Wednesday, November 30, 2005

எனக்குப் போட்டி நானே!

புரியற மாதிரி எழுதியிருந்தா "+" குத்துங்க
இல்லாட்டி "-" குத்துங்க


நேற்றைய என்னை
இன்றைய நான்
வெல்லத் துடிக்கிறேன்...

நாளைய என்னிடம்
இன்றைய நான்
தோற்கப்போவது தெரிந்திருந்தும் !


சந்திப்போம்!

இவர் காதலர் யார்?

அன்பே அதிகாலை வேளையில்
உனக்காகத் தான்
நடக்க ஆர்ம்பித்தேன்

சில நேரம் தென்றலாய்த்
தேகம் தீண்டுகிறாய்

சில நேரம் புயலாய்ப்
புரட்டிப் போடுகிறாய்

வாரி விட்டத் தலைமுடியை
நீ கலைத்து மகிழ்வதையும்

வண்டியில் போகும்போது
நீ உரசி மோதுவதையும்

விரும்பி இரசிக்கிறேன்

உலகின் எந்த மூலைக்குப் போனாலும்
உன் முகம் தான்
உன் ஸ்பரிசம் தான்


நாட்கணக்காய் உண்ண மறந்தாலும்
நொடிப்பொழுதும் உனை மறந்தேனா?

உன்னையே உயிர் மூச்சாகக் கொண்டேன்

சாகும் வரையும் உன்னையே சுவாசித்திருப்பேன்

காற்றே!




Tuesday, November 29, 2005

தாலி

முந்தையப் பதிவை எழுதும்போது இடையில் யோசித்தது....

இரசிக்க முடிகிறதா என நீங்கள் தான் சொல்ல வேண்டும்!


ஈராயிரம் ஆண்டுகள்...
அவிழ்க்க முடியவில்லை
மூன்று முடிச்சு!


சந்திப்போம்!

அடிமையைப் போல...

அந்த மூன்று முடிச்சுக்கள் என் குரல்வளையை நெரிக்கும்
எனத் தெரிந்தும் சம்மதிக்கிறேன் - தாலி கட்டிக் கொள்ள...

வீட்டுச்சிறையின் கைதிக்கான கைவிலங்குதான் அது
எனத் தெரிந்தும் சம்மதிக்கிறேன் - வளையல் போட்டுக் கொள்ள...

பின் தூங்கி முன் எழ வேண்டுமா ? எழுகிறேன்...
கணவனை கடவுளாகத் தொழ வேண்டுமா ? தொழுகிறேன்...

எல்லாப் பெண்களைப் போலவும்
அடிமையாக வாழ சம்மதிக்கிறேன்...

யாரேனும் ஏற்றுக்கொண்டால்...

நன்றியுடன்,
ஒரு விதவை.

Sunday, November 27, 2005

வீரவணக்கம்!!










ஈழ விடுதலைக்கு
உயிர்களை உரமாக்கிய
மாவீரர்கள் அனைவருக்கும்
அஞ்சலி!

படங்கள் : நன்றி - கூகிள்

Wednesday, November 16, 2005

இன்னா செய்தாரை...

திருக்குறளில் எனக்குப் பிடித்தது :

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.

பள்ளியில் நான் புரிந்து கொண்ட பொருள் :

தமக்குத் தீமை செய்தவரை தண்டித்தல் - அவரே நாணும்படியாக அவருக்கு நன்மை செய்துவிடுவதாகும்.

இது மேலோட்டமாக புரிந்துகொள்ளப்பட்டது. பின்னர் எங்கோ நூலகத்தில் படித்தது :

பொதுவாக ஒருவருக்கு நாம் ஒரு நன்மையைச் செய்துவிட்டுப் பின்னர் ஒருமுறை அதைச் சொல்லிக்காட்டினாலும் அந்த நன்மையைச் செய்ததற்கான அர்த்தமேப் போய்விடும்.

அப்படியிருக்க நமக்குத் தீமை செய்த ஒருவருக்கு நன்மை செய்துவிட்டு அதையும் சொல்லிக் காட்டக்கூடாது.

அதனாலேயே வள்ளுவர்,

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்தல்.

என்று சொல்லாமல்,

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.

என்று சொன்னார்.

இன்னா செய்தாரை - (தமக்குத்) தீமை செய்தவரை

ஒறுத்தல் - தண்டித்தல்

அவர்நாண - அவரே நாணும்படியாக

நன்னயஞ் செய்து - (அவருக்கு) நன்மை செய்து

விடல் - (பின்னர், தமக்கு அவர் செய்த தீமையையும், தாம் அவருக்கு செய்த நன்மையையும்) மறந்து விடுவதாகும்.

இந்தக் காலத்தில் தீமை செய்தவருக்கு நன்மை செய்தால், அதற்காக அவர் நாணுவார் என எதிர்பார்க்கலாமா?

சந்திப்போம்!

Tuesday, November 15, 2005

பணம்


  • அம்மா மடித் தூக்கம்

  • ஆற்றுக்குளியல்

  • குடும்பத்தோடு அரட்டை

  • நிலவொளி விளையாட்டு

  • சன்னலோரப் பேருந்து பயணம்

  • தங்கையோடு செல்லச் சண்டை

  • எதிர் வீட்டுப் பெண்

  • வீட்டுச்சாப்பாடு


எல்லாம் அனுபவித்த போது பணம் மட்டும் இல்லை!

இப்போது பணம் மட்டும் கிடைக்கிறது.

பம்பரக் கண்ணாலே!

இப்போது சிலர் "பம்பரக் கண்ணாலே பச்சைக் குத்தும்போது" தான் பத்தாண்டுகளுக்கு முன் என்னுடைய பம்பர அனுபவம் நினைவுக்கு வருகிறது ( பத்தாண்டுக்கு முன்னாடியேவா? என்று சின்னக்கவுண்டரை மனதில் வைத்துக்கொண்டு கேட்காதீர்கள் )...

அப்போது நாங்கள் குடியிருந்த தெருவின் முனை ஒரு விளையாட்டுக்களம் போல இருக்கும். அங்குதான் எங்கள் கில்லி-தாண்டில், பம்பர, ஜல்லி விளையாட்டுப் போட்டிகள் (தெரு விளக்கின்) மின்னொளியில் நடைபெறும். சீசனுக்கு ஏற்றாற்போல் விளையாட்டும் மாறுபடும்.
பம்பர சீசன் வந்துவிட்டால் பக்கத்து மள்ளிய ( மளிகை?) கடையில் புதுசுக் கண்ணாப் புதுசு என்று பல வகை, வண்ணங்களில் பம்பரங்கள் விற்பனைக்கு வந்துவிடும். வகை என்றால் சட்டிக்கட்டை, ஒல்லிக்கட்டை, மூளிக்கட்டை என்று பல வகைகளில் கிடைக்கும். பச்சையை சுற்றி மஞ்சள், சிவப்பை சுற்றி பச்சை, இன்னும் பல என்று வண்ணங்களுக்கும் குறைவிருக்காது.

நான் பம்பரம் விடும் முறையால் எனக்கு சட்டிக்கட்டை ஒத்துவராது. சட்டிக்கட்டை சுற்றும் போது கொஞ்சம் சாய்ந்தாலும் கட்டைத் தரையில் மோதி உருண்டு ஓடி விடும். என்னுடையத் தேர்வு எப்போதும் ஒல்லியாகவும் இல்லாத சட்டியாகவும் இல்லாத முட்டை வடிவக்கட்டைதான்.
வண்ணம் தேர்ந்தெடுக்கும் போதும் கவனம் தேவை! கடையில் பார்க்கும் போது அழகாய்த் தோன்றும் வண்ணம் சுற்றும் போது காணச் சகிக்காது. அதனால் எப்போதும் மற்றவரின் பம்பரங்கள் சுற்றும்போது பார்த்து நல்ல வண்ணத்தைத் தேர்ந்தெடுத்துக் கடைசியாகவே பம்பரம் வாங்குவேன்.

அடுத்த வேலை பம்பரத்துக்கு ஆணி அடிப்பது! முதலில் எல்லோரும் இரும்பு கடையில் ஆணி வாங்கி அதன் தலையை வெட்டி விட்டு பம்பரத்துக்கு அடிப்போம். ஆனால் பிறகு பம்பரக்காரன் ஒருவனின் தேடலில் ஒரு மாற்றுப்பொருள் கிடைத்தது! பீரோக் கம்பெனியில் பற்ற வைப்பதற்குப் பயன் படுத்தும் elctric rod களின் மிச்சம் தான் அது! திருடுவது குற்றம் என்று அந்த வயதிலேயேத் தெரிந்ததால் திருட மாட்டோம். யாருக்கும் தெரியாமல் எடுத்து வந்து விடுவோம்(!).

பம்பரத்துக்கு ஆணி அடிப்பது ஒருக் கலை. வேகமாக அடித்தால் கட்டை இரண்டாகப் பிளக்கும்.
கோணையாக அடித்துவிட்டாலோ மழைப்பாட்டில் ஷ்ரேயா ஆடுவது போல ஒரு 45 டிகிரி கோணத்தில் பம்பரம் சுற்ற ஆரம்பித்து விடும். சரியாக ஆணியை அடித்து விட்டாலும் பம்பரம் முழுமையாகத் தயாரில்லை!

கணினியே வாங்கினாலும் அதற்குப் பொட்டுவைத்து அழகு பார்ப்பது தமிழனின் பழக்கம். பம்பரத்திற்கும் ஒரு பொட்டு இருக்கிறது. அதன் பெயர் - "கொண்டாணி" (கொண்டை ஆணி). அதையும் வாங்கி பம்பரத்தின் உச்சந்தலையில் அடித்து விட்டால் பம்பர வேலை முடிந்தது.

பம்பரம் மட்டும் இருந்தால் போதுமா? (சுகன்யாவும் வேண்டும் என்கிறீர்களா?) சாட்டைக்கும் வேலை இருக்கிறது. சாட்டையை அப்படியேப் பயன்படுத்தினால் வாட்டமாக இருக்காது. ஒரு குளிர் பான பாட்டிலின் மூடியை எடுத்து சப்பையாக்கித் துளையிட்டு அதில் சாட்டையின் ஒரு முனையை சொருகி முடிந்துவிட்டால், சாட்டையைப் பம்பரத்தில் சுற்றிக்கொண்டு பிடித்துக் கொள்ள வசதியாக இருக்கும்.

சின்னப் பசங்களிடம் பிலிம் காட்டுவதற்காகவே பம்பரத்தை தரையில் விடாமலேயே கையில் சுற்ற வைக்க பல நாள் இரவு கண்விழித்துக் கற்றுக் கொண்டேன்!

ஆனால் சின்னக் கவுண்டருக்குப் பிறகு பம்பரம் விடுவதை நிறுத்தி விட்டோம்.

உங்கள் பம்பர அனுபவம் எப்படி?
(நான் இதுவரை பம்பரம் விடும் பெண்களைப் பார்த்ததில்லை)

சந்திப்போம்!

Monday, November 14, 2005

சமையல்!

தமிழ்மணத்துல பதியணும்னா மூணு பதிவு போட்டிருக்கனுமாமே!!

என்ன எழுதலாம்னு (மர)மண்டையக் குடைஞ்சு யோசிச்சதுல சரி நம்மள பல பேர் பல சமயத்துலப் பாராட்டின சமையல் குறிப்பையே எழுதிடுவோம்னு முடிவு பண்ணி இத எழுதியிருக்கேன்! படிக்கிறதோட நிறுத்திடாம உடனே இந்த சமையலப் பண்ணிப் பார்த்துட்டு எப்படி இருந்ததுன்னு மறக்காம சொல்லுங்க!

1.அடுப்பைப் பற்ற வைத்துக்கொள்ளவும்.
2.அகலமானப் பாத்திரத்தில் தேவையான அளவுத் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து விடவும்.
3.சரியாக 26 நிமிடம் 17 நொடியில் பாத்திரத்தை அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.
4.மறக்காமல் அடுப்பை அணைத்து விடவும்.

இப்பொழுது சூடான வெந்நீர் தயார்!

பயன்கள் :

1. சரியான அளவுத் தண்ணீரோடு கலந்து கொண்டால் அதிகாலையில் குளிப்பதற்கேற்ற வெதுவெதுப்பான வெந்நீராகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
2. 47 நிமிடம் 35 வினாடி ஆறவைத்து விட்டால் நோயாளிகளுக்கேற்ற குடிநீராகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
3. அதே சூட்டில் ஒரு துணிமுடிச்சை முக்கி எடுத்துக் கொண்டால் உதைபட்ட நண்பனுக்கு ஒத்தடம் கொடுக்க உதவும்.

செய்முறையில் ஏதேனும் சந்தேகம் இருந்தாலோ/விளக்கம் தேவைப்பட்டாலோ கேட்பதற்குத் தயங்க வேண்டாம்!

சந்திப்போம்!

Sunday, November 13, 2005

இல்லறம்

எனக்குப் படிப்பைக் கெடுப்பதாய்த் தோன்றும்...
தங்கைக்கு இசையை இடையூறு செய்வதாய்த் தோன்றும்...
அப்பாவுக்கு பூஜையையும், அம்மாவுக்குத் தூக்கத்தையும் தொல்லைப்படுத்துவதாய்த் தோன்றும்...

தாத்தாவுக்கு மட்டும் மருந்து கொண்டுபோகத் தோன்றும்...
படுக்கையில் பாட்டியின் இருமல்!

சந்திப்போம்!

Saturday, November 12, 2005

முதல் பூ!

எல்லாருக்கும் வணக்கம் _/\_

உங்கள் கண் இனி கணினியில் தேட...
இதயம் இனி இணையத்தில் இணையப்...
புதிதாய் ஒரு வலைப்பூப் பூத்திருக்கிறது!

வாசம் நுகர வாருங்கள் தேனிக்கூட்டமாய்!
அனுபவத்தைத் தாருங்கள் பின்னூட்டமாய்!!

( பயந்துடாதீங்க மாமே (/மாமீ?) ஒரு கவிதையோட ஆரம்பிக்கலாமேன்னு ஆச அம்புட்டுதேன் )

சந்திப்போம்!