Friday, April 27, 2007

வெளங்காத விசயம் - 5

வணக்கம் நண்பர்களே...

கிட்டத்தட்ட ஒரு மாசத்துக்கு மேல ஆச்சு... தமிழ்மணம் பக்கம் வந்து...

இந்த "வியர்டு திங்சு"னு ஒரு வெளாட்டு ஆரம்பிச்சு நடந்திட்டு இருந்தது..இப்போ எல்லாரும் மறந்தே போயிருப்பீங்க...ஆனா எனக்கு இப்போதான் நேரம் கிடச்சிருக்கு... என்னையும் இந்த ஆட்டத்துக்கு இழுத்த கார்த்திக் பிரபுவுக்கும், இம்சையரசிக்கும் நன்றிய சொல்லிட்டு ஆரம்பிக்கிறேன்...

வியர்டு நா என்னனு எனக்கு நெஜமாவே வெளங்கல... அப்புறம் தான் தெரிஞ்சது அதுவே ஒரு வெளங்காத விசயம்தான்னு... என்னப் பத்தி எனக்கே வெளங்காத ஒரு 5 விசயத்த சொல்லலாம்னு இருக்கேன்... சிரிக்கிறவங்க சத்தம் போட்டுலாம் சிரிக்கப் படாது ;) மேலப் படிங்க...

1. சின்ன வயசுல இருந்து ராத்திரி தூக்கம் வரலன்னா 1,2,3 நு நான் பாட்டுக்கு கண்ண மூடிட்டு எண்ண ஆரம்பிச்சுடுவேன்...அடுத்த நாள் காலையில எழுந்ததும் முந்தின நாள் ராத்திரி கடைசியா எத்தன வரைக்கும் எண்ணினொம்னு யோசிச்சுப் பார்ப்பேன்.. இது வரைக்கும் ஒரு தடவை கூட கண்டுபிடிக்கமுடியல :( இப்பவும் இதே பழக்கம் தான்... எத்தனை வரைக்கும் எண்ணுறோம்னு அடுத்த நாள் கண்டிப்பா தெரியாதுன்னு தெரிஞ்சும் ஏன் இப்படி எண்ணிக்கிட்டு இருக்கேன்னு இன்னைக்கு வரைக்கும் வெளங்கல :)

2. இதுவும் தூக்கம் சம்பந்தப்பட்டதுதான்... தூக்கத்துல நடக்கிற பழக்கம் மாதிரி எனக்குத் தூக்கத்துல யோசிக்கிறப் பழக்கம் இருக்கு :) ஆஃபிசுல ஒரு நாள் முழுக்கப் போராடி வராத லாஜிக் அன்னைக்கு ராத்திரி தூக்கத்துல யோசிச்சு கண்டுபுடிச்சுடுவேன்... அடுத்த நாள் காலையில முதல் வேலையா அத எங்கேயாவது குறிச்சு வச்சிடுவேன்...இது பல தடவ நடந்திருக்கு..(ஒரு நாள் தூக்கத்துல/கனவுல ஒரு காதல் பயணத்துக்கு எழுதறதுக்காக ஒரு கவிதை யோசிச்சு அத அப்பவே செல்போன் வெளிச்சத்துல ஒரு நோட்ல கிறுக்கி வச்சிட்டு தூங்கியிருக்கேன்...அடுத்த நாள் அந்த நோட்ட எடுத்துப் பாக்கும்போது கோழி கிறுக்கின கையெழுத்துல ஒரு கவிதை :) யோசிச்சுப் பார்த்தா முந்தின நாள் கனவுல எழுதினதுன்னு புரிஞ்சது) இது எனக்கு மட்டும் இருக்கா இல்ல நெறைய பேருக்கு இருக்கான்னு வெளங்கல :)

3. பேருந்துல போகும்போது நெறைய பேருக்கு ஜன்னலோர சீட்தான் புடிக்கும்... ஆனா எனக்கு அதுலையும் ஒரு குறிப்பிட்ட சீட்தான் விருப்பம்...எல்லாப் பேருந்துலையும் பின்னாடி படிக்கட்டுக்கு முன்னாடி இருக்கிற ஜன்னலோர சீட்தான் நான் எப்பவும் உட்கார்ற சீட்... ஒரு தடவ கரூர்ல இருந்து கோவை போகும்போது நான் பைய எப்பவும் வைக்கிற எடத்துல (படிக்கட்டுக்கும் நான் உட்கார்ற சீட்டுக்கும் இடையில இருக்கிற சந்துல...அதாவது எனக்குப் பின்னாடி என்னோட பைய வச்சிட்டு நான் ஜன்னல்ல வேடிக்கைப் பார்க்க ஆரம்பிச்சுடுவேன் :) ) வச்சிட்டு விகடன விரிச்சுப் படிக்க ஆரம்பிச்சுட்டேன்...கொஞ்ச நேரத்துலையே என்னோட பைய எடுத்துக்கிட்டு ஒரு திருடர் (என்ன விட வயசுல பெரியவர் போல ;)) எறங்கிப் போயிட்டார்... அப்புறமும் திருந்தாம இன்னமும் ஏன் ஒவ்வொரு தடவையும் அதே சீட்ல உட்காந்துட்டுப் பயணம் பண்றேன்னு எனக்கே வெளங்கல :)

4. எந்தப் பொருள் வாங்கறதா இருந்தாலும் அது கருப்பு கலர்ல இருக்குதான்னு மொதல்லத் தேட ஆரம்பிச்சுடுவேன்... வச்சிருக்கிற செல்போன், பெல்ட், பர்ஸ் முதல் கொன்டு செருப்பு வரைக்கும் எல்லாமே கருப்புதான்...ப்ளாக் டெம்ப்ளேட் கூட முதல்ல கருப்புல தான் இருந்துச்சு...நெறைய பேர் படிக்க முடியலன்னு சொன்னதால கலர் மாத்திட்டேன் ;) நானே கருப்பா இருக்கும்போது எதுக்கு மத்தத எல்லாம் கருப்புக் கலர்ல வாங்கிட்டு இருக்கேன்னு எனக்கே வெளங்கல ;)

5. இதுதாங்க ரொம்பவே யோசிக்க வைக்கிற விசயம்...

திங்கள் முகமென்றும்...
செவ்வாய் இதழென்றும்...
புதன் கிடைத்தாலும் கிடைக்காத பெண்ணென்றும்...
வியாழன் கிரகத்து அப்சரசென்றும்...
வெள்ளிச் சிரிப்பென்றும்...
பெண்ணிடம் மயங்கினால் உனக்குப் பிடித்தது சனி!
வாழ்வில் ஞாயிறு பிறக்க, சுடிதாருக்காக சுயமரியாதை இழக்காதே...

அப்படினு கல்லூரியிலப் படிக்கும்போது காதலிக்கிற/கடலை போடற பசங்களுக்காக தெளிவா(?) சிந்திச்சு அறிவுரை (;)) சொன்ன நான் எப்படி இந்த மாதிரியெல்லாம் உளற ஆரம்பிச்சேன்னு எனக்கே வெளங்கல ;)

இந்த ஆட்டத்துக்கு நான் யார கூப்பிட்றதுன்னு எனக்குத் தெரியல... எல்லாருமே ஆடி முடிச்சிருப்பாங்க... அதனாலப் படிக்கிறவங்க யாராவது இன்னும் இந்தப் பதிவு போடாம இருந்தா தொடருங்க...

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.