Saturday, April 29, 2006

விட்டுப்போன ஒன்று!


நீ வைத்த ரோஜா செடி, முதல் பூ பூத்ததும்,
முதலில் என்னிடம் சொல்லித்தான் புன்னகைப் பூத்தாய்!

நான் வாங்கும் பரிசுகளெல்லாம் உன்னிடம் தான்
தங்களை முதலில் அறிமுகப் படுத்திக் கொள்கின்றன!

என் நகக்காயம் முதல் மனக்காயம் வரை
எல்லாவற்றுக்கும் மருந்தாகிறாய் நீ!

உன் தங்கையோடு நடக்கும் செல்லச்சண்டை முதல்
உன் நண்பனிடம் போட்ட கோபச்சண்டை வரை
எல்லாவற்றுக்கும் சாட்சியாகிறேன் நான்!

யார் மேல் கோபம் என்றாலும்
என்னிடம் தீர்த்துக் கொள்கிறாய் நீ!

உன் மேல் கோபம் வந்தாலும்
என்னையேக் கோபிக்கிறேன் நான்!

ஒவ்வொரு மாதமும் என் பிறந்த நாளன்று
என்னை வாழ்த்துகிறாய் நீ!

ஒவ்வொரு வாரமும் நீ பிறந்தக் கிழமையன்று
உன்னை வாழ்த்துகிறேன் நான்!

இப்படி மகிழ்ச்சி, சோகம், கோபம், வாழ்த்து என
எல்லாவற்றையும் பரிமாறிக்கொண்டோம்
"நம் காதலை"த் தவிர!
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.