அட்டெண்டன்ஸ் எடுத்து முடிச்சதும் ஒரு நாலு பேர வெளிய அனுப்பலன்னா அவருக்கு தூக்கமே வராது. யாரெல்லாம் கால்குலேட்டர் கொண்டுவரலன்னு கேட்டதும் இன்னைக்கு நமக்கு அட்டெண்டன்ஸ் காலியாகப் போகுதுனு தோணுச்சு. கிளாஸ்ல இந்த மாதிரி கேள்வி கேட்டதும் நம்மப் பயலுகளோட ரியாக்ஷன பாத்திருக்கீங்களா? முன்னாடி பெஞ்சுல இருக்கவன் பின்னாடி திரும்பிப் பாப்பான். பின்னாடி இருக்கவன் பக்கத்துல இருக்கவனப் பாப்பான். ரொம்ப நல்லப் பையனா இருக்கிற ஒருத்தன் மெதுவா எந்திரிப்பான், அப்படியே ஸ்லோ மோஷன்ல அங்க இங்க னு கொஞ்சம் பேரு எந்திரிப்பாங்க. ( வேற மாதிரி நடக்கிறதும் உண்டு! ஒரு தடவ எங்க கிளாஸ்ல ஒருத்தன் தூங்கிட்டு இருக்கிறத ஒரு லெக்சரர் பாத்துட்டார். கடுப்புல, ‘ஹௌ டேர் யூ ஸ்லீப் இன் மை க்ளாஸ்’ னு கொஞ்சம் சத்தமாவே கத்திடவும், தூங்கிட்டு இருந்த ஒரு அஞ்சாறு பேரு படக்குனு எந்திரிச்சு நிக்கவும் அவரே சிரிச்சுட்டார் :) ) அன்னைக்கும் ஒரு அஞ்சாறு பேரு எந்திரிச்சாங்க. அவருக்குத் தேவையான கவுண்ட் கெடச்சிடுச்சுனு நான் எந்திரிக்காம உட்காந்தே இருந்தேன். அவங்கள வெளிய அனுப்பிட்டு கொஞ்சம் கணக்குகளக் கொடுத்து சால்வ் பண்ண சொன்னார். அப்பாடா இன்னைக்குத் தப்பிச்சோம்னு நெனச்சா, அவரு கிளாசையே சுத்தி சுத்தி வர ஆரம்பிச்சுட்டார். ஆகா, சனியன் சைட்டடிக்க ஆரம்பிச்சுடுச்சேனு ஒரு பதட்டம் வந்துடுச்சு. முன்னாடி இருந்த ரெண்டு பேர்கிட்ட கால்குலேட்டரோட கவர மட்டும் வாங்கி, அத ஒன்னு மேல ஒன்னு கவுத்து பாக்கறதுக்கு ஒரு கால் குலேட்டர் மாதிரி தெரியறாப்ல டேபிள் மேல வச்சிட்டு கணக்குப் போடற மாதிரி ஆக்ட் கொடுக்க ஆரம்பிச்சேன். கொஞ்சம் ஓவர் ஆக்ட்டா போயிடுச்சு போல. சுத்திகிட்டே இருந்தவர், கணக்கா என் பக்கத்துல வந்து நின்னுகிட்டு நான் கணக்குப் போடற அழகையேப் பாத்துகிட்டு இருந்தார். இந்த பரிட்சை எழுதும்போது கொடுமையான விசயம் என்னத் தெரியுங்களா? எந்த கேள்விக்கும் பதில் தெரியாமப் போறது கிடையாது. ஒன்னுமேத் தெரியாம நாம முழிச்சிட்டு இருக்கும்போது இந்த வாத்திங்க வந்து நம்ம பக்கத்துலயே நின்னுக்குவாங்க பாருங்க. செம கடுப்பா இருக்கும். எக்ஸாம் ஹாலா இருந்தாக்கூட அந்த மாதிரி சமயத்துல நான் தண்ணி குடிக்க எந்திரிச்சுப் போயிடுவேன். வெறும் பேப்பரப் பாத்துட்டு அவரே வெறுத்துப் போய் நகந்துடுவார், ஆனா இங்க ஒன்னும் பண்ண முடியல. எவ்வளவு நேரம் தான் நானும் சிந்திக்கிற மாதிரியே நடிக்கிறது? ‘நெக்ஸ்ட் வேல்யூ கால்குலேட் பண்ணுப்பா’னு அவர் கால்குலேட்டரத் திறக்க, “நாங்க கால்குலேட்டர் இல்ல… கால்குலேட்டர் மாதிரி!”ன்னு அந்த மூடிங்க ரெண்டும் கிகிகி னு சிரிக்கவும், ரெண்டு மூடியையும் தூக்கிகிட்டு கிளாஸ் முன்னாடிப் போய், ‘வீ ஹேவ் அ சயிண்ட்டிஸ்ட் ஹியர்’ அப்படினு ஆரம்பிச்சார். ஆகா நம்மப் பெருமை இன்னைக்கு காலேஜ் முழுக்கப் பரவப் போகுதுன்னு அந்த லெக்சர கேட்க ஆரம்பிச்சேன். முடிச்சதும், அடுத்த அஞ்சு நாளும் நான் அவர் கிளாசுக்கு வந்தாலும் ஆப்செண்ட் தான் போடுவேன்னும், அட்டெண்டன்ஸ் இல்லையேன்னு வராமப் போனா அடுத்த அஞ்சு நாளைக்கும் ஆப்செண்ட் தான் போடுவேன்னு சொல்லி ஒரு அப்பாலஜி லெட்டர் எழுதிக் கொடுக்க சொன்னார். நானும் ரொம்ப பாலிஷா ‘I am sorry for having misbehaved in the class. I assure you that this will not repeat again’ அப்படின்னு எழுதிக் கொடுத்தா, இதெல்லாம் செல்லாது செல்லாது னு சொல்லி ‘I have tried to cheat the lecturer by making two calculator covers look like a calculator….blah..blah…’ னு இந்த பதிவு நீளத்துக்கு ஒரு கடிதம் அவரே எழுதி எங்கிட்ட கையெழுத்து மட்டும் வாங்கிகிட்டு அனுப்பிட்டார். ஒரு சின்ன கால்குலேட்டருக்காக இத்தன ரணகளமா?


மீதியெல்லாம் வேறொரு நாளில்…

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.