Wednesday, June 27, 2007

எட்டாக்கனி

எட்டு விளையாட்டுக்கு என்னை அழைத்த சிறிலுக்கு நன்றிகள். என்னைப் பற்றி பெருமையான எட்டு விசயங்கள் எழுத எதுவுமில்லை. அதனால் என்னைப் பற்றிய எட்டு விசயங்களை மட்டும் பகிர்ந்துகொள்கிறேன்.

1. "அருட்பெருங்கோ நல்ல தமிழ்ப் பெயர், ஆனா வாய்லதான் நுழைய மாட்டேங்குது" - என்னோடப் பெயரைக் கேட்டதும் பெரும்பாலானவர்கள் சொல்றது இதுவாத்தான் இருக்கும். அதக் கொஞ்சம் தெளிவாக்க இதை ஒரு வாய்ப்பா எடுத்துக்கறேன். என்னோட இயற்பெயர் சிவசாம்ராஜ். தமிழ் மேல இருந்த பாசத்துல சாம்ராஜ், பெருங்கோ ஆகிட்டான் (சாம்ராஜ் ‍- பேரரசன் - பெருங்கோ). எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லாததால, பேர்ல இருந்த சிவமும் பிடிக்கல, அதையும் மாத்தலாம்னு யோசிச்சப்போதான் அன்பே சிவம்னு கமல் சத்தம் போட்டார். சரி அன்பு னு மாத்தலாம்னு யோசிக்கும்போதுதான் என்னோட சிற்றறிவுக்கு, கொஞ்ச நாள் முன்னாடி நான் எங்கேயோ படிச்ச ஒரு விசயம் ஞாபகத்துக்கு வந்தது. குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் இந்த மாதிரி நமக்குப் பழக்கமானவங்க மேல காட்டறதுக்கு பேர்தான் அன்பு, ஆனா முன்னப்பின்ன பழக்கமில்லாத எல்லார் மேலேயும் காட்டற அன்புக்கு அருள்னு பேர் அப்படினு எங்கேயோ படிச்சிருக்கேன். இப்படிதான் சிவம் அன்பாகி , அன்பு அருளாகி, இறுதியா சிவசாம்ராஜ்- அருள்+பெருங்கோ - அருட்பெருங்கோ ஆகிட்டேன். (அருட்பெருங்கோனு சும்மா பேருக்குதான் வச்சிருக்கேன், இன்னும் கெசட்ல எல்லாம் மாத்தல)

2.இன்னொரு விசயம் சொல்லனும்னா, நான் எப்பவும் தமிழ்ல தான் கையெழுத்துப் போடறேன். ஆரம்பத்துல ம.சிவசாம்ராஜ் னு போட்டுட்டு இருந்தது, அப்புறமா ம.சிவசாம்ராசு ஆகிடுச்சு. நான் எங்க நிறுவனத்துல வேலைக்கு சேர்ந்தப்போ முதல் மூனு மாசத்துக்கு பயிற்சி வகுப்பு நடந்தது. எங்க வகுப்புல மொத்தம் 140 பேர் இருந்தோம். அதுல வருகைப் பதிவேட்டுலப் பார்த்தா 138 பேர் ஆங்கிலத்துல தான் கையெழுத்துப் போட்டிருப்பாங்க. என்னத்தவிர தாய்மொழியில கையெழுத்துப் போட்ட அந்த இன்னொருத்தர் ஒரு ஜப்பானியர் :)

3.பள்ளிக்கூடத்துல படிக்கும்போது பேச்சுப் போட்டி, கட்டுரைப்போட்டின்னா ஒரு ஆர்வக்கோளாறுல போய் கலந்துக்குவேன். எப்படியும் பரிசு கிடைச்சுடும். அதுல மறக்க முடியாததுன்னு சொல்லனும்னா ஆறாவது படிக்கும்போது ஆத்தூர் தாலுகாவுல எல்லாப் பள்ளிக்கும் பொதுவா நடந்த போட்டியில முதல் பரிசு வாங்கினதுதான். ஒவ்வொரு பள்ளியில இருந்தும் ஒருத்தர மட்டும்தான் தேர்ந்தெடுத்து அனுப்பனும்னு சொன்னதால முதல்ல எங்க பள்ளி அளவுல ஒரு போட்டி நடந்துச்சு. அதுல எப்படியோ என்னத் தேர்ந்தெடுத்து அனுப்பிட்டாங்க. அந்த தாலுகா அளவுல நடக்கிற போட்டிக்கு என்னோட உடன்பிறப்பு (அண்ணண்)தான் சைக்கிள்ல கூட்டிட்டுப் போனாரு. அங்கப் போய் பார்த்தா ஒரு கூட்டமே வந்து கும்மியடிச்சுட்டு இருக்காங்க. ஒவ்வொரு பள்ளிக்கூடத்துல இருந்தும் ஒருத்தர்தான் வரணும்னு சொன்னா அந்த ஒருத்தருக்கு பக்கபலமா நாலு வாத்தியாருங்க சுத்திலும் இருக்காங்க. அங்கங்க நின்னுகிட்டு பேசப் போறவங்களுக்கு சிப்ஸ்.. ச்சீ.. டிப்ஸ் கொடுத்துட்டு இருக்காங்க. எல்லாம் தனியார் பள்ளிக்கூடமா… ஒரே படோபடமா இருக்கிறதப் பார்த்ததும் எனக்கு காதல் கொண்டேன் தனுசு மாதிரி ஒரே பீலிங்க்சா போச்சு. வெள்ள சட்ட, காக்கி டிராயர்னு நம்ம யூனிபார்மே ஒரு தினுசாதான் இருக்கும். பேச்சுப் போட்டி ஆரம்பிச்சு எல்லாரும் பேச ஆரம்பிச்சாங்க. ஒருத்தன் பேச்சுல ஆக்ரோஷத்தக் காட்டி மைக்க உடைக்கப் போயிட்டான். அவனுக்கு எல்லாரும் கை தட்றத பார்த்தவுடனே அவனுக்குதான் பரிசு கிடைக்கும்னு முடிவே பண்ணிட்டேன். அப்புறம் இன்னொரு பொண்ணு பேசும்போது எனக்கு பரிசு கிடைக்காதுன்னு எனக்கே கன்ஃபார்ம் ஆச்சு. பின்ன என்னங்க தமிழ்லதான் பேச்சுப்போட்டினு சொன்னாங்க, அந்த பொண்ணு நடுவுல அசால்ட்டா இங்கிலீசுல பேச ஆரம்பிச்சுடுச்சு. எதுவும் புரியலன்னாலும் எல்லாரும் கை தட்டுறாங்க எனக்கு கண்ணே கட்ட ஆரம்பிச்சுடுச்சு. (எங்க பள்ளிக்கூடத்துல இங்கிலீசு வாத்தியாரே இங்கிலீசுல பேசி நான் பார்த்ததில்ல.) அப்புறம் நானும் போய் பேசிட்டு வந்து உட்காந்துட்டேன். முடிவ அறிவிக்க வந்தவர் பின்னாடி இருந்துதான் அறிவிப்போம்னு சொல்லி மூனாவது பரிச அந்த ஆக்ரோசப் பையனுக்கு கொடுத்துட்டார். ரெண்டாவது பரிச வாங்கினதுக்கே அந்த பொண்ணு அழ ஆரம்பிச்சிடுச்சு.ஒருவேளை முதல் பரிசு கிடைக்கும்னு எதிர்பார்த்திருக்கும்போல! கடைசியா முதல் பரிசு “அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளியைச் சேர்ந்த….” னு அவர் சொல்லி முடிக்கிறதுக்குள்ள நான் மேடைல போய் நின்னுட்டேன் :). போட்டியோட தலைப்பு “காந்தியும் காமராஜரும்”, பரிசா கொடுத்த புத்தகம் “சத்திய சோதனை” :) ( முதல் பரிசு வாங்கினத விட அதிகமா அன்னைக்கு நான் சந்தோசப்பட்டது வேற ரெண்டு விசயத்துக்குதான். இரண்டாவது பரிசு வாங்கின பள்ளியில இருந்து ஒரு டீச்சரம்மா வந்து “தம்பி நல்லாப் பேசினப்பா! உனக்கு யாரு ப்ரிபரெசனெல்லாம்?” னு கேட்டதுக்கு “எங்கக்கா” அப்படின்னு பெருமையா சொன்னதும் + எனக்கு ஒரு மிட்டாய் கொடுக்கிறதுக்கே ரெண்டு தடவை யோசிக்கிற எங்கண்ணன் அன்னைக்கு எனக்கு டீ , பன்னெல்லாம் வாங்கிக்கொடுத்ததும் தான் :) )

4.பத்தாவது வரைக்கும் நானும் நல்லாதான் படிச்சுட்டு இருந்தேன். பத்தாவதுல பள்ளியிலேயே முதல் மதிப்பெண் வாங்கற அளவுக்கு நல்ல பையன்னா பார்த்துக்குங்க. அதுக்கப்புறம்தான் எனக்கு சனி பிடிச்சதா இல்ல சனிக்கு என்னப் பிடிச்சதான்னு தெரியல. அதுவரைக்கும் பங்காளிகளா இருந்த படிப்பும் நானும் பகையாளிகளா மாறிக் கடைசியில, கல்லூரியில “உன் சேவை கல்லூரிக்குத் தேவை”னு சொல்லி, நாலு வருசப் படிப்ப அஞ்சு வருசம் படிக்க வைச்சு அனுப்புற அளவுக்குப் போயிடுச்சு (அந்த சோகக் கதைய ஒரு தொடர் கதையா அப்புறம் எழுதறேன் :) )

5.கரூர்ல 10, +1, +2 படிச்ச மூனு வருசமும் நான் ஒரு படம் கூட பார்த்ததில்ல. வீட்டிலயும் டி.வி கிடையாது. “சூர்யவம்சம்” படம் பார்க்க எங்கம்மாவே கட்டாயப் படுத்தி பார்க்க சொல்லியும் நான் பார்க்கல… பசங்க எல்லாரும் பள்ளிக்கூடத்துக்கு கட் அடிச்சுட்டு படத்துக்குப் போகும்போது நான் கட் அடிச்சுட்டு நூலகத்துக்குப் போய்டுவேன், நாவல் படிக்க. ஆனா அதுக்கெல்லாம் சேர்த்து கோவைல கல்லூரியிலப் படிக்கும்போது படம் படமா பார்த்துத் தள்ளியாச்சு.

6.சின்ன வயசுல இருந்தே ஊர் சுத்துறதும், ஊர் ஊரா சுத்துறதும் எனக்குப் பழக்கமாகிடுச்சு. பிறந்தது ஆத்தூர்ல... 7வது வரைக்கும் படிப்பு அங்கதான்... அப்பவே பசங்களோட ஊர் சுத்துறது ஆரம்பிச்சிடுச்சு, அப்புறம் ரெண்டு வருசம் சேலத்துல...அண்ணா நூலகம், மாவட்ட மைய நூலகம், ராஜாஜி நூலகம்னு சுத்தி(சுத்திப் படிச்சி)ருக்கேன், அப்புறம் +2 வரைக்கும் கரூர்ல...இது நம்ம ஏரியா! சொல்லவே வேண்டாம்… நல்லா ஊர் சுத்தின ஊர்!!! அப்புறம் கல்லூரி படிப்பு 5 வருசம் கோவைல... உண்மையிலேயே ஊர் சுத்துற சுகத்த முழுசா அனுபவிச்சது கோவைலதான். பீளமேட்டுல இருந்து மருதமலை வரைக்குமே சைக்கிள்லையே போயிட்டு வந்துடுவோம்னா பார்த்துக்கோங்க‌. அது முடிஞ்சதும் வேலைல சேர்ந்தது மைசூர்ல, அப்புறம் ஹைதராபாத், பெங்களூர், மும்பை, சென்னைனு பந்தாடி நேத்து காலைலதான் மறுபடியும் ஹைதரபாத் வந்து எறங்கியிருக்கேன்.

7.காதக் கிட்ட கொண்டு வாங்க ஒரு ரகசியம் சொல்றேன்… “முதல் முதலா முழுசா ஒரு சிகரெட் பிடிச்சப்போ எனக்கு வயசு 10. கடைசி சிகரெட் பிடிச்சப்போ வயசு 22”. ( இப்போ எனக்கு வயசு 24 :) )

8.நான் வ‌லைப்ப‌திய‌ற‌தோ, க‌விதை(?) எழுத‌ற‌தோ எங்க‌ வீட்ல‌ யாருக்குமேத் தெரியாது. வீட்ல‌ சொல்லாம‌ இருக்கிற‌துக்கு ஒரே கார‌ண‌ம் நான் எழுதியிருக்கிற‌து எல்லாமே காத‌ல‌ப் ப‌த்தி ம‌ட்டுமே இருக்கிற‌தால‌தான். அப்ப‌டியென்ன‌ காத‌ல‌ப் ப‌த்தி எழுத‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம்னு கேட்கிற‌வ‌ங்க‌ளுக்கு : எட்டாக்கனி , கிட்டாக்கனி மேல‌தான எல்லோருக்குமே ஆசை அதிக‌மா இருக்கும்?

நான் அழைக்க விரும்பும் எட்டு பேர் :

1. ப்ரியன்
2. சத்தியா
3. கோவி.கண்ணன்
4. சுதர்சன்.கோபால்
5. ப்ரேம்குமார்
6. தேவ்
7. இம்சை அரசி
8. பொட்"டீ"க்கடை சத்யா

விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.
2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.
3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

26 comments:

  1. எட்டாக்கனியா எட்டாங்கனியா? என்னைக் கேட்டா எட்டுங் கனிதான்னு சொல்வேன். :)

    // அதுல வருகைப் பதிவேட்டுலப் பார்த்தா 138 பேர் ஆங்கிலத்துல தான் கையெழுத்துப் போட்டிருப்பாங்க. என்னத்தவிர தாய்மொழியில கையெழுத்துப் போட்ட அந்த இன்னொருத்தர் ஒரு ஜப்பானியர் :) //

    அருமை. உன்னைப் பாராட்டுகிறேன். இப்பவும் அப்படியேதானா? இது தெரிஞ்சிருந்தா ஒன்னயக் கையெழுத்துப் போடச் சொல்லிப் பாத்திருப்பேனே. ஆகா!!

    // “தம்பி நல்லாப் பேசினப்பா! உனக்கு யாரு ப்ரிபரெசனெல்லாம்?” னு கேட்டதுக்கு “எங்கக்கா” அப்படின்னு பெருமையா சொன்னதும் + எனக்கு ஒரு மிட்டாய் கொடுக்கிறதுக்கே ரெண்டு தடவை யோசிக்கிற எங்கண்ணன் அன்னைக்கு எனக்கு டீ , பன்னெல்லாம் வாங்கிக்கொடுத்ததும் தான் :) ) //

    அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? அதான் ஆர்வலர் டீபன் பூசல் தருமாமே! :)))) இன்னொரு வாழ்த்துகள்.

    // “முதல் முதலா முழுசா ஒரு சிகரெட் பிடிச்சப்போ எனக்கு வயசு 10. கடைசி சிகரெட் பிடிச்சப்போ வயசு 22”. //

    நல்ல வேலை செஞ்ச. இதுல சிறப்பு என்னது தெரியுமா? கடைசி சிகரெட்னு சொன்னியே...அதான். அது அப்படியே இருக்கட்டும்.

    ரொம்ப நல்லாயிருந்தது பதிவு. ஐதராபாத்துக்கு வந்தாச்சா? எப்படிப் போகுது?

    ReplyDelete
  2. நன்றாக இருந்தது உங்கள் எட்டு. வாழ்த்துக்கள் !

    //அப்புறம் ரெண்டு வருசம் சேலத்துல...அண்ணா நூலகம், மாவட்ட மைய நூலகம், ராஜாஜி நூலகம்னு சுத்தி(சுத்திப் படிச்சி)ருக்கேன்//
    நூலகத்தில் சுற்றிக் கொண்டிருந்தால் காதல் பதிவில்தான் வரும் :) உங்கள் கவிதை வரிகளுக்காகவே யாராவது காதல்கொள்ளப் போகிறார்கள், பார்த்துக் கொண்டிருங்கள்.

    ReplyDelete
  3. /எட்டாக்கனியா எட்டாங்கனியா? என்னைக் கேட்டா எட்டுங் கனிதான்னு சொல்வேன். :)/

    எட்டாவது கனியெல்லாம் இல்லை... எட்டாதக் கனிதான்!!! விசயங்கள் 8உம் கனி னு சொல்லுறீங்களா... இல்லை, காதல், எட்டுகிற கனிதான்னு சொல்லுறீங்களா? :)

    /அருமை. உன்னைப் பாராட்டுகிறேன். இப்பவும் அப்படியேதானா? இது தெரிஞ்சிருந்தா ஒன்னயக் கையெழுத்துப் போடச் சொல்லிப் பாத்திருப்பேனே. ஆகா!!/

    என்ன ராகவன் கையெழுத்த மாத்த முடியுமா? இப்பவும் அப்படியேதான். ஆனா கையெழுத்துக் கோழிக் கிறுக்கல் மாதிரிதான் இருக்கும் :)

    /அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? அதான் ஆர்வலர் டீபன் பூசல் தருமாமே! :)))) இன்னொரு வாழ்த்துகள்./

    ஹி ஹி நானும்் கொஞ்சம் பாசக்கார பயதான் ;)

    /நல்ல வேலை செஞ்ச. இதுல சிறப்பு என்னது தெரியுமா? கடைசி சிகரெட்னு சொன்னியே...அதான். அது அப்படியே இருக்கட்டும்./

    அது கடைசி சிகரெட்தான். மறுபடி ஆரம்பிக்கிற எண்ணமெல்லாம் இல்லை.

    /ரொம்ப நல்லாயிருந்தது பதிவு. ஐதராபாத்துக்கு வந்தாச்சா? எப்படிப் போகுது?/
    நன்றி ராகவன். வந்தாச்சு. ஆனா சீக்கிரமே பணி/இடம் மாறுகிற முயற்சியில் இருக்கேன்.

    ReplyDelete
  4. / நன்றாக இருந்தது உங்கள் எட்டு. வாழ்த்துக்கள் !/

    நன்றிங்க மணியன்.

    //அப்புறம் ரெண்டு வருசம் சேலத்துல...அண்ணா நூலகம், மாவட்ட மைய நூலகம், ராஜாஜி நூலகம்னு சுத்தி(சுத்திப் படிச்சி)ருக்கேன்//
    நூலகத்தில் சுற்றிக் கொண்டிருந்தால் காதல் பதிவில்தான் வரும் :)//

    வாழ்க்கையைவிட, கவிதையில் மட்டும் காதலிப்பதே நல்லது என்று நினைக்கிறேன் :)

    /உங்கள் கவிதை வரிகளுக்காகவே யாராவது காதல்கொள்ளப் போகிறார்கள், பார்த்துக் கொண்டிருங்கள்./

    பாவம் அவர் :)

    ReplyDelete
  5. வணக்கம் அருட்பெருங்கோ.. பதிவு சூப்பர்.. நா புதுசு.. அந்த கவிதை உங்க கவிதைனு எனக்கு தெரியாது.. ரொம்ப நல்லா இருந்தது. யார் எழுதிருப்பார்கள் என்றரியவே வலையேற்றினேன்..( copyright problem இல்லையே)

    ReplyDelete
  6. தம்பி....தம்பி.. காதல் முரசு... நீ இவ்வளவு நல்லவன்னு அன்னிக்குப் பாக்கும் போது கூடச் சொல்லலீயே... தங்கம்ய்யா நீ தங்கம்... நாங்களும் 8 போட்டாச்சு ஒரு எட்டு எட்டிப் பார்த்துட்டு போ ராசா

    ReplyDelete
  7. //ான். அப்ப‌டியென்ன‌ காத‌ல‌ப் ப‌த்தி எழுத‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம்னு கேட்கிற‌வ‌ங்க‌ளுக்கு : எட்டாக்கனி , கிட்டாக்கனி மேல‌தான எல்லோருக்குமே ஆசை அதிக‌மா இருக்கும்?/


    ஏலேய்,

    இதெய்யலாம் நாங்க நம்பனுமா ??

    ReplyDelete
  8. எட்டு நல்லாருக்கு..
    உங்கள் தமிழார்வம் கண்டு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.

    ReplyDelete
  9. பேர் மாத்தின கதை சுவாரசியம்.

    மிச்ச 138 பேரிலயும் தமிழாளுங்க இருந்தாங்களா? இல்லை, மொத்தமாவே நீங்க ஒருத்தர் தான் தமிழரா? நானும் பத்தாம் வகுப்புல இருந்து தமிழ்ல தான் கையெழுத்து போட்டுட்டு வர்றேன். அதை அடுத்தவங்க ஏறெடுத்துப் பார்த்து புன்னகைக்கிறதுல ஒரு பெருமிதம்.

    பள்ளிக்கூடத்தில பரிசு வாங்கிய நினைவுகள் என்னைக்குமே சுகம் தான்.

    ReplyDelete
  10. சிநேகிதன்,

    /வணக்கம் அருட்பெருங்கோ.. பதிவு சூப்பர்.. நா புதுசு../

    வாங்க வரவேற்கிறோம்..

    / அந்த கவிதை உங்க கவிதைனு எனக்கு தெரியாது.. ரொம்ப நல்லா இருந்தது. யார் எழுதிருப்பார்கள் என்றரியவே வலையேற்றினேன்..( copyright problem இல்லையே)/

    அதனாலென்ன, கவிதை கூட நம்ம பேரையும் சேர்த்து போடுங்க :)

    ReplyDelete
  11. தேவ்,

    /தம்பி....தம்பி.. காதல் முரசு... நீ இவ்வளவு நல்லவன்னு அன்னிக்குப் பாக்கும் போது கூடச் சொல்லலீயே... தங்கம்ய்யா நீ தங்கம்... நாங்களும் 8 போட்டாச்சு ஒரு எட்டு எட்டிப் பார்த்துட்டு போ ராசா/

    எனக்கு வெளம்பரம் பிடிக்காது தல :)
    உங்க எட்டையும் ஒரு எட்டு போய் பாத்தேனே...கருத்தும்(?) சொன்னெனே

    ReplyDelete
  12. ///ான். அப்ப‌டியென்ன‌ காத‌ல‌ப் ப‌த்தி எழுத‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம்னு கேட்கிற‌வ‌ங்க‌ளுக்கு : எட்டாக்கனி , கிட்டாக்கனி மேல‌தான எல்லோருக்குமே ஆசை அதிக‌மா இருக்கும்?/


    ஏலேய்,

    இதெய்யலாம் நாங்க நம்பனுமா ??/

    ராம் அண்ணே,

    உங்களுக்குதான் செட் ஆகிடுச்சு, எப்பவும் போனும் கையுமா அலையறீங்கனு கேள்விப்பட்டேன் :) அதுக்காக எல்லாரையும் உன்ன மாதிரியே நினைக்கலாமா? நானெல்லாம் ரொம்ப சின்னப் பையன்ப்பா!!!

    ReplyDelete
  13. வாங்க முத்துலட்சுமி,

    / எட்டு நல்லாருக்கு..
    உங்கள் தமிழார்வம் கண்டு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு./

    நன்றிங்க... தமிழார்வம் தானா வந்ததுதான்...

    ReplyDelete
  14. வாங்க ரவி,

    / பேர் மாத்தின கதை சுவாரசியம்./

    :)

    /மிச்ச 138 பேரிலயும் தமிழாளுங்க இருந்தாங்களா? இல்லை, மொத்தமாவே நீங்க ஒருத்தர் தான் தமிழரா?/

    100 பேருக்குமேல தமிழ் ஆளுங்க தான்... ஆனா எல்லாருமே ஆங்கிலத்துலதான் கையெழுத்துப் போடுவாங்க...

    / நானும் பத்தாம் வகுப்புல இருந்து தமிழ்ல தான் கையெழுத்து போட்டுட்டு வர்றேன். அதை அடுத்தவங்க ஏறெடுத்துப் பார்த்து புன்னகைக்கிறதுல ஒரு பெருமிதம்./

    என்ன மாதிரியே ஒரு ஆளா :)

    /பள்ளிக்கூடத்தில பரிசு வாங்கிய நினைவுகள் என்னைக்குமே சுகம் தான்./

    கண்டிப்பா!!! அதான் இங்க பதிவு பண்ணிட்டேன் :)

    ReplyDelete
  15. எட்டு திக்கும் பரவட்டும் உன் சாதனைகள் . !
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. என்னடா ரொம்ப நாளா ஆளக் காணமேன்னு எட்டிப் பாத்துட்டே இருந்தேன்!. எட்டு ரொம்ப அருமை அருள்.

    ReplyDelete
  17. / எட்டு திக்கும் பரவட்டும் உன் சாதனைகள் . !
    வாழ்த்துக்கள்./

    வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றிகள் சுந்தர்.

    ReplyDelete
  18. / என்னடா ரொம்ப நாளா ஆளக் காணமேன்னு எட்டிப் பாத்துட்டே இருந்தேன்!. எட்டு ரொம்ப அருமை அருள்./

    நன்றி காயத்ரி...
    உங்கப் பாசக்கார குடும்பத்து ஆட்கள சென்னைல வச்சு சந்திச்சாச்சு!!!

    ReplyDelete
  19. உங்கள் எட்டு நன்றாகவே இருந்தது.
    வாழ்த்துக்கள் அருள்!

    நான் மலேசியாவுக்கு பயணம் செய்ய இருப்பதால் இதில் கலந்து கொள்ள நேரமில்லை. ஆகவே குறை நினைக்காதீர்கள்.

    ReplyDelete
  20. Peelamedu-la entha collegela padicheenga?

    ReplyDelete
  21. / உங்கள் எட்டு நன்றாகவே இருந்தது.
    வாழ்த்துக்கள் அருள்!/

    நன்றி சத்தியா.

    /நான் மலேசியாவுக்கு பயணம் செய்ய இருப்பதால் இதில் கலந்து கொள்ள நேரமில்லை. ஆகவே குறை நினைக்காதீர்கள்./

    குறையொன்றுமில்லை :) உங்கள் பயணம் சிறப்பாக அமைய என் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  22. / Peelamedu-la entha collegela padicheenga?/

    பீளமேட்ல அதத்தவிர வேறெந்த காலேஜா இருக்க முடியும்? ;)

    ReplyDelete
  23. oh. production engg.
    grt...

    ReplyDelete
  24. / oh. production engg.
    grt../

    யெப்பா அருணு நீ யாருப்பா?

    ReplyDelete
  25. am ur super super senior.
    20001 ece. :)

    ReplyDelete
  26. / am ur super super senior.
    20001 ece. :)/
    நானே 2005ல தாங்க வெலிய வந்தேன்...
    நீங்க எத்தன வருசம் சீனியர்???

    அப்படியே ஒரு மெயில் தட்டி விடுங்க ;)

    ReplyDelete