Thursday, July 28, 2011

எப்பொழுது கவிதை வாசிக்கத் துவங்குகிறாய்

*

எனது முத்தங்கள்
ஆடைகளற்று நாணுகின்றன.
உனது முத்தங்களை அணிவித்தாலென்ன?

*

இறுதி அத்தியாயத்தை முதலில் வாசித்துவிட்டு
பிறகு நாவலைத் துவங்கும் வாசகனைப்போல
இறுதிவரியில் பொதிந்திருக்கும்
உனது முத்தங்களை அள்ளிய பிறகே
உனது கடிதங்களை வாசிக்கத் துவங்குகிறேன்.

*

நான்
நனைந்தபடி ரசிக்கும் பெருமழை
நீ.

*

செடிக்கு உரமாகட்டுமென
காலையில் சூடியப் பூக்களை
செடிக்கருகிலேயே உதிர்க்கிறாய்.
வாடிய பூக்களில் வீசும் உனது கூந்தல்மணத்தால்
அந்தியிலேயே மலர்கின்றன புதிய மொட்டுகள்.

*

உலகின் பேரழகான கவிதை
உலகின் பேரழகான வாசகிக்கென
எழுதப்படாமல் இருக்கிறது.
எப்பொழுது கவிதை வாசிக்கத் துவங்குகிறாய்?

*