Thursday, July 12, 2007

ஆயுற்காலிகம்

நம் நட்பு தூங்கிக் கொண்டு
நான் விழித்திருந்த
ஒரு கனவுப் பொழுதில்
எனக்குள் விழுந்தாய்.

எனக்கானவள் யாரெனத் தேடி
உனக்கானவன் நானென்ற முடிவில்
எனக்குள் விழுந்தது காதல்.

என் காதல்
உன் நட்பை உரசிய
கனமான கணத்தில்
நானும் உனக்குள் விழுந்தேன்.

கற்பனையில் கருவாகி
கவிதையில் உருவாகி
உனக்குள்ளும் விழுந்தது காதல்.

நீ,
நான்,
நம் காதல்
சந்தித்தப் புள்ளியில்
கோலமிட ஆரம்பித்தது காலம்.

கோலத்தில் சிக்கி
சிக்கலாகிப் போனது
நம் காதல் வாழ்வு.

பிரிவும் துயரும்
தற்காலிகம் என்றிருந்தேன்.
நினைவுகளைப் போல
அவையும் ஆயுற்காலிகம் என்றபடி
தொடர்பறுத்து விலகினாய்.

ம்ம்ம்.. இருவருமே சுயநலவாதிகள் தாம்.
என் சுயமாக எப்போதும் நீ.
உன் சுயமாகவும் நீயே!

(அண்மையில் வாசித்த காதல் நினைவுகள் குறித்த இரண்டு இடுகைகளின் பாதிப்பில்...
ஒன்று, ஓர் ஆணின் பார்வையில், கவிதை வடிவில் ப்ரியன் அவர்களுடையது.
மற்றொன்று, ஒரு பெண்ணின் பார்வையில் கட்டுரை வடிவில் சந்திரவதனா அவர்களுடையது)

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.