Friday, December 31, 2010

புத்தாண்டு வாழ்த்து

சக்தி வாய்ந்த என் முத்த‍மொன்று
உனது கன்ன‍த்தில் விழுந்து வெடிக்கிறது.
க‌லவரம் பிற இடங்களுக்கு பரவாமலிருக்க‍
செவ்வ‍ரி இதழ்களை அனுப்புகிறாய்...நிகழ்விடத்துக்கு!

*

பிறந்தநாள் பரிசாக‌
எப்பொழுதும் முத்த‍ம்தானா?
ம‌லர மறுக்கும் மொட்டு போல முகம் சுருங்குகிறாய்.
உனது வயதுக்கொன்றென இருபத்துநான்கு வகை மலர்களை நீட்டுகிறேன்.
என்னை வாரிக்கொண்டவள், எனது வயதுக்கொன்றென இருப்ப‍த்தேழு வகை முத்..

*

மாலையில் நீ கொடுத்த‍ தாய்முத்த‍ம்,
ஓர் இரவு முழுவதும் ஈன்று கொண்டேயிருக்கிறது...
அனிச்சம் போன்ற குட்டிமுத்த‍ங்களை!

*

ஏன்?
எப்படி?
எவ‌ரது கோபம்? எனக் காரணம் தெரியாத ஊடலைத் தீர்க்க‍..
அருகில் அமர்ந்து சமாதானம் பேசாமல்,
கட்டிப்புரண்டு சண்டையிடுகின்றன நம் இதழ்கள்!

*

மேற்கில் மறையும் முன்ன‍ர்
சூரியன் வீசிய பறக்கும் முத்த‍ம்
நீ வாங்க மறுத்த‍தால் இரவில் காய்கிறது நிலவென!

*

சூடும் முன் முத்த‍மிட்டுச் சூடிக்கொள்.
உன் முத்த‍ம் பெற்று
வாடாமலிருக்கும்... ரோஜா!

*

சூடாகிற‌தென‌ கோபிக்காதே!
அலைபேசிக்குத் தெரியுமா..
உன் முத்தங்க‌ளின் வெப்ப‌ம் தாங்கும் வித்தை?

*

ஆழ‌ப் பார்வையில் விழியும்
முக‌ம் வ‌ருடும் விர‌லும்
ஏழு ஸ்வ‌ர‌ங்க‌ளில் உயிரும் பேசுகையில்
வாய் ம‌ட்டும் பேசாம‌ல் செயல்ப‌டுவ‌து...மௌன‌விர‌த‌மா? முத்த‌விர‌த‌மா?

*

செல்ல‍த்தேர்தலில் முதலிரு சுற்றிலும்
முப்ப‍து முத்த‍ங்கள் அதிகம் பெற்று
எட்ட முடிகிற வித்தியாத்தில்தான் முன்ன‍ணியில் இருந்தாய்.
மூன்றாம் சுற்றின் முடிவில்
உனைவிட பலமடங்கு அதிகம் பெற்றும்...தோற்கிறேன்.
இதழில் யார் பெற்றாலும் செல்லாமுத்த‍ம் என்பது என்ன‍ நியாயம்?

*

அணிவிளக்காய் கண்கள் மலர...
யாக்கை, விழாக்கோலம் பூண...
விட்டோடும் நாணம், தோரணம் கட்ட‍...
இதழ், பல்ல‍க்கு தூக்க‍...
காதல் ஊர்வலம் புறப்ப‍டுகிறது...முத்த‍ச்சாமி!

*

நன்றாகத்தான் இருக்கின்றன‌...
நீ வரைந்து பழகுகிற‌ ஓவியங்கள்!
தின‌ம் தோறும் நூற்றுக்க‌ண‌க்கில்
ப‌ழ‌க‌ ப‌ழ‌க‌ ஓவிய‌ம் இனிப்ப‌தெல்லாம் ச‌ரிதான்...ஆனால்,
நீ ஓவியர் ஆகும்முன், இத‌ழ்க‌ளுக்குப் ப‌தில் தூரிகையும், காகித‌மும் எடுப்பாயா?

*

திசுக்க‌ள் எங்கும் காத‌ல் குளிர்.
வாச‌ம் வீசும் கூந்த‌ல் மேக‌ம்.
ம‌ன‌ம் எங்கும் ல‌ப்ட‌ப் இடியோசை.
பார்வை ப‌றிக்கும் விழியில் மின்ன‌ல்.
ந‌ம் உயிர் ந‌னைத்துப் பொழிகிற‌து முத்த‌ம‌ழை.

*

இந்த மொக்கைகளுக்கும் புத்தாண்டுக்கும் என்ன சம்பந்தம்னு தான கேட்கறீங்க?
ஒவ்வொரு மொக்கையிலும் முதல் வரியின் முதல் எழுத்து, இரண்டாம் வரியின் இரண்டாம் எழுத்து, மூன்றான் வரியின் மூன்றாம் எழுத்து... இப்ப‍டிச் சேர்க்கவும் :)

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!