Tuesday, January 30, 2007

படம் பார்த்துக் கதை கேளுங்க

இது தான் அமராவதி ஆறு.முன்பெல்லாம் ஆற்றில் குளிக்கிற அளவுக்கு தண்ணீரும் போகுமாம், சுத்தமாகவும் இருக்குமாம்.
பிறகு சாயப்பட்டறைகள் பெருகி சாயக்கழிவுகள் கலந்து ஆறு நாறிப்போனது. எப்போதாவது மழை வந்து ஆற்றை கழுவி விட்டுப் போகும். அப்போது மட்டும் ஆற்றில் ஊற்றுத் தோண்டி குளிக்கலாம். அப்புறம் ஆற்றில் இறங்கிவிட்டாலே வீட்டில் வந்து ஒருமுறை குளிக்க வேண்டிய நிலைமையில் இருந்தது. இப்போது இரண்டாண்டுகளாக பரவாயில்லை கொஞ்சமாகவேனும் தண்ணீர் ஓடிக் கொண்டு இருக்கிறது. நான் பார்க்கும்போது ஆற்றில் துணி துவைத்துக் கொண்டிருந்தார்கள். சுத்தமாகதான் இருக்கும்போல ;-)

இதுதாங்க நான் பள்ளிவாழ்க்கையின் கடைசி மூன்றாண்டுகள் போய் வந்த பள்ளிக்கூடம். ( படித்த பள்ளிக்கூடம் என்று பொய் சொல்ல விருப்பமில்லை ;-) ) திரு. வா. செ. குழந்தைசாமியும் இங்கே படித்திருக்கிறார். ஜான் டேவிட்டும் இங்கே படித்திருக்கிறார். நூற்றாண்டு கண்ட பழமையானப் பள்ளிகளுள் இதுவும் ஒன்று. தேய்த்து தேய்த்து வழுவழுப்பாகிப்போன மரப்பெஞ்சுகள், மரப்படிகள், அந்தக்கால மச்சு என இன்னும் பழமை மாறாத பள்ளி!
கரூர் பசுபதீசுவரர் கோயில் கோபுரம். இதுவரை ஒரே ஒரு முறைதான் உள்ளே சென்றிருக்கிறேன். வரலாற்று(?) செய்திகளை நிறையப் படங்களாக வரைந்து வைத்திருக்கிறார்கள். பொறுமையாகப் படித்தால் கொஞ்சம் பழையக் கதைகளைத் தெரிந்து கொள்ளலாம். உள்ளே கரூர்ச் சித்தர் என்பவரின் சமாதியும் உள்ளது. தமிழில் குடமுழுக்கு செய்யப்பட்ட திருமுக்கூடலூரும் போய்ப் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன் , ஆனால் நேரமில்லை :-(

எங்கள் பள்ளிக்கூடத்தில் முதல் பாடவேளையிலேயே வருகைப் பதிவெல்லாம் முடிந்துவிடும். அப்புறம் யார் எங்கு போகிறார்கள் என்றெல்லாம் யாரும் கவனித்துக் கொண்டிருக்க மாட்டார்கள். வகுப்பில் மாணவர்கள் எண்ணிக்கையெல்லாம் சாதாரணமாக மூன்றிலக்க எண்ணில்தான் இருக்கும். எங்கள் வகுப்பில் 10 வதில் 80 பேர் இருந்தோம். 11, 12 ம் வகுப்பில் 120 பேருக்கு மேல்!!! அரசுப் பள்ளி என்பதால் ஆசிரியரும் கண்டிப்பாக இருப்பதில்லை. அதனால் முக்கால்வாசி நேரம் வெளியில்தான் சுற்றிக்கொண்டிருப்போம். பள்ளிக்குப் பக்கத்திலேயே நூலகம் இருந்தது. அங்கே ஒரு கல்கியையோ, சாண்டில்யனையோ எடுத்துக்கொண்டு இந்த இடத்துக்கு வந்துவிடுவேன். இதுதான் பழைய ரயில்வே நிலையம் இருந்த இடம். படிப்பதற்கு ஏற்ற வகையில் அமைதியாக இருக்கும். பள்ளிநேரத்தில் பாதிப்பொழுது இங்கேதான் கழிந்தது.

தாந்தோன்றிமலையில் உள்ள பெருமாள் கோயில். இந்தக் கோயிலுக்குப் போகிற வழியில் ஒரு முனியாண்டி விலாஸ் உணவகம் இருக்கிறது. வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, அமாவாசை என்று வீட்டில் அசைவம் கிடைக்காத நாட்களில் நமக்கு விருந்து வைக்கும் இடம் அது.

இதுதான் திண்ணப்பா திரையரங்கம். இந்த திரையரங்கத்திற்கு ஒரு சிறப்பு உண்டு. ஒவ்வொருக் காட்சியிலும் படம் திரையிடப் படுவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கும். மக்களும் எழுந்து நிற்பார்கள். இது இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

கரூரில் பெரியாருக்கு சிலையில்லாத குறை சிலவருடங்களுக்கு முன்புதான் தீர்ந்தது. முதலில் மார்பளவு சிலையாக வைத்தார்கள்; அண்மையில் ஒரு பேருந்து மோதியதில் அதுவும் சிதைந்து போகவும், பிறகு முழு உருவச்சிலையாக வைக்கப்பட்டிருக்கிறது. சிலை வைத்தவர்கள் தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள்.அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.