Friday, June 29, 2007

ஐந்து அழகும,் ஒரு பேரழகும்

எட்டு விளையாட்டுக்கும் முன்பு ஆரம்பித்த பதிவுத்தொடர் "அழகுப் பதிவுகள்" . ஏப்ரல் மாதமே இம்சையரசி
அழைத்திருந்தும் நேரமின்மையால் பதிவிடாமல் இருந்தது இப்போது…

எது அழகு?
பொதுவாக கண்கள் அழகாக உணர்வதை மட்டுமே அழகு என்ற வார்த்தை மூலம் அர்த்தப்படுத்துகிறோமோ என்று எனக்குத் தோன்றுகிறது. இயற்கைக் காட்சிகள், பூக்கள் என்று கண்ணுக்கு அழகான விசயங்கள் இருக்கின்றன. சில விசயங்கள் கண்களைத் தாண்டி அந்த அழகை இதயத்துக்கு தூக்கி செல்வதுமுண்டு, குழந்தையின் சிரிப்பைப் போல. இவற்றையும் தாண்டி இதயம் மட்டுமே உணர்கிற அழகான விசயங்கள் சில உண்டு. வாழ்க்கையை அழகாய் ரசிக்க கண்கள் பார்க்கும் அழகைவிட இதயம் உணரும் அழகு முக்கியமென நினைப்பவன் நான். அவை இதயத்தைப் பொருத்து மாறுபடலாம். என்னைப் பொருத்தவரை இதயம் உணரும் அழகான விசயங்கள் என்று நான் நினைப்பவை இவை.

1. ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் இருக்கிற உணர்வுகளில் மிகவும் அழகானது, அப்பா - மகள் மற்றும் அம்மா - மகன் உறவுகளில் இருப்பவை தான். பெரும்பாலும், பையன்கள் அம்மா செல்லங்களாகவும், பெண்கள் அப்பா செல்லங்களாகவும் இருப்பதற்கு இதுதான் காரணமாக இருக்குமென்பது என் கணிப்பு.

2. அதற்கு கொஞ்சமும் குறைவில்லாத இன்னோர் அழகான உணர்வு, அண்ணன் - தங்கை, அக்கா - தம்பி க்கிடையே இருக்கும் உணர்வு. எனக்கொரு தங்கை இல்லை என்கிற ஏக்கம் இன்னமும் இருந்தாலும் ;), அக்காக்களோடு பிறந்த தம்பிகள் இன்னும் பாக்கியம் பெற்றவர்கள் என்று கண்டிப்பாக சொல்லுவேன்.

( இப்பொழுது இருக்கும் நம்முடையப் பெற்றோருக்கும், உடன்பிறந்தவர்களோடும் பிறந்திருக்காமல் வேறு ஒரு பெற்றோருக்கு மகளாக/மகனாக பிறந்திருந்தாலும் அல்லது வேறு ஒருவருக்கு தங்கையாக/தம்பியாக பிறந்திருந்தாலும் மேலே குறிப்பிட்ட இந்த உணர்வுகள் இப்பொழுது இருப்பது போலவேதான் இருந்திருக்கும் என்றாலும் அவற்றை கண்டிப்பாக வெறுமனே உறவுகளுக்கிடையேயான அன்பு, பாசம் என்று மட்டும் சொல்லி விட முடியாது என்றே நினைக்கிறேன்.)

3. உண்மையான நட்பு. இதனை விக்கிரமன் படக்கண்ணோட்டத்தில பார்க்காமல், எதார்த்தத்தோடு பார்த்தால் இதன் அழகு சொல்லாமலேப் புலப்படும். குடும்பத்தில் இருக்கும் யாரோடும் பகிர்ந்து கொள்ள முடியாத விசயங்களையும் எந்தவித தயக்கமுமில்லாமல் தன்னில் ஒரு பகுதியாக நினைத்து பகிர்ந்துகொள்ளக்கூடிய நட்புக் கிடைத்துவிட்டால் வாழ்க்கையில் அதை விட அழகான விசயம் வேறென்ன இருக்க முடியும்?

4. குழந்தைகள். பார்த்தவுடனே நம்மையும் தங்கள் உலகத்துக்குள் இழுத்துக்கொண்டு நம்மையே மறக்க வைக்கிற சக்தி குழந்தைகளுக்குண்டு. ஆயிரம் கவலைகளை சுமந்திருக்கும் மனமும் குழந்தையின் ஒற்றைச் சிரிப்பில் இலேசாகிப் போகும். தானும் மகிழ்ச்சியாக இருந்துகொண்டு தன்னை சுற்றி இருப்பவர்களையும் மிக எளிதாக மகிழ்ச்சிப் படுத்துகிற ஆற்றல் குழந்தைக்கு இருப்பதால்தானே, இன்னமும் குழந்தையாக மாறிவிடவே எல்லாரும் ஆசைப்படுகிறோம். எந்த வசதியும் இல்லாத , ஏழ்மையான ஒரு குடிசையையும் வாழ்வதற்கான ( "வசிப்பதற்கான" அல்ல) அழகான இடமாக மாற்றிவிடுகிறது, ஒரு குழந்தை.

5. புத்தக வாசிப்பு. நட்பைப் போன்றதுதான் புத்தகமும். ஒரு புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்துவிட்டால், எனக்கு உலகமே மறந்துவிடும். சுற்றிலும் என்ன நடந்தாலும், முழுதாய் புத்தகத்துக்குள் மூழ்கி விடுவேன். ஒவ்வொரு புத்தகத்தை வாசித்து முடிக்கும்போதும் வேறோர் உலகத்தில் வாழ்ந்துவிட்டு வந்ததைப் போல தான் இருக்கும். துயரங்கள் அளவில்லாமல் துரத்தும்போது பாதுகாப்பாய் ஒளிந்து கொள்ள அழகான இடமாய் நான் கருதுவது புத்தகங்களைத்தான்.

6. இதுவரை சொன்னது அழகான விசயங்களைப் பற்றி. இதற்கும்மேலே பேரழகான விசயம் ஒன்றுண்டு. அது கிடைக்காவிட்டால் மேலே சொன்ன அழகான விசயங்கள் எல்லாவற்றையும் உணரும் வாய்ப்பைப் பெற்றிருந்தாலும் வாழ்வு நிறைவுபெறாது என்பதும், மேற்சொன்ன அழகான விசயங்கள் எதுவுமே கிடைக்காவிட்டாலும்கூட இது மட்டும் கிடைத்தாலே வாழ்க்கையை அழகாக வாழ முடியும் என்பதும் என் எண்ணம். அது "காதலிப்பதும், காதலிக்கப் படுவதும்". உணர்வுகளை உணரத்தான முடியும். எப்படி எழுத? அதனால் இதோடு நிறுத்திக்கொள்கிறேன்.

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

4 comments:

  1. 6. இதுவரை சொன்னது அழகான விசயங்களைப் பற்றி. இதற்கும்மேலே பேரழகான விசயம் ஒன்றுண்டு. அது கிடைக்காவிட்டால் மேலே சொன்ன அழகான விசயங்கள் எல்லாவற்றையும் உணரும் வாய்ப்பைப் பெற்றிருந்தாலும் வாழ்வு நிறைவுபெறாது என்பதும், மேற்சொன்ன அழகான விசயங்கள் எதுவுமே கிடைக்காவிட்டாலும்கூட இது மட்டும் கிடைத்தாலே வாழ்க்கையை அழகாக வாழ முடியும் என்பதும் என் எண்ணம். அது "காதலிப்பதும், காதலிக்கப் படுவதும்". உணர்வுகளை உணரத்தான முடியும். எப்படி எழுத? அதனால் இதோடு நிறுத்திக்கொள்கிறேன்


    "எங்கையோ போட்டீங்கள். அழகு அழகு அழகு. அடடா இது தான் பேரழகு.உணர்வுகள் சாக சாக புதுசு புதுசா பிறப்பெடுக்கும்.+

    ReplyDelete
  2. பேரழகுல அசத்தீட்டீங்க.:)

    ReplyDelete
  3. /"எங்கையோ போட்டீங்கள். அழகு அழகு அழகு. அடடா இது தான் பேரழகு.உணர்வுகள் சாக சாக புதுசு புதுசா பிறப்பெடுக்கும்.+/

    நன்றி நளாயினி!!!
    உணர்வுகள் சாக சாக புதுசு புதுசாக பிறப்பெடுக்கும். எனக்கிது, புரிந்தும் புரியாமல் இருக்கிறது.

    ReplyDelete
  4. வாங்க முத்துலட்சுமி,

    / பேரழகுல அசத்தீட்டீங்க.:)/

    நான் நினைக்கிறததான் சொல்லியிருக்கேன்். அது உங்களுக்கும் பிடிச்சிருக்கிறதுல மகிழ்ச்சி.

    ReplyDelete